ரணில் தமிழ் மக்களுக்கு ஒரு ஆணியும் பிடுங்க மாட்டார் ~ கருணா சொல்கின்றார் !
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கட்சியின் காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் பொது ஜனபெரமுன கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளோம். இறுதி தீர்மானமாக வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துள்ளோம்.
கடந்த 21 ஆம் திகதி முஸ்லிம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலினால் 200இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் முதலாவதாக எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே இது போன்ற அச்சுறுத்தலில் இருந்து நாட்டைப் பாதுகாப்பது எங்களது முக்கிய கடமையாக இருக்கின்றது. இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பல வாக்குறுதிகளை அள்ளி வீசியதால் மக்கள் வாக்களித்தனர்.
ஆனால் வாக்குறுதிகளை வழங்கிய பிரதமர் ரணிலோ, ஜனாதிபதி மைத்திரியோ தமிழ் மக்களுக்கு ஒன்றைக்கூட செய்யவில்லை. அரசியல் யாப்பு திருத்தப்படும், வடக்கு கிழக்கிற்கான உரிமைகள் வழங்கப்படும் என கூறிக் கொண்டார்களே தவிர எதுவித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
ஜக்கிய தேசியக் கட்சி இன்றுவரை வேட்பாளரைத் தெரிவு செய்யவில்லை. இருந்தபோதும் சஜித் பிரேமதாசவுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அவர் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான தலைவராவே இருப்பார்.
கோட்டாபய ராஜபக்ஷ யுத்தக் குற்றவாளி எனக் கூறலாம். ஆனால் யுத்தம் முடிந்து ஒரு வருடத்தில் அன்று இராணுவத் தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத் பொன்சேகாவிற்கு எதுவித முன் நிபந்தனையும் இல்லாமல் வாக்களிக்கச் சொன்னவர்கள் இன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏன் ஆதரவளிக்க முடியாது?
விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நான் அன்ரன் பாலசிங்கத்துடன் கலந்துகொண்ட காலத்தில் அன்ரன் பாலசிங்கம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டிலே ரணில் ஒரு குள்ள நரி என்று வெளிப்படையாக தெரிவித்தார். எனவே ரணில் ஒருபோதும் தமிழர்களுக்கு எதையும் செய்யமாட்டார். அவர் அந்த நரித்தனத்தை தான் தற்போது காட்டி வருகின்றார்.
அவரின் பின்னால் நாங்கள் அணி திரள்வோமாக இருந்தால் மீண்டும் எங்கள் தமிழ் பிரதேசங்கள் இழந்த பிரதேசங்களாக மாற்றப்படும் முஸ்லிம் அரசியல் ஆதிக்கம் அதிகரிக்கும். தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்க கூடிய ஒருவரையே தெரிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

