புதினங்களின் சங்கமம்

வடிவேலு பாணியில் யாழில் வேலையற்ற பட்டதாரிகளை முட்டாளாக்கிய கில்லாடிகள்!! இன்று போலி விண்ணப்பபடிவம் கொடுத்து பெருமளவு பணம் சம்பாதிப்பு….!!

பட்டதாரிகளை அரசுதான் ஏமாற்றி வருகிறது என பார்த்தால், பலே கில்லாடியொருவரும் அரசின்
பெயரால் பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளார். பட்டதாரிகளிற்கான வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவம்
என மர்மநபர் ஒருவர் அச்சிட்ட விண்ணப்பபடிவங்கள் மின்னல் வேகத்தில் விற்பனையாகி முடிந்துள்ளன.

இதைவிட சுவாரஸ்யம், இந்த போலி விண்ணப்பப்படிவங்களை யாழ மாவட்ட செயலகம் கவனிக்காமல்
ஏற்றுக்கொண்டுள்ளது.

பட்டதாரிகளின் நியமன விவகாரம் நீண்டகாலமாக- எல்லாக்காலத்திலும்- இருந்து வரும்
பிரச்சனை. தற்போதும் அந்த பிரச்சனை உள்ளது. வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு
பகுதியினருக்கு இன்று வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. சுமார் 16 ஆயிரம் உள்வாரி
பட்டதாரிகள் நியமனத்தை பெறுகின்றனர்.

வெளிவாரி மற்றும் நியமனம் பெறாத உள்வாரி பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகிறார்கள். யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் போராட்ட இடத்திற்கு வந்து,
விரைவில் ஏனைய பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்கப்படுமென தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பட்டதாரிகள் மத்தியில் வேகமாக செய்தியொன்று பரவியது. நியமனம்
கிடைக்காத பட்டதாரிகளிற்கான விண்ணப்பப்படிவம் வெளியாகியுள்ளது, அதை நிரப்பி மாவட்ட
செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டு வருவதாக பட்டதாரிகள் மத்தியில் காட்டுத்தீயாக செய்தி பரவியது

இதையடுத்து நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு அண்மையாக போலி
விண்ணப்பப்படிவம் விற்ற கடையில் படிவம் வாங்கி, அதை நிரப்பி யாழ் மாவட்ட செயலகத்தில்
ஒப்படைத்துள்ளனர். அந்த படிவத்தின் உண்மைத்தன்மையை ஆராயாத மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும்
விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த தகவல் கிடைத்ததும் பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ஒருவர் அங்கு சென்று படிவத்தை
பார்வையிட்டபோது அது போலியானது என்பது தெரிய வந்தது. அடிப்படையான விபரங்கள் பல
அதில் கோரப்படாமல், மேலோட்டமான தகவல்களே கோரப்பட்டிருந்தன. ஒரு படிவம் 10 ருபாய்க்கு
விற்பனையாகியுள்ளது.

பட்டதாரிகளால் ஒப்படைக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பரிசோதிப்பதில்லையான என மாவட்ட
செயலக உத்தியோகத்தர்களிடம் தாம் வினவியபோது, அவர்கள் தந்தார்கள், நாம் வாங்கி வைத்தோம்
என்ற பாணியில் அவர்கள் பதிலளித்ததாக, பட்டதாரிகள் சங்க பிரமுகர் ஒருவர்
தெரிவித்தார்.