பளை மருத்துவ அதிகாரி சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான பின்னணி!!
கிளிநொச்சி பளை பிரதேச மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரி
சி.சிவரூபன் நேற்றுமுன்தினம் இரவு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சட்டவிரோதமாகத் தன் வசம் ஆயுதம் வைத்திருந்தார், தமிழீழ விடுதலைப்
புலிகளின் மீளுருவாக்கத்துக்கான முதன்மை செயற்பாடுகளில் ஈடுபட்டார்,
முக்கிய நபர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டம் வகுத் திருந்தார் என்ற
குற்றச்சாட்டுக் களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ்
தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் மருத்துவ அதிகாரி பயங்கரவாதத்
தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரவு 9.30 மணியவில்
பளை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், இரவு 10.30
மணிமுதல் மருத்துவமனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்
சோதனைக்குட்படுத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது.
அதன்பின்னர் அங்குள்ள மருத்துவ அதிகாரி ஒருவரிடம், மருத்துவ அதிகாரி
சிவரூபனின் பொறுப்புக்களை ஒப்படைக்கச் செய்த பயங்கரவாதத் தடுப்புப்
பிரிவினர், மருத்துவமனையின் நடவடிக்கைளில் தம்மால் எந்தப் பாதிப்பும்
ஏற்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்
கொண்டு மருத்துவ அதிகாரி சிவரூபனை அழைத்துச் சென்றனர் என்றும்
கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மருத்துவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம்
பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும்,
விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில்
இந்தக் கைது நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத்
தாக்குதலை அடுத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் அவசரகாலச்
சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
அதன்பின்னர் நாட்டில் பாதுகாப்பு சீரான நிலைமைக்கு வந்துள்ளது, இனிமேல்
அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று அவர் பல தடவைகள்
தெரிவித்திருந்தபோதும், ஒவ்வொரு மாதமும் அரச தலைவரால் அவசரகாலச்
சட்டம் நீடிக்கப்பட்டு வருகின்றது.

