செம்மணியில் கிருசாந்தியைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்றதற்கு காரணம் படையினர் பாவித்த பாலியல் லேகியமா? தேவராணி எங்கே? வம்பனின் புலனாய்வுத் தொடர் 7
1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி கிருசாந்தி படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, கிருசாந்தி கொலைக்கு முன்னரும், கிருசாந்தி கொலைக்குப் பின்னரும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை நாம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். அதன் 7 வது பகுதி இங்கு தரப்பட்டுள்ளது.
6ம் பகுதியையும் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்…..
யாழில் படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளான சகுந்தலா! வம்பனின் புலனாய்வுத் தொடர் 6
கிருசாந்தி கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவளதும் அவளது தாய் மற்றும் சகோதரனின் சடலமும் தோண்டி எடுக்கப்பட்ட சில நாட்களின் பின், குறித்த சம்பவம் தொடர்பான நிலவரத்தை அறிவதற்காக 1996ம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கப்பகுதியில் அப்போதைய யாழ் பிரதம தபால் அதிபரும் கிருசாந்தியின் உறவினருமான கோடீஸ்வரனை நேரில் சந்திப்பதற்காக, ஊடகச் செயற்பாடுகளுடன் தொடர்புள்ள 2 இளைஞர்கள் அப்போதய பிரதம தபாலகம் காணப்பட்ட கண்டி வீதியில் உள்ள தண்ணீர் தாங்கிக்கு அருகில் தற்காலிகமாக இயங்கிய தபாலக கட்டத்திற்கு சென்றிருந்தார்கள். அந் நேரம் பெரும் பாதுகாப்பு தபாலகத்திற்கு போடப்பட்டிருந்தது.
கிருசாந்தியும் ஞானந்தியும் தமது பாடசாலை நிகழ்வு ஒ்ன்றில் கலந்து கொண்ட பின் எடுத்த புகைப்படம்

அங்கு சென்ற ஊடகச் செயற்பாடுகளுடன் தொடர்புள்ள 2 இளைஞர்களுக்கும் தகவல்கள் வழங்க மறுத்தார் கோடீஸ்வரன். அதன் பின்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என அடையாளப்படுத்தி சென்றவர்களுக்கு தகவல்களை வழங்கினார். தனது மகனும் பல்கலைக்கழக மாணவன் என தெரிவித்த பின் கோடீஸ்வரன் கூறிய பலதகவல்களில் முக்கிய தகவல் என்னவெனின், கிருசாந்தி கொலையில் தொடர்புள்ளவர்கள் உட்பட புங்கங்குளம் மற்றும் அப்பகுதிகளில் காணப்படும் முகாம்களில் கடமையாற்றும் பல இராணுவத்தினர் பாலியல் லேகியத்துக்கு அடிமையானவர்கள் என்றும், பிரணவனின் சைக்கிள் பாகங்களை ஆமியிடமிருந்து பெற்று சைக்கிள்கடையில் கொடுத்தவனை கொழும்பில் இருந்து வந்த புலனாய்வுப் பொலிசார் விசாரணைக்குட்படுத்திய போது, அவன் படையினருக்கு லேகியம் சப்ளை பண்ணுபவன் எனவும் அதற்கு பதிலாக படையினரால் சிகரெட் பண்டல்கள் அவனுக்கு வழங்கப்படுவதாகவும், அவன் அதனை ஒரு வியாபாரமாக செய்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருந்ததாக கூறினார். அக் காலப்பகுதிகளில் படையினருக்கு அரசாங்கமே ஒரு மாத்தது்ககு என குறித்த எண்ணிக்கையில் சிகரட் பண்டல்களை வழங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கிருசாந்தியின் கொலைச் சம்பவத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தவர்களில் கோடீஸ்வரின் பங்கு மிக முக்கியமானது. குறித்த வழக்கில் 2 வது பிரதான சாட்சியாளராக விளங்கிய கோடீஸ்வரன் அதற்காக பல தடவைகள் கொழும்பு நீதிமன்றத்திற்கு சென்று வந்திருந்தார். கிருசாந்தியை கைது செய்து கொடூரமாக கொன்றவர்களுக்கு, அதுவும் தெருவால் சென்ற பலரும் பார்க்கும் வகையில் கிருசாந்தியைப் பின் தொடர்ந்து சென்று, செம்மணியில் கடமையாற்றிய படையினருடன் சேர்ந்து மறித்து கடத்திக் கொண்டு செல்லும் அளவுக்கு, குடாநாட்டு மக்கள் வெளியுலகத் தொடர்புகள் அற்றவர்களாகவும் அரசியல் தொடர்புகள் இல்லாதவர்கள் எனவும் கருதி செயற்பட்டவர்களுக்கு, தாங்கள் செய்த காரியம் பாராளுமன்றம் வரை சென்று கர்ச்சிக்கும் என அவர்கள் கனவிலும் சிந்திக்கவில்லை. அதன் காரணமாகவே பாராளுமன்றத்தில் யோசப்பரராச“சிங்கம்” கர்ச்சித்த சில நாட்களில் செம்மணியிலிருந்த அனைத்து படையினரும் பல்வேறு இடங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாழ் மாவட்ட படைத்தளபதிகளால் மாற்றப்பட்டார்கள்.
யாழில் முன்னாள் அமைச்சர் விஜயகலாவின் கணவனான முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் லேகிய வியாபாரம்
யாழ் ஸ்ரான்லி வீதியில் தற்போது SDB வங்கி உள்ள இடத்தில் மகாலக்சுமி என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் வியாபார நிலையம் காணப்பட்டது. மகேஸ்வரன் அந் நேரத்தில் பெரும் பணக்காரராகவோ அல்லது அரசில்வாதியாகவோ காணப்படவில்லை. ஆனால் படை உயர் அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் போன்றவர்களை தனது கைக்குள் வைத்துக் கொண்டு மிகக் கேவலமான வியாபார நடவடிக்கைகளை தொடங்கினார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியாருக்கு வந்த பொருட்களில் , மகேஸ்வரன் கொண்டு வந்த பெர்ருட்களில் மிக முக்கியமான பெர்ருள் குறித்த பாலியல் லேகியம். ”மதன மோதகம்” என்ற பெயரில் உலாவிய இந்த லேகியம் இப்போது தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் அந்தக் காலப்பகுதில் பெட்டிக்கடைகளிலும் குறித்த லேகியம் தங்கு தடையின்றி விற்பனையாகியது.
பாவனைத் திகதி முடிந்த பெருமளவான சொக்கலேட்டுக்கள், மிறன்டா, கொக்கோகோலா போன்ற சோடா வகைகள் போன்றவற்றையும் கொண்டு வந்து அதன் உறைகளை நீக்கிய பின்னர் விற்பனை செய்து வந்தார் மகேஸ்வரன். சொக்கலேட் பார்களின் மேலுறைகளை நீக்கி துண்டு துண்டாக சிறு சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தார். அவற்றை சாப்பிட வாங்கிய அப்பாவிப் பொதுமக்கள் அதற்கு புழுக்கள் இருந்ததை கண்டு பல தடவைகள் சுகாதார அதிகாரிகளுக்கு முறையிட்டும் வந்தார்கள்.
1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கொழும்பில் ஒரு வெற்றிலை 30 சதம். யாழ்ப்பாணத்தில் ஒரு வெற்றிலை 15 ரூபாவிற்கு விற்பனையான காலம். கப்பலில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் ஏற்றி வரலாம் என்ற கட்டுப்பாடு காணப்பட்ட காலத்தில் மஸே்வரன் நல்லுார் திருவிழாவுக்காக தாமரைப் பூக்கள் தேவை என நல்லுார் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களிடம் கடிதம் வாங்கி கொழும்பிலிருந்து வந்த கப்பலில் நல்லுார் திருவிழாவுக்கு தாமரைப் பூக்கூடைகள் கொண்டு வந்தார். அந்த தாமரைப் பூக்களுக்கு நடுவில் பல்லாயிரக்கணக்கான வெற்றிலைகளையும் கொண்டு வந்த பெருமை மகேஸ்வரனைச் சாரும். ஒரே தடவையில் அந்நேரமே பல லட்சங்கள் உழைத்த ஒருவர் மகேஸ்வரன். அவ்வாறு உழைத்த பணத்திலேயே கப்பல் ஒன்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரச உயரதிகாரிகள் மற்றும் படையினரின் துணையுடன் யாழ்ப்பாண மக்களின் பணத்தை கபளீகரம் செய்துவந்தார்.
தான் செய்து வந்த லேகிய வியாபாரத்தால் அப்பாவிப் பெண்கள் பலரின் உயிரும் கற்பும் பறி போனதை அந்த நேரத்தில் மகேஸ்வரன் அறிந்திருந்தாரா தெரியவில்லை.
புலிகள் என அறிந்து கருவறைக்குள் நுழைந்து தேவாரம் படித்துக் கொண்டு வெளியே வராமல் இருந்த யாழ் நல்லை ஞானசம்பந்தர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
(இச்சம்பவம் 2002ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் புலிகள் அரசியல் நடவடிக்கைக்கு வந்த பின் சில ஊடகச் செயற்பாட்டாளர்களிம் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த சிலர் கூறிய தகவலாகும்)
கிருசாந்தியைக் காணவில்லை… ஞானந்தியைக் காணாவில்லை… வேறு சில பெண்களையும் காணவில்லை.. என செய்திகள் பரவிக் கொண்டிருந்த சமயத்தில் ( உதயனில் அல்ல) யாழ் எப்.எம் என்ற பெயரில் பலாலியிலிருந்து படையினரால் வானொலி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு குடாநாட்டு மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. சுரேஸ்ஆனந் என்ற பெயரில் செயற்பட்ட முஸ்லீம் அறிவிப்பாளர் ஒருவருக்கு குடாநாட்டுப் பெண்களிடத்தில் பெரும் செல்வாக்கு காணப்பட்டது. இசையும் கதையும் என்று இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு யாழ்ப்பாணத்தின் முக்கிய பெண் பிரபலங்கள் தங்கள் ஆக்கங்களை அனுப்பியிருந்தார்கள். அவர்களின் பெயர்களுடன் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது.
வர்த்தகர்களிடையேயும் குறித்த வானொலி பெரும் பிரபலம் அடைந்து வர்த்தக விளம்பரங்களும் அதில் வெளியாகி வந்தன. “சங்கிலியன் படை“ என்ற பெயரில் புலிகள் ஒட்டிய துண்டுப் பிரசுரங்களை அடுத்து வர்த்தக விளம்பரங்களை வர்த்தகர்கள் பின்னர் கொடுக்கத் தயங்கியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த எப்.எம் றேடியோவில் இரவு 7 மணிக்கு செய்திகள் ஒலிபரப்பாகும். குறித்த செய்தியை கொக்குவில் மஞ்சவண்ணப்பகுதி முருகன் கோவில் அருகில் செயற்பட்ட தற்காலிக புலிகளின் முகாமிலிருந்து ஓடியோ கசட்டில் பதிவு செய்து வைத்திருந்து வன்னிப் பகுதி புலிகளுக்கு அனுப்புவது அந் நேரத்தில் செயற்பட்ட புலிகளின் கடமைகளில் ஒன்றாக இருந்தது.
1996 செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் யாழ் எப்.எம் செய்தியில் யாழ்ப்பாணத்தில் 51 வது கட்டளைத் தளபதியான மேஜர்ஜெனரல் ஜெனகபெரேராவை சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு சந்தித்துள்ளது என ஒரு செய்தி வெளியாகியது. குறித்த சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழுவின் சந்திப்பு தமக்கு மிக்க மகிழ்ச்சியளித்துள்ளதாக ஜெனகபெரேரா கூறினார் எனவும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக குறித்த குழுவுக்கு ஜெனகபெரோ கருத்துத் தெரிவிக்கும் போது அவர்களில் பலர் புலிகளில் சேர்ந்திருக்கலாம் என அந்தக் குழுவுக்கு கூறியதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி புலிகளை பெரும் விசனத்துக்கு உள்ளாக்கியது. யார் அந்த சமாதான நல்லெண்ணத்திற்கான மக்கள் குழு என்று கண்டு பிடித்து அதன் தலைவர் யார் என அறிந்த பின் ( தலைவராக செயற்பட்டவர் தொடர்பாகவும் அவர் ஓரிரு மாதங்களில் அந்த அமைப்பிலிருந்து ராஜினமா செய்தமை தொடர்பாகவும் பின்னர் விரிவாகத் தருகின்றோம்) குறி்த்த குழுவை உருவாக்க பாடுபட்டவர்களில் யாழ் ஆயர் மற்றும் நல்லுார் ஆதினம் என்பவர்களும் அடங்குவா் என அறிந்து, ஆயரை அந்த நேரம் ஆயர் இல்லப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக சந்திக்க முடியாத காரணத்தால் பாடசாலைச் சீருடையுடன் நண்பகல் 2 மணியளவில் 18 வயதான இளைஞர்கள் இருவர் நல்லை ஆதீனத்திற்கு சென்றார்கள்.
நல்லுார் பின்வீதியில் காணப்பட்ட நல்லை ஆதினத்தின் வடக்கு வாசல் பகுதியை நோக்கியவாறு சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் ஒருக்களித்து உட்கார்ந்திருந்தார். பாடசாலைச் சீருடையுடன் தன்னை நோக்கி வருபவர்களை வித்தியாசமான பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தார் சுவாமியார். அவருக்கு அருகில் சென்று ” அண்ணையாக்கள் உங்களிடம் சிலவற்றை அறிந்து வரச் சொன்னவர்கள். அதுதான் வந்தோம்” என அவருக்கு கூறிய போது ”யார் அண்ணைமார்? என்ன கேட்டார்கள்? என சுவாமியார் கேட்டுள்ளார்.
” சமாதான நல்லெண்ணத்திற்கான மக்கள் குழு தொடர்பாகவும் அந்தக் குழு என்ன நோக்கத்திற்காக செயற்படுகின்றது என்பது தொடர்பாகவும், எதற்காக ஜெனகபெரேராவை சந்திக்கச் சென்றார்கள் என்பது தொடர்பாகவும் உங்களிடம் கேட்கச் சொன்னார்கள் ” என அவரிடம் சென்ற இரு இளைஞர்களும் கூறிய போது ”யார் தம்பி உங்களை அனுப்பியது” ” படிக்க வேண்டிய வயசில ஏன் இப்படியான தகவல்களை கேட்கின்றீர்கள், எனக்கு அந்த குழு பற்றி எதுவும் தெரியாது” எனக் கூறியவாறு எழுந்த சுவாமியார் அருகில் காணப்பட்ட மேசையில் இருந்த கை மணியை எடுத்து கிலுக்கியபடி கிழக்குப் பக்க வாசலில் காணப்பட்ட கடவுள்களின் மூலஸ்தானத்திற்குள் புகுந்து சென்று சிவபுராணம் படிக்கத் தொடங்கினார்.
நண்பகல் 2 மணிக்கு சுவாமியார் பூசை செய்வதை பார்த்து அங்கு நின்ற உதவியாளர்கள் மற்றும் தெருவால் சென்றவர்கள் கவனத்தை அங்கு குவித்த போது அவ்விடத்தில் நின்றால் இனி சிக்கல் ஏதாவது வரும் என்ற காரணத்தால் குறி்த்த பாடசாலை சீருடை அணிந்த இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
1996ம் ஆண்டு 5ம் மாதத்திலிருந்து கிழக்கு அரியாலையில் வந்து இறங்கியவர்கள் தொடர்பான சில தகவல்கள்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிப் பகுதியிலிருந்து அரியாலை கிழக்கில் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் மே மாதம் தொடங்கி ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் வந்து இறங்கிய அப்பாவிகள் ஒருவர் கூட யாழ்ப்பாணத்திற்கு வந்து சேரவில்லை. அனைவரும் படையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்.
ஏனெனில் 1996ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி சாவகச்சேரி மறுவன்புலவு கிழக்கைச் சேர்ந்த 28 வயதான சுப்பிரமணியம் தர்மராசா மற்றும் 5 பிள்ளைகளின் தந்தையான 30 வயதான சிவப்பிரகாரம் தனபோதன் ( அம்மன் என அழைக்கப்படும் இவரது மனைவி தற்போதும் அப்பகுதியில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்) ஆகிய இருவரும் மறுவன்புலவுக் கடற்கரைப் பகுதியில் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். படையினருக்கு தெரியாதவாறு இவர்கள் பூநகரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வெற்றிலை போன்ற பொருட்களையும் யாழிலிருந்து பூநகரிக்கு பற்றிகள், சைக்கிள் ரியூப் ஒட்டும் சொலிசன், சைக்கிள் ரியூப், ரயர்கள், பெற்றோல் போன்றவற்றையும் கொண்டு சென்று கொடுத்து வியாபாரம் செய்து வந்தவர்கள். அத்துடன் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரவிரும்புபவா்களை அரியாலை கிழக்கில் கொண்டு வந்து இறக்கியும் வந்தார்கள்.
அரியாலை கிழக்கு முனைப் பகுதியிலிருந்து படையினரின் முன்னணிக் காவலரண் பகுதிகளான செம்மணி, நாவற்குழிப் பகுதிகள் கிட்டத்தட்ட 10 கிலோ மீற்றர் துாரத்தில் உள்ளது. அரியாலை முனைப் பகுதியிலிருந்து தனங்களப்பு, மறுவன்புலவுப் பகுதிகள் சுமார் 2 கிலோமீற்றர் துாரத்திலு்ம் விட குறைவான துாரத்திலேயே உள்ளது. அந்த முனையில் வன்னியிலிருந்து வந்தவர்களை இறக்கிவிட்டு மறுவன்புலவுப் பகுதிக்கு செல்வதற்கு குறித்த வியாபாரிகள் தமது படகுகளுடன் காத்திருப்பார்கள். ஏனெனில் சாவகச்சேரி இரயில் பாதையுடன் கூடிய முன்னணிக் காவலரண் பகுதிகளிலிருந்து அடிக்கடி படையினர் மறுவன்புலவுப் பகுதிக்கு ரோந்து வருவது வழமை. அவர்கள் அவ்வாறு ரோந்து வரும் போது அல்லது கடற்கரையை அண்டிய பகுதிகளில் பதுங்கியிருக்கும் போது படகில் வந்தால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என வியாபாரிகளுக்கு தெரியும். இதனால் அவர்கள் குறித்த பகுதியில் வசித்து வந்த வியாபாரிகளின் உறவினர்களின் சிக்னல் வரும்வரை பார்த்துக் கொண்டிருப்பது வழமை. படையினர் யாரும் அப்பகுதியில் இல்லாத நேரத்ததில் கடற்கரைப் பகுதியில் காவோலைகளை கொளுத்தி அவர்களின் உறவினர்கள் சிக்னல் செய்த பின்னரே குறித்த வியாபாரிகள் தமது பிரதேசமான மறுவன்புலவுப் பகுதிக்கு விற்கப்படும் பொருட்களுடன் படகில் வந்து சேருவர். இவ்வாறு சிக்னல் கொடுத்து ஒரு சில நிமிடங்களில் அப்பகுதிக்கு வந்த படையினராலேயே குறித்த நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அதே போல் குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதான சின்னத்துரை அரியதாஸ், 21 வயதான சிவபாதம் சுதாகரனும் அவ்வாறான தொழிலையே செய்து வந்த போது ரயர்கள் மற்று் ஏனைய யாழ்ப்பாணப் பொருட்களுடன் வன்னி செல்ல முற்பட்ட போது மறுவன்புலவு வயல்வெளியில் வைத்து படையினரால் 21.12.1996ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
மறுவன்புலவைச் சேர்ந்த சின்னத்துரை அரியதாஸ் மற்றும் சிவபாதம் சுதாகரன்

சுப்பிரமணியம் தர்மராசாவின் உறவுக்கார குடும்பமான இருபாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 33 வயதான சுந்தரம்பிள்ளை தேவராஜன் 31 வயதான அவரது மனைவி தேவராஜன் தனுசா ஆகியோரும் அவர்களது பிள்ளைகளான 7 வயதான தேவராஜன் சுதர்சன் 5 வயதான தேவராஜன் சங்கவி ஆகியோர் ஒரு குடும்பமாகவும் கோப்பாய் தெற்கைச் சேர்ந்த 41 வயதான ரஜேந்திரன் ரஞ்சிதமலர் ( இவரது கணவன் 1995ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் போது மரணமானவர்) அவரது மகள் 16 வயதான ராஜேந்திரன் வேணுஜா, 13 வயதான ராஜேந்திரன் ரஞ்சிதன் ஆகியோர் இன்னொரு குடும்பமாகவும் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 53 வயதான விஸ்வநாதன் தங்கேஸ்வரன், உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த 57 வயதான பூபாலபிள்ளை யோகேந்திரன், 61 வயதான தர்மலிங்கம் வாசுதேவன் அவரது 30 வயதான மகன் வாசுதேவன் மகேந்திரன் ஆகியோரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பூநகரியிலிருந்து 1996ம் ஆண்டு யூலை மாத நடுப்பகுதியில் அரியாலை கிழக்கில் படகு மூலம் இறக்கிவிடப்பட்டிருந்தனர். இவர்களை அங்கு இறக்கிவிட்ட பின்னரே தர்மராசா படகுடன் மறுவன்புலவுக்கு சென்றார். அவர் அங்கு சென்று சேர்ந்த பின் சில நாட்களில் இருபாலை கிழக்கில் உள்ள தேவராஜனின் பெற்றோரிடம் சென்று ”மகன் வந்தாரா? நான்தான் கொண்டு வந்து அரியாலை கிழக்கில் இறக்கிவிட்டேன்” என கேட்ட பின்னரே தனது மகன் யாழ்ப்பாணத்திற்கு வந்துவிட்டான் என்பதை பெற்றோர் அறிந்தார்கள். அதன் பின்னர் அவர்கள் பல இடங்களிலும் விசாரித்தும் குடும்பமாக வந்த பிள்ளையின் நிலையை அறிய முடியவில்லை. ஆனால் தேவராஜனின் பெற்றோர் தமக்கு வந்து கூறிய தர்மராசாவின் குடிப்பழக்கம் காரணமாக அவன் கூறியதை முழுமையாக நம்பவில்லை. அதன் காரணமாக 2002ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம் வந்து வன்னிக்கு மக்கள் சென்று வந்த போது அங்கு சென்று தேடிய தேவராஜனின் பெற்றோர் தமது பிள்ளையும் குடும்பமும் அங்கேயும் இல்லை என்பதை அறிந்த பின்னரே அவர்கள் ஏக்கமுற்றனர். அதன் பின்னர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டு தமது பிள்ளை குடும்பத்துடன் காணாமல் போனது பற்றி முறையிட்டிருந்தார்கள்.
அதே நேரம் தேவராஜனுடன் சேர்ந்து வந்திருந்த ஏனையவர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்கள் 2002ம் ஆண்டு புலிகளால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைக் குழுவிடமும் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தனர்.
அரியாலை றேடியன் கல்வி நிலைய உரிமையாளரும் ஜே/92 பிரிவு கிராமசேவகருமான சிவமோகனுக்கு நடந்தது என்ன?
முல்லைத்தீவு இராணுவமுகாம் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் பலியான பின் யாழ் குடாநாட்டில் இராணுவத்தினரின் மூர்க்கம் அதிகரித்துக் காணப்பட்டது. குறித்த முகாம் தாக்கி அழிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் நல்லுார் உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் கீழ் ( தற்போது பிரதேசசெயலகம்) ஜே/92 கிராம சேவகர் பிரிவான அரியாலை மேற்குப்பகுதி கிராம சேவகரான 35 வயதான சிவமோகன் தனது கடமைக்குச் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அரியாலை புங்கங்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி அவரை மறித்துள்ளான். சிவமோகன் கிராமசேவகராக இருந்ததுடன் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு முன்னர் 1995ம் ஆண்டு காலப்பகுதிவரை அரியாலை புங்கங்குளம் பகுதியில் தற்போது காணப்படும் சனசமூகநிலையத்தில் றேடியன் கல்வி நிலையம் என்ற பெயரில் ரியூசன் ஒன்றை நடாத்தி வந்தார். அந்தக் கல்வி நிலையம் அந்த நேரம் அரியாலையில் மிகப் பிரபலமாக இருந்தது.
குறித்த முகாம் பொறுப்பதிகாரி சிவமோகனை மறித்து எமது முகாம் வரை சிறிது நேரம் வரவேண்டும். உங்கள் மீது சின்ன விசாரணை ஒன்று உள்ளது. அதனை முடித்த பின் நீங்கள் கடமைக்குச் செல்லாம் என கூறியுள்ளான். இதனையடுத்து சிவமோகன் சைக்கிளில் இருந்து இறங்கி முகாம் பொறுப்பதிகாரியும் கதைத்தவாறு முகாம்வரை நடந்து சென்றதை பலரும் கண்டுள்ளார்கள். அத்துடன் வழியில் மற்றுமொரு கிராமசேவகரிடம் ”தன்னை முகாம்வரை வரச்சொல்கின்றான். நான் அங்கிருந்து வெளியே வராவிட்டால் உடனடியாக உதவி அரசஅதிபருக்கும் எனது அம்மாவுக்கும் அறிவித்துவிடு” என கூறிய பின்னரே பொறுப்பதிகாரியுடன் சென்றுள்ளார்.
அங்கு சென்ற சிவமோகம் அதன் பின் எங்கே எனத் தெரியவில்லை. சிவமோகனை புங்கங்குளம் முகாம் ஆமிக்காரன் பிடித்து வைத்துள்ளான் என மற்றைய கிராமசேவகர் மூலம் அறிந்த சிவமோகனின் தாயார் அந்த முகாமுக்குச் சென்ற போது தாயாரின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து அழுத்தி ”எங்களின் ஆக்கள் முல்லைத்தீவில் கொல்லப்பட்டதற்கு உன்ர பொடியனும் காரணம் ” என அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியதாக தாயார் காணாமால் போனோர் தொடர்பான விசாரணையின் போது முறைப்பாடு அளித்திருந்தார்.
அரியாலை றேடியன் கல்வி நிலைய உரிமையாளரும் ஜே/92 பிரிவு கிராமசேவகருமான சிவமோகன்

சிவமோகனின் அக்காவே பிரபல தமிழ் ஆசிரியையான மீரா அருள்நேசன் அவர்கள். மீரா அருள்நேசனே பின்னர் காணாமல் போனவர்களின் சங்கத்தில் அங்கம் அந்தச் சங்கத்தில் செல்வராசாவுக்குப் பின்னர் தலைவியாகவும் தலைமை வகித்து தனது தம்பிக்காகவும் ஏனைய காணாமல் போனவர்களுக்காகவும் அமைப்பு ரீதியாக செயற்பட்டு அரசாங்கத்துடன் கடுமையாகப் போராடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2020ம் ஆண்டு முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1996ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நேசரத்தினம் தேவராணி எங்கே?

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபணத்தின் அதிகாரியாக விளங்கிய மல்லாகத்தைச் சொந்த இடமாகக் கொண்ட நேசரத்தினம் இடம் பெயர்ந்து தனது குடும்பத்துடன் வன்னி மல்லாவியில் வசித்து வந்தார். அவரின் 22 வயதான மகள் தேவராணியும் அவரது காதலனும் வன்னியிலிருந்து கிளாலிப் பாதையூடாக தென்மராட்சி மந்துவில் பகுதியில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்யும் முடிவில் வந்து சேர்ந்திருந்தார்கள். அந் நேரத்திலேயே தென்மராட்சி படையினரால் கைப்பற்றப்பட்டது. மல்லாவியிலிருந்து வந்து தங்கியிருந்த தேவராணியின் காதலன் தனது காதலியை தான் தங்கியிருந்த நண்பனின் வீட்டிலேயே விட்டுவிட்டு வடமராட்சி கிழக்கு ஊடாக வன்னி சென்றுவிட்டார். அங்கு சென்ற அவர் வேராணியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய புலிகளின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக அந் நேரத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது. மந்துவிலில் தனித்து விடப்பட்டிருந்த தேவராணி யாழ்ப்பாணத்திற்கு மக்கள் செல்லத் தொடங்கிய போது செல்லாமல் அச்சத்துடன் மந்துவில் பகுதியிலேயே சில நாட்கள் வசித்து வந்தார். அதன் பின்னர் குறித்த வீட்டின் அயலில் வாழ்ந்து வந்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதிகளுடன் 1996ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வந்த வேளை நாவற்குழி சோதனைச் சாவடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அங்கேயே தடுத்து வைக்க்பபட்டார். அதன் பின்னர் அவர் எங்கே எனத் தெரியாது புலிகளின் காலத்தில் அவரது பெற்றோர் புலிகளிடம் வந்து முறைப்பாடுகளை கொடுத்திருந்தார்கள்.
தொடரும்

