புதினங்களின் சங்கமம்

தேங்காய் ஏற்றுமதி செய்ய முடியாமல் தடுக்கும் ஆமிக்காரன்கள்!! ரவிகரன் பாராளுமன்றில் பாய்ச்சல்!

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தெங்குப் பயிற்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அரச படைகள் அபகரித்து வைத்துக்கொண்டு இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்போது முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் அதிகளவு தெங்குப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும், அக்காணிகளின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த காணிகள் இராணுவத்தின் பிடியிலிருந்து உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05.02.2025) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்திலே நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில், தேங்காய் ஏற்றுமதி செய்வதற்கு இடையூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர் இன்னமும் விடுவிப்புச் செய்யவில்லை.

புதிய ஆட்சியின் பின்னர் வடக்கு கிழக்கில் ஒருசில இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இன்றளவில் பலநூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், மக்களின் வாழ்வாதார நிலங்கள் படையினரின் வசமே உள்ளது.

பூர்வீக நிலங்களை இழந்து அகதிகளாக இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர்களின் அரவணைப்பிலுமே இவர்களின் வாழ்க்கை கழிகின்றது.

போர் மௌனித்து பதினைந்தாண்டுகள் ஆகியும்கூட இன்னமும் அகதிகளாக நாட்டின் குடிமக்கள், தமிழ் மக்கள் வாழும் அவலநிலையை எண்ணிப்பாருங்கள். தமிழர்களை அவர்களின் வாழிடங்களிலேயே வாழவிடுங்கள்.

இவற்றில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் கேப்பாபிலவு, புதுக்குடியிருப்பு மக்களின் அவலநிலை இன்னும் தீர்ந்தபாடில்லை. அதிலிருந்து மீண்டவர்கள் சிலர். இன்னும் 54குடும்பங்கள் தங்களைத் தங்களுடைய பூர்வீக இடத்தில் குடியமர்த்த மாட்டார்களா? என்ற ஏக்கத்தோடு இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

தங்களுடைய சொந்த இடத்தில் இருந்தபோது எந்தக் குறையும் தங்களுக்கு இல்லை. வளமான பூமி, ஒருபக்கம் ஆறு அதனால் மீன், இறாலுக்கு பஞ்சமில்லை. தங்களுடைய காணியில் குடியிருப்பு நிலம் தவிர்ந்த மிகுதி நிலத்தில் காலங்களுக்கேற்ப பயன் தரக்கூடிய தோட்டச்செய்கை, வயல்கள், இதுதவிர தென்னைகள் தாராளமாக ஒவ்வொரு காணிகளிலும் உண்டு, இன்றைய தேங்காயின் விலை மிகமிக அதிகம். எண்ணிப்பாருங்கள் மக்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்.

இப்படி சகல விதத்திலும் தங்களின் பூர்வீக காணிகளில் பயன்பெற்று வாழ்வாதாரத்தை ஈடுசெய்து வாழ்ந்து வந்த குடும்பங்கள், தற்போது மிகவும் நொந்து போயுள்ளார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்ட 54குடும்பங்களின் 55 ஏக்கர் நிலம் விடுபடாமல் இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. இதில் சில காணிகள் பலத்த நில மீட்புப் போராட்டங்களின் பின்புதான் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டன.

அதேபோல அந்த மக்களின் பிரதிநிதியாகக் கேட்கின்றேன். 54குடும்பங்களின் காணிகளையும் விடுவிப்புச் செய்யுங்கள். பொறுப்பாக இருக்கும் அமைச்சுக்கள் இந்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x