புதினங்களின் சங்கமம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் 5ம் விடுதியில் சிகிச்சை பெற்றவருக்கு நடந்தது என்ன?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
கடந்த 12.04.2025 அன்று எமது தந்தையார் கடுமையான காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.05ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து 01.05.2025 வரை சிகிச்சை பெற்றார். அந்த விடுதியின் வைத்திய நிபுணராக எஸ்.நிசாந்தன் காணப்பட்டார். அவருக்கு கீழ் பிரதானமாக மூன்று வைத்தியர்கள் மற்றும் ஐந்து தாதியர்களும் மூன்று சிற்றூழியர்களும் சுழற்சி அடிப்படையில் கடமை ஆற்றி இருந்தார்கள்.தந்தையாரின் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இரத்தத்தில் நிறைய கிருமித் தொற்று உள்ளதாக கண்டறிந்தார்கள். அதற்கான சிகிச்சை செய்யத் தொடங்கினார்கள். சேலைன்,கிருமித் தொற்றை அழிக்கும் திரவம்,அன்ரிபயோரிக் மாத்திரைகள் வழங்கப்பட்டது.அங்கேயே ஸ்கான் மற்றும் எக்ஸ்ரே எடுத்தார்கள். ஒவ்வொரு உடல் பகுதிகளும் ஸ்கான் செய்யப்பட்டது.பல் வலியும் வர அங்கேயே பல் வைத்தியரை அணுகி பல்லும் பிடுங்கப்பட்டது. காய்ச்சலோ விடுவதாக இல்லை. ஆனால் ஸ்கான் ,எக்ஸ்ரே அறிக்கை சாதாரணம் என்றே வருகின்றது.எக்கோ செய்யும் வசதி அங்கே இல்லாமையால் தந்தையாரை அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்று வந்தார்கள். காசநோய் கிருமியாக இருக்கலாமா என ஊகித்து பண்ணை வைத்திய சாலைக்கு ஆம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டு சென்று வந்தார்கள். இரண்டு அறிக்கைகளும் சாதாரணம் என்றே சொன்னார்கள்.மேலும் இரத்தத்தை எடுத்து பரிசோதனேக் கூடத்தில் ஒரு வாரமாக வைத்து கிருமி வளர்கின்றதா என பரிசோதித்து பார்க்கும் வசதி அங்கே இல்லாததால் தந்தையாரை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்து சென்று வந்தார்கள்.இதன் அறிக்கை சற்று பிரச்சினைக்குரியதாக உள்ளது என்பதை கண்டறிந்தனர் . அதற்குரிய சிகிச்சை அளித்தனர்.கிருமித் தொற்றின் அளவு குறைந்து காய்ச்சலும் குறைந்து விட்டது.கிருமித் தொற்றின் மூலத்தை அறிய சி.ரி ஸ்கான் செய்து பார்க்க வேண்டும் என்றார்கள். அங்கே அந்த வசதி இல்லாத நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்து சென்று சி.ரி ஸ்கான் செய்து மீண்டும அழைத்து வந்தனர். அந்த அறிக்கையில் நுரையீரலில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது. நீர்க்கட்டியை ஊசியின் மூலம் குற்றி எடுக்க வேண்டுமா என்பதை உறிதிப்படுத்த அங்கேயே மீண்டும் ஒரு வாரம் கழித்து ஸ்கான் செய்து பார்த்தபோது தெய்வாதீனமாக அந்த நீர்க்கட்டி உறைந்து விட்டது. நீர் குற்றி எடுக்க தேவையில்லை என்றார்கள். சுமார் இருபது நாட்கள் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்று காய்ச்சல் குணமடைந்து இப்போது வீடு திரும்பி உள்ளார்.தந்தையாரை மட்டுமல்லாது அங்கே சிகிச்சை பெற வந்த அனைத்து நோயாளரையும் மிகவும் கரிசணையுடன் வைத்தியம் செய்தார்கள்.ஐந்தாம் விடுதியில் கடமை ஆற்றிய வைத்திய நிபுணர், வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் சிறந்த அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு கடமை ஆற்றியதை நேரடியாக கண்டுகொள்ள்க் கூடியதாக இருந்தது.அத்தோடு அம்புலன்ஸ் வண்டி சாரதியும் அர்ப்பணிப்பான சேவையை இடையிடையே வழங்கி இருந்தார்.மிக முக்கியமாக எமது சென்.ஜோன்ஸ் கல்லூரி தந்த பாடசாலை நண்பன் பெஞ்ஜா என அழைக்கப்படும் பெஞ்சமின் பெனடிக்ற் Benjamin J Benedict அங்கே வைத்தியராக கடமை ஆற்றி இருந்தான். அவனுக்கும் நன்றிகள் . அவன் நோயாளிகளை மிகுந்த அக்கறையோடு வைத்தியம் செய்திருந்தான். அவனை அந்த விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் சிலர் அவனது தோற்றத்தை வைத்து தென்னிந்திய பாடகர் பாலசுப்பிரமணியம் வருகிறார் என்று நகைச்சுவையாக சொல்வார்கள்.அத்தோடு இரவு வேளையில் விடுதியின் வெளிச்சம் போதுமானதாக அமைந்திருக்கவில்லை.மேலும் விடுதியின் கழிப்பறைகள் தான் சற்று துப்பரவற்ற நிலையில் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.தொடர்ச்சியான பராமரிப்புத் தன்மை குறைவாக இருந்தது.இருப்பினும் சிகிச்சை பெறுகின்ற நோயாளருக்கும் பொறுப்பு உண்டு.அவர்களும் அங்கே இயன்ற வரையில் தண்ணீரை ஊற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.இப்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசால முன்னரைப் போல் ஊடகங்களில் வந்தது போல் அல்லாமல் ஒப்பீட்டளவில் சிறந்த சேவையை வழங்கி வருகின்றது. கொடையாளர்கள் இருப்பின் இன்னும் சில அவசியமான வைத்திய தொழில் நுட்ப உபகரணங்களை வழங்கி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சேவையை முன்னோக்கி நகர்த்த உதவி புரிய வேண்டும்.
நன்றி
கைதடியூர் நி.ஹரன்.
01.06.2025