யாழில் இருப்பதற்கு வீடு, காணி இல்லை!! ஜனாதிபதியிடம் கேட்டு இளம் குடும்பம் நடைப்பயணம்!! புகைப்படங்கள்
இங்கு நாம் செய்தியாக இதை பதிவு செய்வதற்கு முன் இந்த குடும்பத்திற்கு யாராவது உதவ முன் வந்தால் யூரியூப்பர்கள் மூலமாகவோ அல்லது வேறு அறக்கொடை நிறுவனங்கள் ஊடாகவோ உதவி செய்வதைத் தவிருங்கள். எல்லோரும் பச்சைக் கள்ளர்கள். உங்களது உதவிகள் உங்களது உறவினர்கள் அல்லது அயலவர்கள் அல்லது நண்பர்கள் ஆகியோரில் நம்பிக்கை மிக்கவர்கள் மூலமாக செய்ய முற்படுங்கள். அத்துடன் இந்த குடும்பத்தின் தலைவனான இளைஞனின் தனிநபர் நடத்தைகள் தொடர்பாக ஆராய்ந்து பாருங்கள். அவன் போதைப் பொருள் பாவிப்பவனா? அல்லது குடிகாரனா? என்ன தொழில் செய்கின்றான்? அவனது மனைவி என்ன செய்கின்றார்? இருவரது திருமண வாழ்க்கை எவ்வாறு ஆரம்பமானது ? என்பவற்றை எல்லாம் மிக நுணுக்கமாக ஆராயுங்கள். அதன் பின் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக அவர்களுக்கு உதவுங்கள்… நீங்கள் செய்யும் அந்த உதவி உங்களின் வாழ்நாள் முடிந்த பின்னரும் புண்ணியமாக உங்களுடன் தொடந்து வரும்……
அதே வேளை ஆளுநர் கூறுகின்றார், பிரதேசசெயலாளர் உதவுகின்றார் என்று தெரிவிக்கும் அவர்களது கருத்துக்களை கருத்தில் கொள்ளாதீர்கள்… அரச உதவி குறித்த குடும்பத்தைச் சென்றடைவதற்குள் அவர்கள் சில வேளை வயது முதிர்ந்து இறந்துவிடவும் கூடும்…
செய்தி இதுதான்
குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை இளங் குடும்பத்தினர் யாழிலிருந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஏழு வயதான ஆண் பிள்ளை மற்றும் ஆறு வயதுடைய பெண் பிள்ளையுடன் கணவன், மனைவி நால்வராக குறித்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (06) மாலை அச்செழு, அச்சுவேலியில் இருந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவின் கவனத்திற்கு சென்றடையும் வரை நடை பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக நடைபயத்தை ஆரம்பித்த இ.கலீபன் தெரிவித்தார்.
இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளனர்.
இதன் போது ஆளுநர் நா. வேதநாயகன் இவர்களுக்கான காணியை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு மருதங்கேண பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தியைத் தொடர்பு கொண்டு ஆவண செய்யுமாறு கோரியுள்ளார்.
ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய மருதங்கேணி பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

