சைவ ஆதினத்தினை அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாதிருந்த ஒரு சூழல் முன்னொரு காலத்திலே இருந்தது.
அதனை மாற்றியமைத்த பெருமை அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கும், சைவ அறிஞர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களையுமே சாரும்.
இன்று ஐ. நா அதிகாரிகள் அவரைச் சந்தித்துள்ளமையும் சைவ மகாசபையினர் அதில் கலந்துகொண்டமையும், சைவத்திற்கு கிடைத்துள்ள அரசியல் பெறுமதியைச் சுட்டிக்காட்டுகின்றது.
எனினும், பௌத்த விகாரைகள், பீடாதிபதிகளிடம் செல்லும்போது வெளிநாட்டுப் பிரமுகர்களிடம் அவர்கள், அங்கு எங்ஙனம் ஒழுகவேண்டுமென்ற நடைமுறைக்கோவை வழங்கப்படுகின்றது. அதனை இனிமேல் சைவசமயத்தார் பின்பற்றினால் சிறப்பு.
சைவ ஆதினத்தின் முன் காலுக்குமேல் கால்போட்டுக்கொண்டு அவர்கள் இருப்பது அவமரியாதை மட்டுமல்ல, நம்பண்பாட்டினை அவர்கள் அறிந்துகொள்ளாதவர்கள் என்றே எண்ணத்தோன்றும்.
பௌத்தபீடங்களில் பேணப்படும் விதிகளை வெளிநாட்டுப் பிரமுகர்கள் மனமுவந்து பின்பற்றும்போது, சைவ ஆதின குருமகாசந்நிதானத்தினைச் சந்திக்கும்போது அவர்கள் பின்பற்றத் தயங்கமாட்டார்கள்.
ஆனால், நம்மவர்களே ஆதினத்திற்குரிய மரியாதையை முறைப்படி வழங்குவதில்லை.
ஆதினத்திற்கு சரிக்குச்சமனாக இருத்தல், ஆதினத்தாருடன் கதைக்கும் போது வாயில்கைவைத்துக் கதைக்காது மாமன் மச்சான் முறைபோல் கதைப்பதுபோல் கதைத்தல், என ஆதின மரபுகளை மதியாதவர்களாகவே பலர் உள்ளனர்.
எமது பாரம்பரியங்களை எமது பண்பாடுகளை நா முதலில் மதிக்க பழகவேண்டும். அப்பொழுதுதான் நமது பண்பாட்டினை மற்றவர்கள் மதிக்க கற்றுக்கொள்வார்கள்.நம்பண்பாட்டினை நாம் மதிக்காவிட்டால், அடுத்தவனும் மதியான்!
பௌத்த துறவிகளை சந்திக்கும் வெளிநாட்டு ராஜ தந்திரிகள்
இதேவேளை பௌத்த துறவிகளை சந்திக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் அவர்களிற்கான மரியாதையினை வழங்குகின்றார்கள். பௌத்த தேரர்களை சந்திக்கும்போது மரியாதை கொடுக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் , ஏன் இந்துமத தலைவர்களை சந்திக்கும்போது அதனை வழங்குவதில்லை? ஏனேனில் பௌத்த துறவிகளிடம் அவர்களை அழைத்து செல்லும்போது துறவிகளிற்கு மரியாதை வழங்கவேண்டும் என்பதை தெரியப்படுத்துகின்றானர்கள்.
ஆனால் நம் இந்துமத தலைவர்களை சந்திக்க ராஜ தந்திரிகள் வரும்போது அவர்களிற்கு நமது பண்பாடுகளையும் பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுக்கின்றோமா? இதில் அவர்களை கூறைகூறுவதற்கு ஒன்றும் இல்லை.
நாம் எப்படி பெரியோர்களிற்கு மதிப்பளிக்கின்றோமோ அதனை பார்த்தே அவர்களும் பழகிக்கொள்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஆகவே முதலில் நாம் எமது பாரம்பரியங்களை மதிக்க கற்றுகொண்டால் வெளிநாட்டவர்களும் மதிக்க கற்றுக்கொள்வார்கள்.





