புதினங்களின் சங்கமம்

JVP இன் நடவடிக்கைகள் மணமகள் இல்லாத முதலிரவா ? தேனிலவில் சுயஇன்பமா?

வட்ஸப் குழுமமொன்றில் இட்டபதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..

நீ சக்க போடு போடு ராஜா ! உன் காட்டில மழை பெய்யுது…..”
JVP இன் நடவடிக்கைகள் மணமகள் இல்லாத முதலிரவா ?
வாக்காளர்களுடனான தேன் நிலவுக் காலம் முடிந்துவிட்டதா?
-ஆய்வு-

“எதிர்பார்த்ததைப்போல அரசால் அரசியல் கைதுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
அரசியல் கைதிகள் எவருமில்லை; விடுவிக்கவும் முடியாது என்றவர்கள் நானும் ரெளடிதான் என்கிற வடிவேலின் நகைச்சுவைபோல நாங்களும் அரசியல் கைதிகள்தான் எனக் கதறவும் கூடும்.
11 கோவைகளை முதற்கட்டமாக வழக்குத்தாக்கலுக்காக சட்டமாதிபர் திணைக்களத்துக்கு காவற்றுறை திணைக்களத்தால் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 4 கோவைகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. சட்டமாதிபர் திணைக்கள அறிவுறுத்தலின் கீழ் கைதுகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமன்றி
“எள் ஏன் காய்கிறது எண்ணெய்க்கு, எலிப்புழுக்கை ஏன் காய்கிறது கூடக் கிடந்த குற்றத்திற்கு” என்பதுபோல அரச உயர் அதிகாரிகளும் கைது பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
கைதாகவுள்ள அரச அதிகாரிகளை 3 வகையாக பிரிக்கலாம். முதலாவது வகை திருட்டுகளுக்கு மூளையாக அரசியல்வாதிகளுடன் சேர்ந்தியங்கிய கூட்டுக்களவாணிகள், இரண்டாவது வகை தமது பதவிக்காக தாம் திருடாமல் திருட்டை கண்டும் காணாமலும் துணைபோனவர்கள். மூன்றாவது வகை நடப்பது என்னவென்று தெரியாமல்/ அறியாமல் நம்பிக்கையில் கடமைபுரிந்து ஏமாற்றப்பட்டவர்கள். கடைசி வகையானவர்கள்தான் பாவம். அவர்கள் கைதாகும் வரை ஏன் கைதாகிறோம் என தெரியாமலேயே சிறை செல்லும் அப்பாவிகள்.

இதற்கு ஒரு உண்மைக் கதை ஒன்றைக் கூறுகின்றேன். ஒரு கூட்டுத்தாபனத்தில் நடந்த கொடுப்பனவு ஒன்று முறைகேடானது என குற்றஞ்சாட்டி அரசியல் பழிவாங்கலுக்காக அதற்கான அமைச்சர்,
பணிப்பாளர், கணக்காளரை ஆகியோரைக் கைது செய்ய முடிவெடுக்கப்பட்டதை அறிந்து அமைச்சரும் அவரின் நண்பரான பணிப்பாளரும் சட்ட ஆலோசனை பெறுவதற்காக தலைமறைவாகிவிட்டார்கள். ஆனால் இது எதுவும் தெரியாத கொடுப்பனவுக்குரிய நிபந்தனைகளின் திருப்தியின் கீழ் காசோலையில் இரண்டாம் கையொப்பம் இட்டதற்காக அப்பாவி கணக்காளரை வீட்டில் வைத்து கைது செய்து வெலிக்கடைச் சிறையிலடைத்தார்கள். ஆனால் அந்தக் கொடுப்பனவுக்கான துறைசார் அமைச்சர், பணிப்பாளர் நிதியமைச்சர் மற்றும் அமைச்சரவை அனுமதிகள் யாவும் பெறப்பட்டு கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்ததால் அந்தக் கணக்காளர் விடுதலையானார். அமைச்சர் வழக்குச் செலவை கணக்காளரின் நேர்மைக்காக மீளளித்துமிருந்தார்.செய்யாத குற்றத்திற்காக சிறை செல்வதைப்போன்ற கொடுமை வேறெதுவுமில்லை.”

அது எனது நண்பர் வட்ஸப் குழுமத்தில் இட்டபதிவு….

அவர் இட்ட பதிவைப் பார்த்தபோது பாரத விலாஸ் திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்பும் அந்த நடிப்பில் T.M செளந்தரராஜன் பாடிய “சக்க போடு போடு உன் காட்டில மழை பெய்யுது….”
பின்னணிப் பாடலும் தான் ஞாபகம் வருகிறது…..

அந்தப் பாடல் காட்சி போல JVP இன் கைது நடவடிக்கைகள் மணப்பெண் இல்லாத முதலிரவு போன்றதாக மாறிவிடக்கூடாது என்பது “System Change” இன் தத் து வார்த்தத்தை உண்மையில் விளங்கி வாக்களித்த வாக்காளர்களது கருத்தாகும். ஏற்கனவே வாகன விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் முச்சக்கர வண்டிகள், தனியார் பேரூந்துகள் முதலியவற்றில் அலங்காரப் பொருத்துக்களை அகற்றும் நடவடிக்கையை “Clean SriLanka” வேலத்திட்டமெனக் கூறி ஆரம்பித்தபோது நடன்தவையும் தனியார் போக்குவரத்துத் துறையினர் வேலை நிறுத்தத்தில் குதிக்க முற்பட்டமையும் எமக்குத் தெரியும். போக்கு வரத்து விபத்துக்களைத் தடுக்கவேண்டும் என்றால் போதை ஒழிப்பு வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக வாகனச் சாரதிகள் போதையில் சாரதி வேலை செய்கிறார்களா என்பதைத் தான் பிரதானமாக கருத்தில் எடுத்திருக்கவேண்டும்…..அதன் கருத்து யாதெனில் Clean Sri Lanka வில் போதைவஸ்த்து மாபியாக்கள், போதைவஸ்த்து வியாபாரிகள் முதலியவர்கள் மீதல்லவா நடவடிக்கைகளைத் தொடங்கி, சாரதிகளின் போதைப் பாவனையைக் கண்டு பிடிக்க நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஏன் அது நடக்கவில்லை….சமூகத்தின் ஜன நாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு அதைச் செய்திருக்கலாமே…..!

சாரதிகள், சிற்றூழியர்கள், தொழிலாளிகள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வரை போதை சமூக மயப்பட்டுள்ளது. இதற்கு இப்போதுள்ள JVP அரசாங்கம் காரணமல்ல. முந்திய அரசாங்கங்களே பொறுப்புச் சொல்லியிருக்கவேண்டும் ஆனால் தொடர அனுமதிக்கமுடியாதல்லவா?

இப்பொழுது இலங்கைச் சமூகங்களின் கவனத்தை ஈர்த்த பிரச்சனை ஒன்று யாழ்ப்பாணத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது. மது போதையிலும் ஏனைய போதைகளிலும் சட்டத்திற்கும் ஒழுக்க த் தி ற் கு ம் மாறாக முரணாகச் செயற்பட்ட சில மாணவர்களை திருத்தும் நோக்குடன் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப விசாரணை, 2ம் கட்ட முறையான விசாரணை, ஒழுக்காற்றுக் குழு விசாரணை ஆகிய மூன்று விசாரணைகளிலும் குற்றம் செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்ட சில மாணவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனையை வழங்கும் தீர்மானத்தை யாழ். பல்கலைக்கழகத்தின் கவுன்சில் வீட்டோ( இரத்து) செய்திருக்கிறது. அதாவது பல்கலைக் கழக கவுன்சில் என்பது அப் பல்கலைக்கழக துணைவேந்தரை தலவராகக் கொண்டு அப்பல்கலைக் கழகத்தின் பீடாதிபதிகள்( Deans) , மற்றும் பல்கலைக்கழக த் து ள் பணியாற்றாத சமூகத்தின் நிபுணர்கள், அறிவாளிகள் ,சமூக சமயத் தலைவர்களைக் கொண்ட அப் பல்கலைக்கழகம் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதில் உறுதியான பங்களிப்புச் செய்யும் ஓரளவு சுயாதீனமான கட்டமைப்பாகும். மேற்படி மாணவர்கள் மீதான நடவடிக்கைகளை யாழ். பல்கலைக்கழகத்தின் கவுன்சிலில் சில துறைசார் பெரியவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதில் ஏனைய கவுன்சில் உறுப்பினர்கள்( தலைவர் உட்பட) மெளனம் காத்துள்ளனர். இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து போதையை ஒழிக்கவேண்டும் என்பதில் அப்பல்கலைக்கழக சகல பீட மாணவர் ஒன்றியங்களும் கல்விசார் உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களும் ஜன நாயக ரீதியாக போராட்டத்தில் குதித்துள்ளன. ஒழுக்க விசாரணைகளில் குற்றம் செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்ட மாணவர்களுக்கு நடவடிக்கை எடுத்து அவர்களை உணரச் செய்து திருத்தி நல்வழிப்படுத்துவதில் கவுன்சிலின் சில பெரியவர்கள் தடையாக இருப்பதை எதிர்த்து யாழ்.பல்கலைக் கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சுப்பிரமணியம் ரகுராம் தனது பீடாதிபதிப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். அவரது பதவி விலகலை துணைவேந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. துணைவேந்தரும் அப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் தொழிற்சங்கமும் மாணவ ஒன்றியங்களும் அவரை மீண்டும் பீடாதிபதிப் பதவியை ஏற்குமாறும் தாங்கள் அனைவரும் இணைந்து யாழ்.பல்கலையை போதையற்ற கல்விக் களமாக மாற்றுவதற்காகவும் யாழ் சமூகத்தை போதையற்ற சமூகமாக மாற்றவும் ஜன நாயக வழியில் போராட உறுதி பூண்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

இந்தக் கட்டத்தில் தான்…..இவ்வாறான கட்டங்களில் தான் JVP அரசாங்கத்தின் உண்மை முகத்தை அவர்களின் System Change மற்றும் Clean Sri Lanka வேலைத்திட்டங்களில் நாங்கள் பார்க்கப்போகிறோம்…. போதை வஸ்த்துப் பாவனை இலங்கையின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாகவே சமூக மயப்பட்டு சாதாரணமயப்பட்ட புற்று நோயாகி உள்ளது. இதில் மிகப்பெரிய உண்மையொன்று உள்ளது. அமெரிக்க மயப்பட்டவர்கள், மேற்கத்தய மயப்பட்டவர்கள் பல்கலைக்கழகங்களின் கல்விசார் அணியிலும் கவுன்சில், செனட் போன்ற கட்டமைப்பு க் களிலும் இருக்கிறார்கள். கல்விசார் அணியில் உள்ள ஐரோப்பிய, அமெரிக்க மயப்பட்டவர்களை தவிர்த்தல் உடனடியாகக் கஸ்டம். ஆயினும் ஐரோப்பிய, அமெரிக்க மயப்பட்டவர்களை இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கவுன்சில் களுக்கு அரசியல் கட்சிகள் சிபாரிசு செய்யும் போது மிகக் கவனமாக மதிப்பீடு செய்து சிபாரிசு செய்யவேண்டும். அவர்களை வேறு பொருத்தமான துறைகளில் அக்கட்சிகள் பயன்படுத்தலாம். மேலும் ஐரோப்பிய, அமெரிக்க மயப்பட்டவர்கள் அந்த நாடுகளின் அளவு கோல்களில் இலங்கை மாணவர்களை அளக்க முற்பட்டுள்ளனர் என்பது யாழ். பல்கலைக்கழக மாணவர் மீதான ஒழுக்காற்று விடயத்தைத் தடுத்ததில் புரிகிறது…..ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளின் சமூக- சட்ட சூழலும் அவ்வாறு பிறழ்ச்சியுறும் மாணவர்களைக் கையாளுவதற்கான கட்டமைப்புக்களும் அவர்களின் சமூக பொருளாதார அபிவிருத்திச் சூழலுடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் சமூக- பொருளாதார , சமூக- சட்ட சூழலும் வெவ்வேறானவை. இவ்விடயத்தில் JVP அரசின் அரசியல் ஸ்திரப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் போக்கு ஐரோப்பிய, அமெரிக்க மயப்பட்டவர்களால் தங்களை அறியாமலேயே ஏற்படுத்தப்படலாம். ஆனால் அவர்கள் தங்களை சட்டம் படித்த ஜன நாயக வாதிகளாகவோ, மார்க்ஸீயர்களாகவோ தான் காட்டிக்கொள்வார்கள்…..

இலங்கைச் சமூகத்தில் விஞ்ஞான பூர்வமான ஆராயும் திறனை வளர்க்கவும் சிந்தனை உருவாக்கத்தை முற்போக்காக மேம்படுத்தவும், சித்தாந்தத் தெளிவை உருவாக்கவும் வேண்டுமானால்….
மூன்று தளங்களில் தான் வேலத்திட்டங்கள் நடைபெறவேண்டும்…

1) அரசியல் கட்சி ( JVP மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள்)
2) இலங்கைப் பாடசாலைகள், இலங்கைப் பல்கலைக்கழகங்கள்(தனியார் மற்றும் அரசு நடத்துபவை)
3) தனியார் மற்றும் அரசு நடத்தும் ஊடக நிறுவனங்கள்

இந்த மூன்று கட்டமைப்புக்களுக்குள்ளும் ஐரோப்பிய, அமெரிக்க மயப்பட்டவர்களின் வகிபாகம் இடையறாது சட்ட பூர்வமாகவும் ஜன நாயக ரீதியாகவும் கண்காணிக்கப்
படவேண்டும்.

இம்மூன்று தளங்களையும் ஜன நாயக விழுமியங்கள் பாதிக்கப்படாத வகையில் நிர்வாக ரீதியாக, ஒழுக்க ரீதியாக, சட்டரீதியாக சுத்தப்படுத்தவேண்டும். அவ்வாறு சுத் தப்படுத்தினால் மட்டுமே
இலங்கைச் சமூகத்தில் விஞ்ஞான பூர்வமான ஆராயும் திறனை வளர்க்கவும் சிந்தனை உருவாக்கத்தை முற்போக்காக மேம்படுத்தவும், சரியான சித்தாந்தத் தெளிவை உருவாக்கவும் முடியும்.

ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகள் அனைவருக்கும் – நாட்டின் Executives, Legislators, வெளி நாட்டு வர்த்தக முதலீட்டுக்காகவும், உள் நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு முதலிடவும் வந்த Foreign Agencies, உள் நாட்டின் பெரிய வர்த்தகர்களிலிருந்து சிறிய வர்த்தகர்கள் ஆகிய தரப்புக்களின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு இருந்தது…. இருக்கிறது…..

கடந்த ஜனாதிபதித் தேர்தல், பாரளுமன்ற தேர்தல் ஆகியவற்றின் தபால்மூல வாக்களிப்பைப் பார்த்தால் பெரும்பான்மை உயர் அரச அதிகாரிகளும், அரச ஊழியர்களும், பொலிஸாரும் முப்படையினரும்….
அவர்களின் குடும்பத்தினரும் JVPக்கு பெரும்பான்மையான அளவில் வாக்களித்திருந்தனர்.

அத்துடன் விவசாயிகளும் கடல் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் போதிய வாக்குகளை வழங்கினர்.

அத்துடன் சமூகத்தில் என்ன பாங்கு இருக்கிறதோ அவர்களில் கணிசமானவர்களும்…(போதைப்பொருள் கடத்துவோர், நுகர்வோரும் உள்ளடக்கம்)….சகல துறைகளிலும் உள்ள மோசடிக்காரர்களும் JVPக்கு வாக்களித்தனர்….

அதாவது கோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளில் பெரும் தொகை அப்படியே JVPக்கு கவிழ்ந்து சரிந்து குவிந்தது….அது தானாக நடக்கவில்லை….அமெரிக்க, அமெரிக்க சார்பு ஐரோப்பிய நவ தாராளவாத முதலாளித்துவ அரசியல் கட்சிகள் இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்து கடந்த 70 வருடங்களாக உலகில் முன்னணி ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோக நாடாக மாற்றிவிட்டனர். அதற்கு எதிராக…குறிப்பாக அந்நிய ஏகாதிபத்திய அடக்குமுறை க்கும் அமெரிக்க சார்பு ஐரோப்பிய சார்பு நவ தாராளவாத முதலாளித்துவ ஊழல் மோசடி அரசியலை எதிர்க்கும் ஆகக் குறைந்த அளவான வேலை த் திட்ட த் து டன் ஆவது JVP கிராமங்கள், நகரங்கள் எல்லாம் இறங்கி வேலைசெய்த கட்சி….பழைய ஆட்சியாளர்களினால் பசியையும் பட்டினினியையும் வறுமையையும் சமூக
அநீதிகளையும் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் 70 வருடங்களாக அனுபவித்த மக்கள் இறுதியில் அந்த 70 வருட வாரிசு அரசியல் தலைவர்களில் கோட்டபாயாவின் மீது பாய்ந்தனர். கோட்டாவுக்கு 69 இலட்சம் வாக்குகளை அள்ளிக் கொடுத்த வாக்காளர்கள், பசியையும் பட்டினினியையும் வறுமையையும் சமூக
அநீதிகளையும் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் தாங்கமுடியாமல் பாய்ந்து கலைத்தனர். ( இதற்குள்ளும் அமெரிக்க, ஐரோப்பிய சதி வலைகள் பின்னப்பட்டதான தகவல்கள் ஆராயப்படவேண்டியவை) அதே வாக்களர்கள்தான் JVP க்கும் பிரண்டு வாக்களித்தனர். அனுகுமார திட நாயக்க எனும் தனிமனிதனின் கவர்ச்சியும் திடமான உறுதிமொழிகளும் அவேய்ன் தலைமையில் JVP இன் வேலத்திட்டமும் மாற்றுக் கட்சிகளின் நிர்வாகங்களில் ஏற்பட்டிருந்த வெறுப்பும் சலிப்பும் உள்ளதில் JVP தரமான கட்சி எனும் கணிப்பும் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் JVP பெரு வெற்றிகளை ஈட்டக் காரணங்களாய் இருந்தன. ஆயினும் அமைச்சரவையிலும் Clean Sri Lanka Task Force இலும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்பதும் இலங்கை இனப்பிரச்சனை க்கான தீர்வு நோக்கிய நகர்வுகளில் உள்ள இடர்பாடுகளும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திகளாக வெளிப்படுகிறது) இலங்கையின் சகல அரசியல் கட்சிகளும் இவ்வருடம் அல்லது அடுத்தவருடம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் எதிர்கொள்ளவிருக்கின்றன. அதற்கிடையில் மேற்படி தமிழர் கவலைகளை தீர்க்கும் முயற்சிகளாவது JVP ஆல் தொடங்கப்படுமா ? அத்துடன் தமிழருக்குள்ளவாறான அதே கவலைகள் இலங்கை இஸ்லாமிய மக்களிடமும் உள்ளன. ஆகவே இரு சிறுபான்மை இனங்களிடமும் கவலைகளும் கரிசனைகளும் உள்ளன. இவை JVP ஆல் அணுகப்பட்டு தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் தான் அடுத்துவரும் தேர்தல்களில் சிறுபான்மை மக்களிடமிருந்து வாக்குகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். அது மட்டுமல்ல வேட்பாளர்கள்கூட உங்களுக்கு கிடைப்பார்கள்.

JVP க்கு வாக்களித்த பெரும்பான்மை சிங்கள மக்களோ ஏனைய இன மத மொழி சமூகத்தினரோ 99% வாக்காளர்கள் System Change
தத்துவார்த்தத்தின் அடிப்படைகளைக்கூட புரிந்திருக்கமாட்டார்கள்.

System Change எனும் சிந்தனைத் தெளிவு பெற்றவர்களும் அதற்குள் சிறு தொகையிருக்கக் கூடும்.

சிறுபான்மை ம்க்களை மட்டுமல்ல சிங்கள பெரும்பான்மை மக்களையும் “System change”, “Clean Sri lanka” வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதில் JVP அரசாங்கம் முன்னெடுப்பதில் பாரிய நெருக்கடிகளை எதிகொள்ளத் தொடங்கியிருப்பதாக ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா முதலிய கண்டங்களில் வாழும் ஆய்வாளர்கள் பிரபலமான சமூக ஊடகங்களிலும் தொலைக் காட்சிகளிலும் கருத்தியல் வெள்ளங்களை ஓடவிடுகின்றனர். அதில் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பேராசிரியர் கீத பொன் கலன் என்பவர் தேர்தல் காலத்தில் தான் மேற்கொண்ட டமூக ஊடக ஆய்வுகளில் JVPக்கு மூன்று நாலு இலட்சம் வாக்குகளே விழும் என்று உறுதியாகத் தெரிவித்தவர். அவர் இப்போது கூறுகிறார் JVP க்கு வாக்களித்தவர்கள் இப்போதைக்கு JVPஇல் சலித்துப்போகமாட்டார்கள். சில வருடங்கள் அவகாசமுள்ளது. அதற்குள்
JVP தான் அளித்த வாக்குறுதிகளின்படி மாற்றங்களை நிகழ்த்திக் காட்டவேண்டும்….அதை JVP செய்யுமாயின் JVP மீதான சலிப்புணர்வு தவிர்க்க ப் பட லா ம் என்றும் கூறுகிறார். அத்துடன் IMF தொடர்பாக முன்னைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளை JVP கடைப்பிடிக்க முடிவு ஸ்ய்தமையையும் பேராசிரியர் கீத பொன் கலன் பாராட்டியுள்ளார்.

அத்துடன் JVP அரசாங்கம் இந்திய-இலங்கை வெளிவிவகாரக் கொள்கையையும் சீன- இலங்கை வெளிவிவகாரக் கொள்கையையும் கடை ப் பி டி ப் பதில் ஒரு சம நிலையை எப்படி எட்டப்போகிறது என்ற ஐயப்பாடுகளையும் அதிலுள்ள சவால்களையும் மேற்படி ஆய்வாளர்கள் ” பாய்ந்து பாய்ந்து” தமது ஆய்வறிவின் விருத்தியில் தங்கி நின்று விளக்கிவருகின்றனர். அவற்றில் பல கருத்துக்கள் ” விழுந்த பாட்டுக்குக் குறி சுடுவதாகவும்” நேர்காணல் செய்பவரையும் நேர்காணலை நடத்தும் சமூக ஊடகத்தையும் சமூக ஊடகத்தின் முற்கற்பிதங்களையும் திருப்திப்படுத்துவதாகவுமே அமைந்துள்ளன. அவை பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

தற்போது இடம்பெற ஆரம்பித்துள்ள கைதுகள், கைதாகுவோருக்கு அனுதாப அலையை உருவாக்கி எதிர்மறை விளைவைத் தரலாம்.

அத்துடன் ஊழல் மோசடிக் காரர்களை, சட்டவிரோத கொலைகாரர்களை கைது செய்து அவர்கள் மீதான நீதி மன்ற நடவடிக்கை நிறைவுற வருடக் கணக்காகும்.

அத்துடன் இவையனைத்தும் 15 – 30 வருடங்களுக்கு முந்திய பழைய வழக்குக் கோவைகள்…..சாட்சிகளை மீள விசாரித்து சாட்சியங்களையும் முறைப்படுத்துவதில் நீண்ட காலம் செல்லும். பல மனித சாட்சிகள் மிக முதுமை அடைந்து விட்டன….அல்லது காலமாகிவிட்டன….விசாரணைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஓய்வு பெற்றுள்ளனர்.சிலர் உயிர் அச்சுறுத்தல்களால் வெளி நாடுகளுக்கு சென்றுவிட்டனர். பலர் மிக முதுமை நிலையில் உள்ளனர்.

இந்தப் பின்னணியில், சாட்சிகளை இலகுவில் ஒழுங்குபடுத்தக் கூடிய ஆதாரங்கள் பலமாகவுள்ள Cases தான் JVP அரசாங்கத்தால் கையில் எடுக்கப்படலாம்.

அவையாவது நீதி மன்ற நடவடிக்கைக்கு உட்படுதல் வரவேற்கத்தக்கது.

இப்போதைக்கு இவையெல்லாம் அடையாள நடவடிக்கை களாக வும் ஊடகப் பிரமிப்புப் பிரசாரங்களாகவும் மட்டுமே அமையும். கைதுகளை தனியார் ஊடகங்களும் அரச ஊடகங்களும் பிரமாண்டமான பிரசாரங்களுக்கு உள்ளாக்கி உள்ள சூழ் நிலையில் பின்னர் கைது செய்யப்படுவோர் நீதிமன்றால் சட்டப்படி பிணையில் விடுவிக்கப்படும் நிலையில்….அவையும் செய்திகளாக வெளிவரும் போது…..பிணை விடுவிப்புக்களின் சட்டபூர்வ அம்சங்களை விளங்காத சாதாரண வெகுசனம்…..அதாவது JVPக்கு வாக்களித்தவர்கள் மெல்ல மெல்ல சலிப்படைவர்….

அத்துடன் இந்த பிணைவிடுவிப்புக்களை, கைதாகுவோரின் தரப்புக்கள் தமது ‘கை சுத்தம்’ என்பதாக ஊடகங்களில் பிரசாரம் செய்வர்…. அத்துடன் கைதாகி பிணையில் விடுதலையாகுவோருக்கு ஒரு காதா நாயகத் தன்மையும் வளரத் தொடம்கும்….அதுவும் JVP இன் வெகுசன வாக்காளர்களுக்கு சலிக்கத் தொடங்கும்….சட்டரீதியான அம்சங்களைப் புரியாத வாக்காளர்கள் இவையெல்லாம் வெறும் நாடகங்கள் என உணரும் வகையில் வேறு பல தரப்பு ஊடகங்களால் பிரசாரம் கட்ட வி ழ் த்துவிடப்படும் நிலை உருவாகும்.

இப்பொழுது அவசரகதியில் வேகமாக அரசியல் ஆதரவு சூழ் நிலைகள் மாறக் கூடியதாக சமூக ஊடகங்களை நடத்தும் பிரஜைகள் ஊடகவியலாளர்கள்
(Citizen Journalists) துரித கதியில் செயற்படுவர்.

இதை நான் எழுதி க் கொண்டிருக்கும் போது (27.01.2025 திங்கள்) வெளியான செய்தி ” முந்த நாள் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட ஜோசித ராஜபக்‌ஷ இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை” என்பதாகும்….

Yoshitha Rajapaksa who was arrested by the CID on Saturday, granted bail by Colombo Magistrate’s Court today;
Reporter- dailymirror.lk

இவ்வாறு தொடர்ந்து கைதுகளும் வழக்குகளும் பிணை விடுவிப்புக்களும் நிகழுமாயின் அவை செய்திகளாக தொடர்ந்து வெளியிடப்படுகையில் வெகு சனங்கள் மத்தியில் சலிப்பான சாதாரண விடயங்களாகிவிடும். அத்துடன் கைதாகுவோரின் மானிட நேயப் பக்கங்கள் செய்திகளில் முதன்மை பெறும்.

உதாரணமாக 25 ஆயிரம் சதுர அடியுடைய ஆடம்பர அரச வீட்டில் தங்கவைக்கப்பட்ட ஒரு வயோதிப அரசியல்வாதி வெளியேறவேண்டும் என்று JVP கட்சியின் இடை நிலை உயர் நிலை அங்கத்தவர்கள் அனைவரும் தீவிர ஊடக மயப்படும் வகையில் பரப்புரை செய்கின்றனர். அவ்வேளையில் தனக்கான பாதுகாப்பு படையினர் அகற்றப்பட்டமை தனக்கான உயிர் அச்சுறுத்தலாகி உள்ளது என்றும் அது தனது அடிப்படை உரிமை மீறல் என்றும் உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை மிகத் திறமையும் நீண்ட அனுபவமும் உள்ள சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்துள்ளார். ” உலகத் தலைவர்களையும் இலங்கைத் தலைவர்களையும் இலங்கை நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களையும் கொன்ற, இலங்கை நாட்டின் மத்திய வங்கி போன்ற முக்கிய கட்டமைப்புக் களையும் தாக்கிய உலகிலேயே மிகப்பயங்கரமான பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை இறுதிப் போரில் அழிக்க நான் தலைமை தாங்கினேன்.” என்று காரணம்காட்டும் மகிந்த ராஜபக்‌ஷ, தனது சட்டத்தரணிகள் மூலம் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதையும் அதனால் முன்னர் இருந்தவாறே தனக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பும் படையினரின் முழுமையான பாதுகாப்பு அவசியம் என்றும் ஆதாரங்கள், ஆவணங்கள் மூலம் வாதாடுவார். இவ்வழக்கு நடைபெறும்போது ஆணி வேறு அக்கு வேறாக சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் மகிந்தரின் போர்க்கால கதா நாயகத் தனமையை மீளுருவாக்கம் செய்யும்…..நீதிமன்றிலும் மகிந்தரின் சட்டத்தரணிகள் புதுப் புது ஆதாரங்களையும் வியாக்கியானங் களையும் உயிரூட்டுவர்…..இதனால் JVP இன் வாக்காளர்கள் தொடர் சலிப்புக்குள்ளாகுவர்….. அதைவிட மகிந்தர், கோட்டா ஆகியோருக்கு ஜனாதிபதித் தேர்தல்களில் அவர்களின் போர் வெற்றியை மையப்படுத்தி தமது வாக்குகளை வழங்கிய சிங்கள வாக்காளர்களே இம்முறை நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் JVPக்கு வாக்களித்தனர். அரிசி,தேங்காய், உப்பு, புளி….முதலிய ஏழைகளின் அடிப்படை உணவுகளே தட்டுப்பாடாகிய சலிப்பு நிலவுகிறது….அது மட்டுமல்லாமல் தேங்காய் சம்பல்( ‘பொல்’ சம்பல்) இலங்கை ஏழை மக்களினதும் இலங்கைப் பணக்காரர்களினதும் மரபு ரீதியான விருப்பத் து க்குரிய சமையலறை உணவு….பால்சோறும் தேங்காய் சம்பலும் தேங்காயுடன் சம்பந்தப்பட்ட கலாசார உணவு… பிரதி அமைச்சராக வி ரு க்கும் ஜே.வி.பி ஆள் ஒருவர் ” தேங்காய் சம்பல் வேஸ்ற்( கழிவு) என்றிருக்கிறார். அது சிங்கள மக்கள் மத்தியில் கடும் விசனத்தை உருவாக்கியுள்ள தருணமாகவும் இது உள்ளது. சிங்கள் ஊடகங்களில் அது மோசமாக விபரிக்கப்பட்டு வருகிறது….. சமூக அரசியல் ஞானம் இல்லாத அல்லது அனுபவ முதிர்ச்சி இல்லாத கதைகளை JVP அங்கத்தவர்கள் கூறத்தொடங்கியுள்ளனர்.
அத்துடன் மகிந்தர் இப்பொழுது வாழும் பிரமாண்டமான அரச இல்லத்தையும் மீள ஒப்படைத்து வெளியேறுமாறு JVP கட்சியின் இடை நிலை உயர் நிலை அங்கத்தவர்கள் அனைவரும் தீவிர ஊடக மயப்படும் வகையில் பரப்புரை செய்கின்றனர். ஆனால் வெளியேற வேண்டுமானால் உத்தியோகபூர்வமாக எழுத்துமூலம் தனக்கு அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என்று மகிந்தர் கூறியுள்ளார்.

இப்பொழுது System Change, Clean Sri Lanka முதலிய பிரயோகங்கள் அர்த்தம் பெற வேண்டுமானால் நாட்டின் கல்வித் துறை மறு சீரமைக்கப்பட்டு விஞ்ஞான தொழி நுட்ப அறிவும் ஆற்றலும் எதிர்காலச் சந்ததிக்கு ஏற்படுத்தப்படவேண்டும்…..கலைப் பாடப் பட்டதாரிகளை உருவாக்குவதை ஆகக் குறைந்த அளவில் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு விஞ்ஞான தொழில் நுட்பப் பட்டதாரிகளை மனித வளத்துள் சேர்க்கும் வகையில் பாடசாலைக் கல்வியிலும் பல்கலைக்கழகக் கல்வியிலும் மறு சீரமைப்புக்களைச் செய்ய வேண்டும். விவசாயத்துறையில் மறு சீரமைப்புடன் மக்களுக்கான நிலப்பகிர்வும் நீர் வளப் பகிர்வும் நீதியாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ளப்பட்டு விவசாய உற்பத்தி நாட்டின் குடித்தொகைக்கு போதுமானதாக்கப்பட்டு மிகையானவை ஏற்றுமதிக்குள்ளாக வேண்டும்….வெளி நாட்டுச் செலாவணி பெருக்கப்படவேண்டும்.
கடல் வளப்பயன்பாடு, உப்பு மற்றும் கடல் சார் உணவுகள், மற்றும் கனிம வளப் பயன்பாடு தொடர்பான பொருத்தமான கொள்கை அமுலாக்கம் தேவை…. மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிச் சரிதவியல் கனிம வளப் பணியகம், நீர் வினியோக வடிகாலமைப்புச் சபை, நீர் வளச் சபை, UDA முதலியவற்றுக்கு உடனடியான நேர்மையான ஆளணி மூலமான மறு சீரமைப்புக்களுடன்
சகல இயற்கை வள முகாமைத்துவமும் ஒருமுகப்பட்ட அதேவேளை மக்கள் பிரதிநிதிகளும் சம்பந்தப்படக்கூடிய ஒரு ஜன நாயகத் தரம் மிக்க அதிகார சபை ஒன்றிடம் புதிய சட்ட த் திரு த் தங்களை அல்லது புதிய சட்ட ஆக்கங்களை மேற்கொண்டு ஒப்படைக்கப்படவேண்டும். இலங்கையில் நீர் வளத்திற்கு மட்டும் அரச அதிகார சபைகளும் அரச நிறுவனங்களும் மொத்தமாக 12 சம்பந்த ப்படுகிறது….இது பெரும் நிர்வாக இழுபறி மட்டுமல்லாமல் அரச பணியாட்சிக் குழுமத்தின் அதிகாரப்போட்டியாகி சாதாரண மக்களே அந்தக் கையிறு இழுவைக்குள் நசிவர்.
நாட்டின் இலவச சுகாதாரத் துறையின் தரம் மேம்படுத்தப்பட்டு அது பலப்படுத்தப்
படவேண்டும். மருத்துவக் கற்கைகளுக்கும் துபைமருத்துவக் கற்கைகளுக்கும் செல்லும் மாணவர்களின் தொகை மூன்று மடங்காக்கப்படவேண்டும். இது அடுத்த 5 வருடங்களில் சாத்தியமாகும். எப்படியெனில் உடனடியான பாடசாலைக் கல்வி மறுசீரமைப்பு மூலம்….
இவை போன்றவற்றைச் செய்வதற்கு சர்வதேச நிதி நிறுவனங்கள், வல்லரசுகள் முதலியவற்றின் நிதியைத் திரட்டுவதன்…நாட்டின் ஏற்றுமதிகளை மேலும் பன்மடங்கு அதிகரிக்க எமது கடல் வளத்தையும் நிலத்தில் பயிர்ச் செய்கையும்( அதாவது நிலத்தையும்) உச்ச பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்……இவற்றுக்கான அடிப்படைகளையும் ஆயத்தங்களையும் முனைப்பாக மேற்கொள்வதுடன் போதைவஸ்த்து ஒழிப்பு, சம காலத்தில் ஊழல் மோசடி ஒழிப்பு, நாட்டைச் சூறையாடிய முன்னைய குற்றவாளிகளின் மீதான நடவடிக்கைகள் முதலியவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் சிறுபான்மையின மக்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களாவது உள்ள அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான
(Devolution of power) தீர்வுத் திட்டம் ஒன்று பேச்சு வார்த்தைகளினூடு அடையப்படவேண்டும்.
“Clean Sri Lanka” எண்ணக்கரு Social, Ethical and Environmental…..
வியாபகம் உள்ளது….”Social” என்பதற்குள் Political, Cultural மற்றும் Economic அம்சங்கள் வந்து விடும்…. ஆக JVP மிகக் கவனமாக தனது ஒவ்வொரு அடியையும் அங்குல்ம் அங்குலமாக எடுத்து வைத்து நகரவேண்டிய சுற்றி வளைப்புப் பிரதேசத்துக்குள் நிற்கிறது என்பதே யதார்த்தம்.

கனகநாயகம் வேல்தஞ்சன்
BA(OUSL Colombo), MPA ( Sri Jayewardenepura), Dip. in Journalism(Jaffna), Dip.in Human Rights(CPR), Visiting Academic(OUSL)