இந்தியச் செய்திகள்கிசு கிசு

பெண்களின் கதறல் வெளியில் கேட்காமல் இருக்க வீட்டுக்குள் சவுண்ட் சிஸ்டம்!!

ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.இதில், அங்கு பெண்களை ஆபாச படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

பொள்ளாச்சியில் முகநூல் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சாதாரண உடையில் நேற்று சென்றனர். அவர்களுடன் சின்னப்பம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமாரும் சென்றார்.

அவர்கள் அந்த வீட்டின் வரைபடத்துடன் வீட்டில் உள்ள அறைகள், ஜன்னல்கள் கதவுகள், நுழைவு வாயில் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து பதிவு செய்தனர். வீட்டில் வேறு எதுவும் தடயங்கள் இருக்கிறதா? என்றும் சோதனை செய்தனர். அங்கிருந்து பென் டிரைவ் உள்பட பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.

மேலும் ஆபாச வீடியோவில் இருக்கும் வீடு, இந்த வீடு தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். பின்னர் திருநாவுக்கரசு வீட்டின் அருகில் வசித்து வருபவர்களிடம் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தனர். சுமார் ஒரு மணி நேர சோதனைக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வீடுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து வந்து சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி திருநாவுக்கரசை அழைத்து வந்து அவர் முன்னிலையில் தான் சோதனை நடத்த வேண்டும். ஆனால் அவரை வெளியில் அழைத்து வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவரை அழைத்து வரவில்லை. திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுப்பதற்காக கோர்ட்டுக்கு அழைத்து வருவதற்கு முன்பே அங்கு அதிக அளவில் கூட்டம் கூடியதால் பாதுகாப்பு காரணங்களினால் காணொலி காட்சி மூலம் திருநாவுக்கரசை ஆஜர்படுத்தி காவலில் எடுத்தோம். அதனால் தான் தற்போதும் அவரை வீட்டுக்கு அழைத்து வரவில்லை.

இந்த வீட்டுக்கு திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் அடிக்கடி காரில் வந்துள்ளனர். இதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் காரில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாத அளவிற்கு கார் கண்ணாடிகள் கூலிங் ஸ்டிக்கரினால் மறைக்கப்பட்டு இருக்கும். சமூக வலைதளங்களில் பரவி வரும் 3 ஆபாச வீடியோக்களில் 2 வீடியோக்கள் இந்த வீட்டின் உள்பகுதியில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை சரிபார்ப்பதற்காக தான் இங்கு வந்துள்ளோம். இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆபாச வீடியோ எடுக்கும் போது பெண்களின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக அந்த வீட்டில் அதிக சத்தம் எழுப்பும் சவுண்ட் சிஸ்டம் அமைத்துள்ளனர். இதையும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான திருநாவுக்கரசின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.