புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

தை மாத இராசிபலன்கள் இதோ!!

14-1-2025 முதல் 12-2-2025 வரை

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்: இம்மாதம் முழுவதும் சூரியன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய மூவரும், உதவிகரமாக சஞ்சரிப்பதால், வருமானம் போதிய அளவிற்கு இருக்கும்! ருண, ரோக – சத்ரு ஸ்தானத்தில் கேது நிற்பதால், பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெறலாம். சூரியன் சுப பலம் பெற்றிருப்பதால், உடல் நலன் திருப்திகரமாக இருக்கும். அர்த்தாஷ்டக ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், நெருங்கிய உறவினர்களுடன் ஒற்றுமை பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பச் சூழ்நிலை, மன நிம்மதியை அளிக்கும். சனி பகவானின் நிலையினால், வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு, வசதியான வீட்டிற்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. தற்போது நடைபெறும் தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், சொந்த வீடு அமையும் பாக்கியமும் கிட்டும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது நெருங்கிய உறவினரைப் பார்ப்பதற்காகவோ வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளதையும், கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

உத்தியோகம்: லாப ஸ்தானத்தில், சனி பகவான் அமர்ந்திருப்பது அவரது ஆட்சிவீடாகும். உழைப்பும், பொறுப்புகளும் அதிகமாக இருப்பினும், ஊதிய உயர்வும், பதவியுயர்வும், மேலதிகாரிகளின் ஆதரவும் பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மேஷ ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைக்கு ஆர்வமிருப்பின், நிறைவேறும். தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

தொழில், வியாபாரம்: லாப ஸ்தானத்தில், சனி பகவான், சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிப்பது, பிரபல யோகம் ஒன்றினைக் குறிக்கிறது. சந்தை நிலவரம் மிகவும் அனுகூலமாக இருப்பதால், உற்பத்தியை அதிகரிக்கலாம். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு, ஏற்ற மாதமிது! வெளி மாநிலங்களுக்கும், உங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தலாம். வங்கிகளின் ஆதரவும், உதவியும் தக்க தருணத்தில் கிட்டும். சூரியன், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகக் கூட்டாளிகள் உதவிகரமாக துணை நிற்பார்கள். ஏற்றுமதி – இறக்குமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கலைத் துறையினர்: பெரும்பான்மையான கலைத் துறைகள் சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. அத்தகைய பார்க்கவன் (சுக்கிரன்), சனி பகவானுடன் சேர்ந்து, கும்ப ராசியில், நட்பு ராசியில் வலம் வருவதால், லாபகரமான வாய்ப்புகள் தேடி வரும். இவை வருமானத்தை உயர்த்தும். மக்களிடையே செல்வாக்கும், புகழும் ஓங்கும். சில மாதங்களாகவே தடைப்பட்்டிருந்த வருமானம், மீண்டும் வர ஆரம்பிக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படங்களில் துணிந்து முதலீடு செய்யலாம். லாபம் கிட்டும் என சம்பந்தப்பட்ட கிரகங்கள் உறுதியளிக்கின்றன. இம்மாதம் தயாரிக்கும் பல படங்கள் உலக அரங்குகளில் புகழ்பெறும். குரு பகவான், தன ஸ்தானத்தைப் பலப்படுத்துவதால், ஓதுவா மூர்த்திகள், கர்நாடக சங்கீத வித்வான்கள், பரத நாட்டியக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள் ஆகிேயாருக்கு வருமானம் உயரும்.

அரசியல் துறையினர்: இம்மாதம் முழுவதும் அரசியல் துறைக்கு அதிகாரியான சுக்கிரன், ஜீவன காரகரான சனியுடன், சனி பகவானின் ஆட்சி வீட்டில் சஞ்சரிப்பதால், மேஷ ராசியில் பிறந்துள்ள அரசியல் பிரமுகர்களுக்கும், தொண்டர்களுக்கும், விசேஷ நன்மைகளைத் தந்தருளும் மாதம் இது! கட்சியில், செல்வாக்கும், ஆதரவும் பெருகும். சிலருக்கு, அரசாங்கப் பதவிெயான்று தேடி வரும். மற்ற கட்சித் தலைவர்கள், தங்கள் கட்சிக்கு வந்துவிடுமாறு ஆசைகாட்டுவார்கள். எதற்கும் ஆசைப்படாமல், மனவுறுதியுடன் இருப்பது, எதிர்காலத்திற்கு நன்மை செய்யும் என்பதை குரு மற்றும் சூரியனின் சஞ்சார நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.

மாணவ – மாணவியர்: இம்மாதம் முழுவதும், கல்வித் துறையுடன் தொடர்புகொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைவாற்றல் தேர்வுகளின்போது, துணை நிற்கும்.

விவசாயத் துறையினர்: இம்மாதம் முழுவதும், பூமி காரகரான செவ்வாய், பூரண சுப பலம் பெற்று உங்களுக்குப் பக்க பலமாக விளங்குகிறார். விவசாயத்திற்கு அவசியமான தண்ணீர் மற்றும் உரங்கள் ஆகியவை குறைவில்லாமல் கிடைக்கும். வயலைப் பார்த்தாலே, அதன் பசுமை உங்கள் உள்ளத்தைக் குளிரச் செய்யும்! கால்நடைகளின் பராமரிப்பில் பிரச்னை ஏதும் இராது என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன.

பெண்மணிகள்: குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய மூவரும் இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக வலம் வருகின்றனர்! குடும்பப் பொறுப்பினை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படும். மணமாலைக்குக் காத்துள்ள மங்கையருக்கு நல்ல வரன் அமையும்.

அறிவுரை: அலுவலகத்தில், மேலதிகாரிகளுடனும், சக-ஊழியர்களுடனும் பழகுவதில் சற்று கவனமாக இருத்தல் அவசியம். தவறுகள் ஏற்படுவதற்கு, சாத்தியக்கூறு உள்ளதை, சனி பகவானின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது.

பரிகாரம்: ஜீவன ஸ்தானத்தில், பலமாக நிலைகொண்டுள்ள சனி பகவானுக்கு மட்டும் பரிகாரம் செய்தால், நன்மை பெறலாம். அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, தரிசித்துவிட்டு வந்தால் பூரண பலன் கிடைக்கும். இயலாதவர்கள் தங்கள் வீட்டிலுள்ள பூஜையறையிலேயே இதைச் செய்தாலும், அதே பலன்களைப் பெறலாம். இதை அனுபவத்தில் காணலாம்.

அனுகூல தினங்கள்
தை: 1-3, 7-9, 14-16,
20-23, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 10 இரவு முதல் 13 காலை வரை.

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: இம்மாதம் முழுவதும் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். ைத 28-ம் தேதி வரை வக்கிர கதியில் வலம் வரும் குரு, தை 29-ம் தேதி வக்கிரகதி நிவர்த்தியாகி நேர்கதியில் செல்ல ஆரம்பிக்கிறார்! தை 14-ம் தேதி வரை சுக்கிரனும் அனுகூலமாக இல்லை!! முதல் இரண்டு வாரங்கள் நிதிப் பற்றாக்குறை சற்று கடுமையாக இருக்கும். மூன்றாவது வாரத்திலிருந்து, பண நெருக்கடி தளரும். குடும்பப் பொறுப்புகள் சம்பந்தமாக, வெளியூர்களுக்குச் சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கணவர் – மனைவியரிடையே அந்நியோன்ய உறவு பாதிக்கப்படக்கூடும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது குடும்பப் பிரச்னைகள்காரணமாகவோ கணவர் – மனைவி தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். திருமண முயற்சிகளில், பின்னடைவு ஏற்படும். சில தருணங்களில், தவறான வரை நிச்சயித்துவிடக்கூடும். ஆதலால், இம்மாதம் விவாக முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையளிக்கும். இத்தகைய கிரக அமைப்புகள் நிகழும்போது, திருமண முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம் என பழமையான ஜோதிடக் கிரந்தங்கள் விளக்கியுள்ளன. வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். அடிக்கடி சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். வெளிநாடு ஒன்றில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண்ணிற்ற, அலுவலகத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு, மன நிம்மதி பாதிக்கப்படும்.

உத்தியோகம்: ஜீவன ஸ்தானமாகிய கும்பராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று சுக்கிரனுடன் இணைந்திருப்பதால், உங்கள் உழைப்பிற்குப் பாராட்டுதல்கள் கிடைக்கும். இதுவரை எவ்வித காரணமுமில்லாமல் ஒத்திப்போடப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பதவியுயர்வு ஆகியவற்றை இப்போது எதிர்பார்க்கலாம். சிலருக்கு, புதிய சலுகைகளுடன் இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வௌிநாடு சென்று, பணியாற்றும் ஆர்வமிருப்பின், இம்மாதம் முயற்சி செய்யலாம். வெளிநாடுகளில் வேலைபார்த்துவரும் அன்பர்களுக்கு, நிறுவன மாற்றமும், அதன் காரணமாக, கூடுதல் சலுகைகளும் கிட்டும்.

தொழில், வியாபாரம்: தொழிலை விருத்தி செய்வதற்கு ஏற்ற மாதம்் இந்தத் தை மாதம்! உற்பத்தியை அதிகரித்துக்கொள்ளலாம். மூலப் பொருட்கள் நியாயமான விலைக்குக் கிடைக்கும். புதிய விற்பனைக் கிளைகளைத் திறப்பதற்கு உதவிகரமாக அமைந்துள்ளன கிரக நிலைகள்! கடின உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும், அசதியை ஏற்படுத்தும். சகக் கூட்டாளிகளினால், சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, கவலையை அளிக்கும். நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருப்பினும், அவற்றைச் சமாளிப்பதில் பிரச்னை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அளவோடு புதிய முதலீடுகளில் ஈடுபடலாம்.

கலைத் துறையினர்: தை மாதம் 15-ம் தேதியிலிருந்து, கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரன், சுப பலம் பெறுவதால், மாதத்தின் மூன்றாம் வாரத்திலிருந்தே புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். திருமணமாகியுள்ள திரைப்பட நடிகை – நடிகர்களிடையே பரஸ்பர அன்பு குறையும். தசா, புக்திகள் அனுகூலமாக இல்லாவிடில், விவாக ரத்து ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

அரசியல் துறையினர்: மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் கிரக நிலைகள் சாதகமாக இல்லை. அதன் பின்பு, படிப்படியாக சுப பலம் பெறுகின்றன. மேடைப் பேச்சுகளில் நிதானத்தை இழந்துவிடாமல் கட்டுப்பாட்டுடன், வார்த்தைகளை அளந்து பேசுவது பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

மாணவ – மாணவியர்: தை மாதம் 5-ம் தேதி வரை, கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. அதன் பிறகு, மாதம் முடியும் வரை, உதவிகரமாக இல்லை. கல்லூரியிலும், பள்ளியிலும் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட்டு, நீங்களே உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்திக் கொள்வீர்கள் என கிரக சஞ்சார நிலைகள் குறிப்பிடுகின்றன.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைக் கட்டுப்படுத்தும் கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கின்றன. உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். விவசாய வசதிகளுக்குக் குறைவிராது. ஆடு – மாடுகள் நல்ல அபிவிருத்தியை அடையும். வயல் பணிகள் சற்று கடினமாக இருப்பினும், அதற்கேற்ப பலன் கிடைப்பது, உற்சாகத்தைத் தரும்.

பெண்மணிகள்: ஜென்ம ராசியில் குரு பகவான்! முதல் இரண்டு வாரங்கள் சுக்கிரனும், அனுகூலமாக இல்லை!! மூன்றாம் வாரத்திலிருந்து, குடும்பச் சூழ்நிலை மன அமைதியைத் தரும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சித்தால், வெற்றி கிட்டும்.

அறிவுரை: மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் சிக்கனமாக செலவு செய்தல் அவசியம். ஆரோக்கியத்திலும் பின்னடைவு ஏற்படக்கூடும். கடின உழைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருங்கள்.

பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தரிசித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் சக்தி வாய்ந்த யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அனுகூல தினங்கள்
தை: 4-6, 10-12, 16-18,
21-24, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 13 காலை முதல் 15 மாலை வரை.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: ராசிக்கு, விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையில், சுக்கிரனும், தை 14-ம் தேதி வரையில்தான், அனுகூலமாக அமைந்துள்ளார். புதன், தை 6-ம் தேதி முதல், 23-ம் தேதி வரை சுபத்துவப் பாதையில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு மாறிவிடுகிறார். மாதம் முடியும் வரை, சுக்கிரன் விரய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ளார். சுகஸ்தானத்தில் கேது அமர்ந்துள்ளார். வரவைவிட செலவுகளே அதிகமாக இருக்கும். எந்தச் செலவையும் தவிர்க்க முடியாது. குடும்பப் பிரச்னைகள் மன அமைதியைப் பாதிக்கும். சுகஸ்தானத்தில் வலம் வரும் கேதுவின் நிலையினால், நெருங்கிய உறவினருக்குள் ஒற்றுமை குறையும். கணவர் – மனைவியரிடையே பரஸ்பர அன்பு பாதிக்கப்படும். அஷ்டம ராசியில் (8) சூரியன் சஞ்சரிப்பதால், அதிக உஷ்ணத்தினால் அடிக்கடி சோர்வும், சரும சம்பந்தமான உபாதைகளும் ஏற்படும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. மாதக் கடைசியில், சிறு கடன் ஒன்றை ஏற்க நேரிடும். தை 15-ம் தேதியிலிருந்து சுக்கிரனின் ஆதரவு குறைவதால், விவாக முயற்சிகளில் ஏமாற்றம் ஏற்படும். ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகுவுடன், சுக்கிரன் சேருவதால், எதிர்பாராத பண வரவு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது.

உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில், சுக்கிரனும், சனி பகவானும் இணைந்துள்ள தருணத்தில், உத்தியோக ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டுள்ளதால், இட மாற்றமும், சிறு அளவில் சலுகைகளும் கிடைக்கும். ஆயினும், இடமாற்றம் மனதிற்கு திருப்தியை அளிக்காது. ஏற்றுக் கொள்வது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வெற்றி கிட்டும். இருப்பினும், விருப்பத்திற்கு மாறான இடத்தில் பணிக்கு சேரவேண்டியிருக்கும். இதன் காரணமாக, பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். தற்காலிகப் பணியாளர்களின் நிலை நீடிக்கிறது.

தொழில், வியாபாரம்: சனி பகவான், ஆட்சி பீடம் பெற்று, சுக்கிரனுடன் இணைந்து நிற்பதால், சந்தை நிலவரம் சாதகமாக இருக்கும். நியாயமற்ற போட்டிகளை முறியடித்து லாபம் காண்பீர்கள்! உற்பத்தியை ஓரளவு அதிகரிக்கலாம். தன ஸ்தானத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றும், வக்கிர கதியிலும் சஞ்சரிக்கிறார். குருவும் விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். உற்பத்தியை அளவோடு அதிகரித்துக் கொள்ளலாம். இருப்பினும், கடனுக்கு சரக்குகளை அனுப்புவதைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ளவும். கிரக நிலைகளின்படி, முன்பணம் பெற்றுக் கொண்ட பிறகே, சரக்குகளை அனுப்புவது நல்லது. புதிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும்.

கலைத் துறையினர்: கலைத் துறைக்குத் தொடர்புள்ள கிரகங்கள் அனைத்தும் ஓரளவே சாதகமாக சஞ்சரிக்கின்றன. வருமானம் ஏற்றத்தாழ்வின்றி ஒரே சீராக இருக்கும். அநாவசியமான செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். இல்லாவிடில், புதிய கடன்களை ஏற்க நேரிடும். தசா, புக்திகள் ஆதரவாக இல்லாவிடில், இம்மாதத்தின் கடைசி இரு வாரங்கள் கடும் சோதனையாக அமையும். வாய்ப்புகளும் குறையக்கூடும். குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய முதலீடுகளில் கவனமாக இருத்தல் அவசியம். சில படங்களுக்கு மக்களிடையே எதிர்பார்க்கும் அளவிற்கு வரவேற்பு இராது. கதை, வசனம், நடிகர்கள், நடிகைகள் ஆகியோரை அதிஜாக்கிரதையாகத் தேர்ந்ெதடுக்க வேண்டும். இல்லாவிடில் தயாரிப்புகள் நஷ்டத்தில் கொண்டுவிடும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிபதியான சுக்கிரன், தை 14ம் தேதி வரையில்தான் அனுகூலமாக நிலைகொண்டுள்ளார். அதன் பிறகு, கட்சியின் உட்பூசல்களில் உங்்கள் பெயர் அடிபடும். கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு குறையும். ஜோதிடக் கலை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஏற்படக்கூடிய பிரச்னைகள் மிகத்தெளிவாகவும், தக்க தருணத்திலும் எடுத்துக் காட்டும். வேதம் பொய்க்காது!வேதத்தின் அங்கமான ஜோதிடமும், தெய்வப்ரச்னையும் பொய்க் காதவை! ஜோதிடக் கலையின் வானியல் சூட்சுமங்களை அர்த்த சாஸ்திரம் விளக்குகிறது. நம் ஒவ்வொருவரின் வாழ்்க்கையிலும் எப்போது ஆபத்துகள் ஏற்படும் என்பதையும், அத்தகைய சமயங்களில் நாம் எவ்விதம் நடந்துகொண்டால் அத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்? என்பதை “பூர்வ பாராசர்யம்”, “பிருஹத் ஸம்ஹிதை” போன்ற பிரபல ஜோதிடக்கிரந்தங்கள் விவரித்துள்ளன.

மாணவ – மாணவியர்: தை மாதம் 6-ம் தேதியிலிருந்து, அதே மாதம் 2 வரை படிப்பில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். நற்குணங்கள் மிகுந்த மாணவர்களின் நட்பும், சகவாசமும் கிடைக்கும். ஆசிரியர்களே முன்வந்து, உதவி செய்வார்கள். போட்டிகள், விளையாட்டுகள் ஆகியவற்றிலும் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட கிரகங்கள் நிலை கொண்டுள்ளன. கிரகிப்பு சக்தியும், நினைவாற்றலும் தக்க தருணத்தில் துணை நிற்கும்.

விவசாயத் துறையினர்: உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைக்கும். அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. அஷ்டம ராசியில் சூரியன், தன ஸ்தானத்தில் வக்கிர கதியில் பூமி காரகரும் சஞ்சரிப்பதால், அடிக்கடி ஏதாவதொரு உபாதைகள் ஏற்பட்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படும். கால் நடைகளின் பராமரிப்பிலும் செலவுகள் அதிகரிக்கும். அவற்றில் சிலவற்றை விற்றுவிடவேண்டிய அவசியமும் ஏற்படக்கூடும் என்பதையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே, திட்டமிட்டு, தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது உதவும்.

பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும், குரு பகவான் விரயத்தில் சஞ்சரிப்பதால், அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. குடும்பப் பிரச்னைகளும் மனதை அரிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை சோர்வை ஏற்படுத்தும். வேலைக்கு முயற்சித்துவரும் மங்கையருக்கு, தடங்கல்கள் ஏற்படும். வரனுக்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல இடம் அமைவது தாமதப்படும்.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கூடிய வரையில் மனதை நிம்மதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வீண் கவலைகள், மருத்துவ செலவுகளைக் கொண்டுவிடும்.

பரிகாரம்: தினமும் ஒரு தசகம், மந்நாராயணீயம் படித்து வந்தால், நல்ல பலன் கிட்டும். குருவாயூரப்பனின் சக்தி அளவற்றது.

அனுகூல தினங்கள்
தை: 1, 2, 6-10, 14, 18-20, 24-26, 29,30.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 15 இரவு முதல் 17 இரவு வரை.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல்பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்: லாப ஸ்தானத்தில் குருவும், அஷ்டம ஸ்தானத்தில் சுப பலம் பெற்ற சுக்கிரனும் வலம் வருவதால், இம்மாதம் முழுவதும் வருமானம் போதுமான அளவிற்கு இருக்கும். அஷ்டம ராசியில் சனி சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் நீச்ச கதியில் செவ்வாய் அமர்ந்திருப்பதாலும், மருத்துவ செலவுகளில் பணம் விரயமாகும். சிறு காரியமானாலும், அதிக முயற்சி தேவைப்படும். குரு பகவானின் சுப பலத்தினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. புத்தாடைகள், வெள்ளிப் பாத்திரங்கள் சேரும். குடும்பத்தில், சுப நிகழ்்ச்சிகள் நிகழ்வதால், செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். தக்க தருணத்தில், பண உதவி கிட்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஏற்படும். இம்மாதத்தில் சுக்கிரனைவிட, குரு பகவானே அதிக சுப பலம் பெற்றிருப்பதால், பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளே அதிகமாக இருக்கும் (ஆதாரம்: “பிருஹத் ஸம்ஹிதை”). வெளியூர்ப் பயணங்களினால், நன்மைகள் ஏற்படும்.

உத்தியோகம்: அஷ்டம (8) ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கும் தோஷத்தை, சுக்கிரன் குறைத்துவிடுகிறார். சக ஊழியர்களின் விரோத மனப்பான்மை சற்று குறையும். மேலதிகாரிகளின் கண்டிப்பிலும் நல்ல மாறுதலை இம்மாதம் காண முடியும். இருப்பினும், வேலைச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியே இருக்கும். சிலருக்கு இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படக்கூடும். வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் கடக ராசி அன்பர்களுக்கு, குடும்பத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் அன்பர்களுக்கு, இழுபறி நிலை நீடிக்கும். உடல் உபாதைகளினால் அடிக்கடி விடுப்பில் செல்ல நேரிடும்.

தொழில், வியாபாரம்: ஜென்ம ராசியில் செவ்வாயும், பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால், போட்டிகளும், பொறாமைகளும் கடுமையாக இருக்கும். குரு – சுக்கிரன் சுப பலம் பெற்று ஆதரவாக நிற்பதால், நிதி நிறுவனங்களின் ஆதரவும், உதவியும் தக்க தருணத்தில் கிட்டும். விற்பனையும் லாபமும் திருப்திகரமாக இருக்கும். ஆயினும், புதிய முதலீடுகளில், இம்மாதம் ஈடுபடாமலிருப்பது நல்லது. வெளியூர் மற்றும் வெளி மாநிலப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். சகக்கூட்டாளிகள் ஒத்துைழப்பார்கள்.

கலைத் துறையினர்: சனி பகவானின் ஆட்சி ராசியில், கலைத்துறைக்கு அதிபதியான சுக்கிரன் சஞ்சரிப்பதால், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆயினும், அவை எதிர்பார்க்கும் அளவிற்கு இராது என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. ஒருசிலருக்கு, வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறும் உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படப்பிடிப்புகளை மீண்டும் ஆரம்பிக்கலாம். லாப ஸ்தானத்தில், வக்கிர கதியில் அமர்ந்துள்ள குரு பகவான், பாக்கிய ஸ்தானத்தை, தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துவதால், புதிய முயற்சிகள் லாபகரமாக இருக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை தங்கள் அதிகாரத்தில் வைத்துக்கொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும் சுபபலம் பெற்றுள்ளன. சுக்கிரன், சனி பகவானுடன் இணைந்திருப்பது, மேலும் பல நன்மைகளை அளிக்கவுள்ளது. உங்கள் மீது வழக்குகள் இருப்பின், தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக இருக்கும். கட்சியில் ஆதரவு பெருகும்.

மாணவ – மாணவியர்: கல்வி முன்னேற்றத்தைக் குறிக்கும் கிரகங்கள், இம்மாதம் முழுவதும் உதவிகரமாக சஞ்சரிக்கவில்லை. பாடங்களில் கவனம் சிதறும். தேர்வுகளில், வினாக்களுக்கு பதிலளிக்கும்போது, முக்கிய விஷயங்கள் மறந்துபோகும். படிக்க உட்கார்ந்தால், அசதியும், சோர்வும் மேலிடும். விளையாட்டுப் போட்டிகளில், பாடுபட்டும்கூட, வெற்றி பெறுவது சற்று கடினமாகும். பரிகாரம் உதவும்.

விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாயும், விவசாயத் துறைக்குத் தொடர்புள்ள மற்ற கிரகங்களும், பலம் குறைந்து சஞ்சரிக்கின்றனர் இம்மாதம் முழுவதும்! வயல் பணிகளில் பாடுபட்டு உழைத்தும்கூட, விளைச்சல் எதிர்பார்க்கும் அளவிற்கு இராது. கால்நடைகள் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும்.

பெண்மணிகள்: குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவருமே உங்களுக்கு ஆதரவாக, சுப பலம் பெற்றுத் திகழ்கின்றனர். குடும்ப நிர்வாகத்தில், எவ்விதப் பிரச்னையும் இராது. கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் நிலவுவது, மனத்திற்கு நிறைவைத் தரும். திருமணமான பெண்மணிகள், கருத்தரிப்பதற்கு, கிரக நிலைகள் ஆதரவாக உள்ளன. ஏற்கெனவே கருத்தரித்துள்ள, கடக ராசி பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் ஏற்படும். வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, வேலை கிடைக்கும்்.

அறிவுரை: ஜென்ம ராசியில் செவ்வாயும், அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவானும் நிலைகொண்டு்ள்ளதால், உஷ்ண சம்பந்தமான, சரும உபாதைகள் ஏற்படக்கூடும். அலட்சியமாக இருந்துவிடாமல், உடனுக்குடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.

பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் திருநள்ளாறு தரிசனம் உடனுக்குடன் பலனளிக்கும், சென்று-வர இயலாத அன்பர்கள், தினமும் காலையில், நீராடிய பின்பு, ÿ கந்தர் சஷ்டி கவசம் மற்றும் ÿ விஷ்ணு சகஸ்ர நாமம் படித்துவருவது, சக்திவாய்ந்த பரிகாரமாகும். இதை மாலையிலும் சொல்லி வரலாம். அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்
தை: 2-4, 7-9, 13-16,
20-22, 26, 27, 30.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 17 இரவு முதல் 19 பின்னிரவு வரை.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்: கிரக நிலைகளின்படி, இம்மாதம் சற்று கடுமையான நிதிப் பற்றாக்குறையை நீங்கள் சமாளிக்க வேண்டிவரும்! சுக்கிரன், குரு, சனி பகவான் ஆகியமூவருமே, உங்களுக்கு ஆதரவாக இல்லை. அஷ்டம ஸ்தானத்தில், ராகு அமர்ந்திருப்பதும், ஆரோக்கியக் குறைவினை எடுத்துக்காட்டுகிறது. விரய ஸ்தானத்தில் செவ்வாய் நிலைகொண்டிருப்பது, வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும் என்பதையும், சில தருணங்களில் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்்பதையும் உணர்த்துகின்றனர். குடும்பப் பிரச்னைகளைப் பொருத்தவரையில், அடிக்கடி மனதில் நிம்மதி குறைந்து, “டென்ஷன்” ஏற்படும். திருமண முயற்சிகளில், தடங்கலும், ஏமாற்றமும் மேலிடும். பிள்ளை அல்லது பெண் பற்றிய பிரச்னை ஒன்று கவலையளிக்கும்.

உத்தியோகம்: பெரும்பான்மையான கிரகங்கள் உத்தியோகஸ்தர்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கவில்லை! ராகு மற்றும் செவ்வாயின் நிலைகளினால், ஏதாவது ஓர் காரணத்தினால், அடிக்கடி விடுப்பில் செல்ல நேரிடும். உயரதிகாரிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படும். பாடுபட்டு உழைத்தாலும், நிர்வாகத்தினர் உங்கள் மீது அதிருப்தியே நீடிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்துவரும் சிம்ம ராசி அன்பர்களுக்கு ஏமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். அவர்களது மறைமுகப் பேச்சுகள் மன நிம்மதியைப் பாதித்துவிடும்.

தொழில், வியாபாரம்: உங்கள் உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது, நன்மை செய்யும். சந்தை நிலவரம் சாதகமாக இல்லை! நியாயமற்ற போட்டிகளும், இடைத்தரகர்களின் தலையீடும் உங்கள் விற்பனையைப் பாதிக்கும். பல காரணங்களினால், சந்தை நிலவரம்் அடிக்கடி மாறுவதால், உங்கள் சரக்குகளின் விலையை நிர்ணயிப்பது கடினமாகும். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஆதரவும் குறையும். புதிய முதலீடுகளையும், விற்பனை விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடுவது அவசியம். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதப்படும். இதன் காரணமாக, நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகின்றன.

கலைத் துறையினர்: பெரும்பான்மையான கிரகங்கள் சாதகமாக இல்லை! புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தடங்கல்களும், தாமதமும் ஏற்படும். சற்று கடினமான நிதிப் பற்றாக்குறையை இம்மாதம் நீங்கள் சந்திக்க நேரிடும். மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்வதும், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியம். “நிச்சயம் நமக்குக் கிடைக்கும்…!” என்ற எதிர்பார்த்து இருந்துவந்த உங்களுக்கு, அந்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும். நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடல்நல பாதிப்பினால், “கால்ஷீட்” கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய திரைப்படங்கள் எடுப்பதை ஒத்திப் போடுதல், நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

அரசியல் துறையினர்: தை மாதம் 14-ம் தேதி வரை, சுக்கிரன் உள்ளிட்ட எந்த கிரகமும் உங்களுக்கு உதவிகரமாக அமையவில்லை!15-ம் தேதியிலிருந்து சுக்கிரன், படிப்படியாக சுப பலம் பெறுவதால், நன்மைகளை எதிர்பார்க்கலாம். முதல் இரண்டுவாரம் பேச்சில், மேல்மட்டத் தலைவர்களுடன் பழகுவதிலும் நிதானமாக இருத்தல் அவசியம். முக்கிய அரசியல் பிரச்னைகளில் உங்கள் சொந்தக் கருத்துகளை வெளியிடாமல் மௌனம் சாதிப்பது உங்களுக்கு நன்மை செய்யும். தசா, புக்திகள் பாதகமாக இருப்பின், பேச்சிலும், செயலிலும் நிதானமாக இருத்தல் மிகவும் அவசியம்.

மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள் ஓரளவே சாதகமாக சஞ்சரிக்கின்றன. ஆசிரியர்களின் ஆதரவு, படிப்பில் உற்சாகத்தைத் தரும். சிறு, சிறு உடல் உபாதைகள் அசதியை ஏற்படுத்தும். நண்பர்களுடன் வெளியே சுற்றுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கிரக நிலைகள் அறிவுறுத்துகின்றன.

விவசாயத் துறையினர்: பூமி காரகரும், விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டவருமான செவ்வாய், சாதகமாக இல்லை! விவசாயத் துறையுடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள மற்றொரு கிரகமான சூரியனும், சுப பலம் பெற்றுள்ளார். வயல் பணிகள் கடினமாக இருப்பினும், விளைச்சலும் வருமானமும் திருப்தி தரும். அடிப்படை விவசாய வசதிகளுக்குக் குறைவிராது.

பெண்மணிகள்: மாதம் முழுவதும், குரு பகவானால் நன்மை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை! தை 14-ம் தேதி வரை, சுக்கிரனாலும் உதவி இல்லை! கையில் இருப்பதைக் கொண்டு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க வேண்டிவரும். அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதை ஏற்படுவதால், ஓய்வெடுக்க நேரிடும். நெருங்கிய உறவினர்களின் மனப்பான்மை மனத்திற்கு வேதனையைத் தரும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

அறிவுரை: அஷ்டம ராசியில் ராகு பலமாக அமர்ந்திருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். குறிப்பாக, பெண்மணிகள் கழிவறை, குளியலறை ஆகியவற்றில் நடமாடும்போது, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கீழே விழுந்து அடிபடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஆதலால்தான், இந்த எச்சரி்க்கை.

பரிகாரம்:

வசதியுள்ளவர்கள் கும்பகோணத்தின் அருகிலுள்ள அருள்மிகு ஸ்ரீ கர்கடேஸ்வரர் திருக்கோயில், சென்று தரிசித்தால், அடியோடு தோஷம் நீங்கும்.
சூரியனார் கோயிலுக்குச் சென்று, தீபம் ஏற்றிவைத்து தரிசித்துவிட்டு வருதல்.
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் சொல்லி வந்தாலும் போதும்.
காலை, மாலை வேளைகளில் ÿ விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லிவந்தால் மகத்தான புண்ணிய பலன்களை அடைவீர்கள்.
ஐந்து சாத உருண்டை, எள், பருப்பு, நெய் கலந்து, தினமும் காகத்திற்கு வைத்து வந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
தை: 3-5, 10-12, 16-18, 22-24, 28-30.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 19 பின்னிரவு முதல் 21 பின்னிரவு வரை,

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில், குரு பகவான் அமர்ந்து, ராசியைப் பார்ப்பதால், வருமானத்திற்குக் குறைவிராது. குடும்பச் சூழ்நிலை மன நிறைவையளிக்கும். ருண ஸ்தானத்தில் சுக்கிரன், சனி பகவானுடன் இணைந்து சஞ்சரிப்பதால், கைப்பணம் பல வழிகளிலும் கரையும். திட்டமிட்டு செலவு செய்யாவிடில், நான்காம் வாரத்தில் பணப்பற்றாக்குறை சற்று கடினமாகவே இருக்கும். புத்திர ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால், பெண் அல்லது பிள்ளையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். திருமண முயற்சிகள் கைகூடும். பழைய கடன்கள் இருப்பின், இம்மாதம் அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பண வரவு ஒன்றிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. களத்திர ஸ்தானத்தில், ராகு சஞ்சரிப்பதால், கணவர் – மனைவியரிடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். தவிர்ப்பது மன நிம்மதியை அளிக்கும். வெளிநாடு சென்று, படிக்க வேண்டும் அல்லது வேலை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ள பிள்ளை அல்லது பெண்ணின் ஆசை இம்மாதம் நிறைவேறும்!

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியும், “ஜீவன காரகர்” என்ற பெருமையும் பெற்றுள்ள சனி பகவான், சிறந்த சுப பலம் பெற்று நிலைகொண்டுள்ளதால், வேலைபார்க்கும் இடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், பதவியுயர்வு அல்லது ஊதிய உயர்வு எதிர்பார்க்கலாம். வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் கன்னி ராசி அன்பர்களுக்கு, அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். வேலையில்லாமல் அவதிப்படும் இளைஞர்களுக்கு, இம்மாதம் ஓர் அரிய வரப் பிரசாதமாகும்! சிறு முயற்சியிலேயே மனத்திற்குப் பிடித்த, நல்ல நிறுவனத்தில் வேலை கிட்டும்.

தொழில், வியாபாரம்: உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு மிகவும் அனுகூலமான காலகட்டமிது! உற்பத்தியை அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு, சந்தை நிலவரம் ஆதரவாக உள்ளது. ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு கையெழுத்தாகும். வெளி மாநிலப் பயணங்கள், வர்த்தக முன்னேற்றத்திற்கும், லாப உயர்விற்கும் வழிவகுக்கும்.

கலைத் துறையினர்: வருமானத்தை உயர்த்தும் புதிய வாய்ப்புகள், எவ்வித முயற்சியுமின்றி தேடி வரும். செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளிலும், வெளிநாட்டுப் பயணங்களிலும் பணம் விரயமாகும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய தயாரிப்புகளில் திட்டமிடலாம். லாபம் கிட்டும்.

அரசியல் துறையினர்: கட்சியில் செல்வாக்கு உயரும். அரசு பதிவியிலுள்ள பிரமுகர்களின் தொடர்பு, லாபகரமாக இருக்கும். சிலருக்கு, கட்சியில் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்கும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ராசிக்கு 6-ம் இடத்தில், சனி – சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், பிரபல கட்சி ஒன்றிற்கு மாறும் வாய்ப்பும், உருவாகும்.

மாணவ – மாணவியர்: இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், சூரியனின் நிலையினால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். புதனும், அனுகூலமாக இல்லை! மற்றபடி, ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை ஏற்படுவதால், கல்வி முன்னேற்றம் தடைபடாது. பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஆசிரியர்களின் ஆதரவு படிப்பில் உற்சாகத்தைத் தரும்.

விவசாயத் துறையினர்: செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதாலும், விளைச்சலும், வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ஆடு – மாடுகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும். தண்ணீர் போன்ற அடிப்பட வசதிகள் குறைவில்லாமல் கிடைக்கும்.

பெண்மணிகள்: பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவான், ராசியைப் பார்ப்பதால், மகிழ்ச்சியானமாதமிது. கணவர் மற்றும் குழந்தைகளின் அன்பு, மனநிறைவையளிக்கும், வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்ளநிலை, மனநிறைவையும், நிம்மதியையும் அளிக்கும். புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும்.

அறிவுரை: மனைவியின் உடல் நலனில் கவனமாக இருங்கள்!

பரிகாரம்: திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் திருக்கோயில்களின் தரிசனம், கைமேல் பலனளிக்கும். இயலாதவர்கள், ÿ விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து வரவும். பெண்மணிகள், அபிராமி அந்தாதி சொல்லி வரலாம், நல்ல பலன் கிடைக்கும். இயலாதவர்கள், அரசிமாவு, சர்க்கரை மாவு இரண்டையும் கலந்து, அருகிலுள்ள திருக் கோயில் வெளிப் (நான்கு) பிராகாரத்தைச் சுற்றிலும் தூவிவிட்டால், போதும். கண் திருஷ்டி, ஏவல், பில்லி சூனியம், கடன் தொல்லை விலகும். நீண்ட நாட்களாக திருமணத்திற்காகக் காத்திருக்கும் கன்னியருக்கு கண்ணிறைந்த கணவன் வாய்ப்பது உறுதி. தேவை பக்தியுடன் கூடிய நம்பிக்கை மட்டுமே!

அனுகூல தினங்கள்
தை: 1, 2, 6-9, 13-17, 24-26, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 21 பின்னிரவு முதல், 23 வரை.

துலாம்

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: ராசி நாதனாகிய சுக்கிரன் 14ம் தேதி வரை அனுகூலமாக சஞ்சரிக்கிறார். வீரியம் நிறைந்த ராகு, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், நற்பலன்களை அளிக்கவல்ல கிரக நிலையாகும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, மன நிம்மதி பெறலாம். அஷ்டம ராசியில், குரு பகவான் நிலைகொண்டுள்ளதால், அடிக்கடி ஏதாவதொரு குடும்பப் பிரச்னை, கவலையளிக்்கும். திருமண முயற்சிகளில், வரன் அமைவது சற்று கடினமே! இத்தகைய கிரக அமைப்புகள் உள்ளபோது, கூடியவரையில், விவாக சம்பந்தமான முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது என “பூர்வ பாராசர்யம்” -எனும் புகழ்பெற்ற ஜோதிடக் கிரந்தம் கூறுகிறது. பல ஜோதிட நூல்களுக்கு, ஆதார நூல் இதுவேயாகும். பராசர மகரிஷியால் இயற்றப்பட்டது என்பது பெரியோர் கருத்தாகும். புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும், சனி பகவானின் சஞ்சார நிலையினால், குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை மனத்தை அரிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை பாதிக்கப்படக்கூடும். மறைமுகப் பேச்சுகள், மனதில் வேதனையை ஏற்படுத்தும்.

உத்தியோகம்: ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்்தில், சுக்கிரன் – சனி பகவானின் சேர்க்கையினால், வேலை பார்க்கும் இடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், வேலைச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாக இருக்கும். நிர்வாகத்தினர் மீது, அதிருப்தி ஏற்படும். சக-ஊழியர்களின் மறைமுகப் பேச்சுகளினால், மனதில் வேதனை ஏற்படும்.

தொழில், வியாபாரம்: சுக்கிரனுடன் கூடிய சனி பகவானும், ராகுவும் வியாபார முன்னேற்றத்திற்கு உதவி செய்வார்கள். சந்தை நிலவரம் சாதகமாக இருக்கும். நியாயமற்றப் போட்டிகள் குறையும். உற்பத்தியை அதிகரிக்கலாம். மூலப் பொருட்களின் விலை அனுகூலமாக இருக்கும். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது! ஏற்றுமதி – இறக்குமதித் துறையினர் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பிரபல வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும். வரவேண்டிய பாக்கிகளை வசூல் செய்ய ராகுவின் நிலை உதவிகரமாக உள்ளது.

கலைத் துறையினர்: ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய கும்பத்தில், சனி பகவான், கலைத் துறைக்குத் தலைவரான சுக்கிரனுடன் இணைந்திருப்பது சிறந்த முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய கிரகக் கூட்டணியாகும். சிறு முதலீடும்கூட, நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். வெளிமாநிலப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். நிதி நிறுவனங்களின் உதவி எளிதில் கிட்டும். திரைப்படத் துறையினருக்கு, சுக்கிரன் – சனி பகவானின் சேர்க்கை தக்க தருணத்தில் அமைந்துள்ள கிரக சஞ்சார நிலையாகும். சிறு முதலீட்டில் எடுக்கும் படங்கள்கூட, நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும்.

அரசியல் துறையினர்: உங்கள் ராசி நாதனாகிய, சுக்கிரன்தான் அரசியல் துறைக்கும் அதிபதியாவார்! பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், ஜீவன காரகரான சனி பகவானுடன் சேர்ந்திருப்பது, பல நன்மைகளை உங்களுக்கு அளிக்க வல்லது. கட்சியில் ஆதரவு பெருகும். செல்வாக்குள்ள ஓர் பிரமுகரின் தொடர்பு, உங்கள் அரசியல் முன்னேற்றத்திற்கு உதவும். சிலருக்கு, கட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. அவரவரது ஜாதகத்தின் தசா, புக்திகளின் அடிப்படையில், இம்மாற்றம் நிகழும்.

மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான, புதனும், மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், இம்மாதம் நல்ல கல்வி முன்னேற்றம் ஏற்படுவது உறுதி! பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். தேர்வுகளில், மிகச் சரியாக பதிலளித்து, நல்ல மதிப்பெண்களைப் பெற, நினைவாற்றல் சிறப்பாக உள்ளது. வெளிநாடு சென்று, விசேஷ தொழில் கல்வி பயில்வதற்கு வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும். வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! எதிர்காலம் சிறப்பாக அமையும்.

விவசாயத் துறையினர்: வயல்களில் உழைப்பு கடினமாக இருக்கும். தண்ணீர்்ப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை! கால்நடைகள் அபிவிருத்தியடையும். விவசாயப் பணிகளை நவீனமயமாக்குவதற்கு, கிரக நிலைகள் சாதகமாக அமைந்துள்ளன. அண்டை நிலத்தாரோடு சுமுகமான உறவு நீடிக்கும்.

பெண்மணிகள்: குரு பகவான், வக்கிரகதியில் 8-ம் இடத்தில் நிலைகொண்டு்ள்ளதால், பணம் பல வழிகளிலும் விரயமாகும். வீட்டில் பொருட்கள் களவுபோக நேரிடும். நீங்கள்தான் ஆபரணங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது, விலையுயர்ந்த நகைகளை அணிந்து கொள்ளாமலிருப்பது நல்லது. இரவு நேரங்களில், பணியாற்றி, வீடு திரும்பும் பெண்மணிகள் தனியாக பயணிக்க வேண்டாம். எத்தகைய தருணங்களில், நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதில் வானியல் கலையான ஜோதிடத்திற்கு இணையான வேறு கலை இல்லை!!

அறிவுரை: இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் வேண்டும். விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில், மாலையில் பிரதோஷ காலத்தில் ( மாலை 5-30 முதல் 7.00 வரை) தீபம் ஒன்று வீட்டிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ ஏற்றிவருவது மிகச் சிறந்த பரிகாரமாகும். ஒவ்வொரு துளி நெய் அல்லது நல்லெண்ணெய்க்கும் உள்ள பரிகார சக்தி மகத்தானது என புராதன நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

அனுகூல தினங்கள்
தை: 1-3, 7-9, 13-16, 20-22, 23, 27, 28.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 24 முதல், 26 காலை வரை.

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்: சனி பகவான், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூவரைத் தவிர, மற்ற கிரகங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும். மேலும், உங்கள் ெஜன்ம ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வையும் கிடைப்பது, மேலும் பல யோக பலன்களை அளிக்கவல்லது! வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். குடும்பத்தில், ஒற்றுமை நிலவும். விவாகமான பெண்கள் கருத்தரிப்பதற்கு ஏற்ற மாதம் இது!! திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. அர்த்தாஷ்டக நிலையில் சனி பகவான் சஞ்சரிப்பதால், சிறு, சிறு உடல்உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால், உடனுக்குடன் குணமும் கிடைக்கும். சப்தம (7) ஸ்தானத்தில், குரு பகவான் நிைலகொண்டுள்ளதால், திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு அவர்கள் விருப்பப்படி அந்நிய நாடு ஒன்றில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு, தற்போதுள்ள வீட்டைவிட, வசதியான மற்றொரு வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் நிலவும்.

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான, சனி பகவான், அர்த்தாஷ்டக ராசியில் சஞ்சரிப்பதால், அலுவலகப் பொறுப்புகளில், விழிப்புடன் செயல்படுதல் வேண்டும். மேலதிகாரிகளுடன் பேசுவதிலும், பழகுவதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முக்கிய அலுவலகப் பிரச்னைகள் பற்றி, சக-ஊழியர்களுடன் விவாதிக்க வேண்டாம். சனி பகவான், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூவரும் அனுகூலமாக இல்லாததால், பெண் ஊழியர்களுடன் பழகுவதில் அளவோடு இருத்தல் நல்லது. உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அஜாக்கிரதையாக இருந்துவிட்டு, பின்பு வருந்தவேண்டாமல்லவா?

தொழில், வியாபாரம்: சனி பகவான் அர்த்தாஷ்டக தோஷம் பெற்று சஞ்சரிப்பதால், உழைப்பும், அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் கடுமையாக இருக்கும். சுக்கிரன், சனி பகவானுடன் இணைந்திருப்பதால், உழைப்பிற்கேற்ற விற்பனையும், லாபமும் கிடைக்கும். போட்டிகள் கடுமையாக இருப்பினும், அவற்றை வெற்றிகரமாகச் சமாளித்து, நல்ல லாபம் பெறுவீர்கள் என சுக்கிரன் உறுதியளிக்கிறார். கிளை நிறுவனங்கள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது. புதிய விற்பனை நிலையங்களையும் திறக்கலாம். நிதிநிறுவனங்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். பிரபலமான அந்நிய தேச நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கலைத் துறையினர்: கலைத் துறையுடன் தொடர்புகொண்டு்ள்ள அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் உயரும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படங்களில் முதலீடு செய்யலாம். வங்கியின் உதவி எளிதில் கிட்டும். பல மாதங்களாக, தொடர்ந்து பின்னடைவில் இருந்துவந்த திரைப்படத் துறை, புத்துயிர் பெறும். சரித்திரம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் பின்னணியில் எடுக்கப்படும் படங்கள் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். நாடகத் துறைக்்்கும் உதவிகரமாக சஞ்சரிக்கின்றனர், சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும்!

அரசியல் துறையினர்: அரசியல் துறையுடன் தொடர்பு கொண்டு்ள்ள கிரகங்கள் சுப பலம் பெற்று வலம் வருவதால், கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர் பதவியில் அமர்ந்துள்ள பிரமுகர் ஒருவருடன் தொடர்பு ஏற்படும். அவர் மூலம் பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படவுள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ – மாணவியர்: புதனும், கல்வித் துறையுடன் தொடர்புடன் இணைந்துள்ள மற்ற கிரகங்களும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், இம்மாதம் படிப்பில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள்! பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். தேர்வுகளில் உங்கள் நினைவாற்றல் கைகொடுக்கும். பலருக்கு, படிப்பு முடிந்தவுடன் நல்ல வேலை கிடைத்துவிடும். நேர்முகத் தேர்வுகளில், சரியான விடைகளையளித்து, வெற்றி பெறுவீர்கள். இதன் மூலம் கிடைக்கும் வேலை மனதிற்கு திருப்தியையும், உற்சாகத்தையும் அளிக்கும்,

விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். 4-ம் இடத்தில் உள்ள சனிபகவானின் நிலையினால், விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. சிறு, சிறு விபத்துகளும் ஏற்படக்கூடும். நிதானமாக செயல்படுவது அவசியமாகும். கால்நடைகளின் பராமரிப்பில், செலவு அதிகமானாலும், அவற்றின் அபிவிருத்தி மனத்திற்கு நிறைவைத் தரும். குறிப்பாக, குரு – சுக்கிரனின் சுப பலத்தினால், பசுக்கள் சிறந்த அபிவிருத்தியை அடையும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு அதிகாரம் கொண்ட கிரகங்கள் குரு மற்றும் சுக்கிரனாவார்கள். மற்ற கிரகங்களுக்கும், இதில் பங்கு உண்டு என்றாலும், அதிக பொறுப்பு குரு மற்றும் சுக்கிரனுக்கே! இம்மாதம் முழுவதும் இவ்விரு கிரகங்களும் பூரண சுப பலம் பெற்று விளங்குவதால், பெண்கள் பல யோக பலன்களைப் பெற்று மகிழ்வர். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, அவர்கள் விருப்பம்போல் கண் – கவர் கணவர் அமைவார். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள், பணிச் சுமை சற்று அதிகமாக இருப்பினும், மனதில் நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

அறிவுரை: அர்த்தாஷ்டகத்தில் நிலைகொண்டுள்ள சனி பகவானால், அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். குடும்பப் பிரச்ைனகளும், மன நிம்மதியைப் பாதிக்கும். கூடியவரையில், முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுப்பதும், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பதும் அவசியம்.

பரிகாரம்:
திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, திருவிடைமருதூர் – அருள்மிகு மகாலிங்க ஸ்வாமியின் தரிசனம், கிரக தோஷங்களை உடனுக்குடன் போக்கிவிடும். முடியாதவர்கள், சனிக்கிழமைகளில் பகல் உணவு மட்டும் அருந்தி, இரவில் உபவாசமிருத்தல் நல்ல பலனையளிக்கும். இயலாதவர்கள், இரவில் பால் – பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் ஒரு சர்க்கம் “சுந்தர காண்டம்” பாராயணம் செய்யலாம். சர்வதோஷ பரிகாரமாகச் சொல்லப்படுகிறது.
லிகித ஜெபமாகப் போற்றிக் கொண்டாடப்படுவதும், மகத்தான புண்ணிய பலன்களை அள்ளித் தருவதுமான, “ÿ ராக ஜெயம்” எனும் தாரக மந்திரத்தை, காலை, மாலை எந்நேரமும் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வந்தாலும்போதும்.
தினமும் காகத்திற்கு எள், பருப்பு, சிறிதளவு நெய்யுடன்கூடிய மூன்று சாத உருண்டைகளை வைத்து வந்தால் மகத்தான புண்ணிய பலன்களை அடைவது உறுதி.
அனுகூல தினங்கள்
தை: 3-6, 11-13, 17-20, 23-25, 30.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 26 காலை முதல், 28 பிற்பகல் வரை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: சனி பகவான், சுக்கிரன் மற்றும் புதன் ஆகியோரால் நன்மை உண்டு! மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை!! ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு பகவானும், அஷ்டம ராசியில் செவ்வாயும் அமர்ந்திருப்பதால், ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக, உங்கள் வாகனத்தை ஓட்டினாலும், பிற வாகனங்களினால், விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஆபத்துக் காலங்களில், நம்மை எச்சரிக்கை செய்வதில் ஜோதிடத்திற்கு இணையான வேறு கலை இல்லை! மாதத்தின் மூன்றாவது வாரத்தில், குடும்பச் செலவுகளுக்காக, புதிய கடன்களை ஏற்க நேரிடும். தவிர்க்க முடியாவிட்டாலும், அவசியமான அளவிற்கு மட்டுமே கடன் வாங்குவதும், அதனை வெகு விரைவில் தீர்ப்பதும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனை ஏன் கூறுகிறோமென்றால், குரு, செவ்வாய் மற்றும் ராகு ஆகிய மூன்று கிரகங்கள் அனுகூலமற்ற நிலைகளில் உள்ளபோது, வாங்கும் கடன் வளரும் என புராதன ஜோதிட கிரந்தங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. விவாகம் சம்பந்தமான முயற்சிகள் தடைபடும். வயதான முதியோர்கள், இரவு நேரங்களில், கழிப்பறைக்குச் செல்லும்போது அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை கிரகங்கள் வலியுறுத்துகின்றன.

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிகாரியான, சனி பகவான், சுக்கிரனுடன் இணைந்து, சுப பலம் பெற்றிருப்பதால், மேலதகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோரின் ஆதரவு பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். அஷ்டம ராசியில் நிலைகொண்டுள்ள செவ்வாயினால், பணிச் சுமை சக்திக்கு மீறியதாக இருக்கும். உழைப்பிற்கேற்ற கூலியைப் பெற்றுத் தந்துவிடுவார், சனி பகவான்! அர்த்தாஷ்டக ராகு நடைபெறுவதால், வெளியூர்ப்பயணங்களின்போது, எச்சரிக்கையாக இருங்கள்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையும், சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. சந்தையில் போட்டிகள் கடுமையாக இருப்பினும், அவற்றைத் திறமையுடன் சமாளித்து, லாபம் பெறுவீர்கள். உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதை, சுக்கிரன், சனி பகவான் கூட்டுச் சேர்க்கை எடுத்துக்காட்டுகிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கி வசூலாகும்.

கலைத்துறையினர்: சனி பகவான் – சுக்கிரன் கூட்டுச் சேர்க்கை இம்மாதம் முழுவதும் உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கவுள்ளது! வருமானத்தை உயர்த்தும் நல்ல வாய்ப்புகள் பல தேடி வரும். உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ளமுடியும். சாதுர்யமாகவும்,பொறுமையுடனும் பிரச்னைகளை அணுகினால் போதும்!

அரசியல் துறையினர்: சுக்கிரன், சனி பகவானுடன் சேர்ந்து, கும்ப ராசியில் சஞ்சரிப்பது, ஜோதிட ரீதியில் நல்ல வாய்ப்புகளை உங்களுக்குத் தேடித் தரும். வீரியமுள்ள இரு கிரகங்கள் சுப பலம் பெற்று இணையும்போது, பல நன்மைகள் கிட்டும் என “பிருஹத் ஸம்ஹிதை” எனும் ஒப்புயர்வற்ற ஜோதிடக் கிரந்தம் கூறுகிறது. கட்சியில் முக்கிய பொறுப்புகளை நீங்கள் ஏற்க நேரிடும். மக்களிடையே செல்வாக்கு உயரும். எந்தச் சர்ச்சையிலும் சிக்காமல், நிம்மதியாக இருக்கும் மாதம் ஆகும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு பெருகும்.

மாணவ – மாணவியர்: தை மாதம் 6-ம் தேதியிலிருந்து, மகர ராசிக்கு மாறும் புதனுக்கு, குருவின் சுபப் பார்வை கிடைப்பதால், படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படுவது உறுதி. உயர் கல்விக்கு உதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று, படிக்க வேண்டுமென்ற விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான மாதமாகும் இது! ஆரோக்கியத்தைக் குறிப்பிடும் அஷ்டம ஸ்தானத்தில் அக்னி கிரகமான செவ்வாயும், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குருவும் நிலைகொண்டிருப்பதால், இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிப்பதைத் தவிர்த்தல் நல்லது.

விவசாயத் துறையினர்: பூமிகாரகரான செவ்வாய், அஷ்டம ராசியிலும், குரு பகவான் ருண ஸ்தானத்திலும், அர்த்தாஷ்டகத்தில், ராகுவும் சஞ்்சரிப்பதால், வயலில் உழைப்பு கடினமாக இருக்கும். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதால், பணம் விரயமாகும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், புதிய கடன்களை ஏற்க நேரிடும். பருவ மழை பொய்க்கக்கூடும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு அதிகாரம் கொண்ட கிரகங்கள், சனி மற்றும் சுக்கிரனாவார்கள்! இவர்கள் இருவருமே, அனுகூலமாக சஞ்சரிப்பதால், வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, மன நிறைவையளிக்கும் மாதமாகும். ஆயினும், குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, மன நிம்மதி குறையும். சுக்கிரன் – சனி பகவானின் கும்ப ராசி சேர்க்கை, நன்மை செய்யும். ஆயினும், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலுள்ள, குருவினால் நன்மை ஏற்பட வாய்ப்பில்லை! குரு பகவானுக்கு, பரிகாரம் செய்வது அவசியம்.

அறிவுரை: கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள்! உடல் நலனில் கவனம் இருக்கட்டும். பிறருடன் பழகுவதில் நெருக்கம் வேண்டாம். பிறரால் பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். வெளியூர்ப் பயணங்களை ஒத்திப்போடவும்.

பரிகாரம்: குரு, செவ்வாய் மற்றும் ராகுவிற்கு பரிகாரம் செய்வது நல்லது. ÿ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபத்தில் சிறிது நெய் சேர்த்து, தரிசித்துவிட்டுவந்தால் மூன்று தோஷங்களும் விலகும். இதை அனுபவத்தில் காணலாம்.

அனுகூல தினங்கள்
தை: 4-9, 13-16. 20-23, 27.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 1 முதல், 3 பிற்பகல் வரை. மீண்டும் 28 பிற்பகல் முதல் 30 இரவு வரை.

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: குரு, சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய மூவரும் உங்களுக்கு ஆதரவாக இம்மாதம் முழுவதும் நிலைகொண்டுள்ளனர். மேலும், ரிஷபத்தில், வக்கிரகதியில் நிலைகொண்டுள்ள குரு பகவான், உங்கள் ராசியை, தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துவதும், நல்ல யோக பலன்கள் கிடைக்கவிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. இவை தவிர, ஏழரைச் சனியின் கடைசி பகுதி பல நன்மைகளை அளிக்கும் என மிகப் புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. குடும்பச் சூழ்நிைல, மகிழ்ச்சியை அளிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அன்பும், ஒற்றுமையும் நிலவும். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால், விவாகமான பெண்மணிகளுக்கு, கருத்தரிக்கும் பாக்கியம் கிட்டும். திருமண முயற்சிகளில், மனத்திற்கு மன நிைறவையளிக்கும் நல்ல வரன் அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணப் பிரச்னை ஏதும் இராது. வெளிநாட்டில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண்ணின் வருகை மகிழ்ச்சியைத் தரும். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், மனைவிக்கு உஷ்ண சம்பந்தமான சரும உபாதைகள் ஏற்படக்கூடும். அடிக்கடி காரணமில்லாத சோர்வினாலும், அசதியினாலும் ஓய்வெடுக்க நேரிடும். சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றல் ஏற்படும். தன ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால், வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. திருதீய ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால், முயற்சிகள் அனைத்திலும், வெற்றி கிட்டும். ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை அமைவதால், பணப் பற்றாக்குறை ஏற்படாது. தை 15-ம் தேதி சுக்கிரன், மீன ராசிக்கு மாறுவதால், எதிர்பாராத பண உதவியும், பண வரவும் கிட்டும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், வக்கிர கதியில் குரு பகவான் சஞ்சரிப்பதால், திருமாணமான பெண்களுக்கு, புத்திரப் பேறு கிட்டும். ராசியில் அமர்ந்துள்ள சூரிய பகவானுக்கு, குருவின் பார்வை கிடைப்பது, விசேஷ யோகத்தைக் குறிக்கிறது. பிரசித்திப் பெற்ற புராதன திருத்தல தரிசனம், வரவிருக்கும் “பிரயாகராஜ்” -கும்பமேளா தீர்த்த ஸ்நான யோகம் கிைடக்க அருள்புரிவார், குரு பகவான்!

உத்தியோகம்: தன ஸ்தானத்தில், சுக்கிரன் – சனி சேர்க்கை இதுவரை காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊதிய உயர்வை இம்மாதம் பெறுவதற்கு வாய்ப்புள்ளதைத் தெரியப்படுத்துகிறது. ேவலை பார்க்குமிடத்தில், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும், மேலதிகாரிகளின் ஆதரவும் உற்சாகத்ைத ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சி செய்வதற்கும், வெளிநாடு சென்று, வேலை பார்ப்பதற்கும் கிரக நிலைகள் அனுகூலமாக அமைந்துள்ளன. விருப்பமுள்ளவர்கள், இப்போது முயற்சிக்கலாம். சிலருக்கு, பதவி உயர்வும், அதன் காரணமாக இடமாற்றமும் ஏற்படக்கூடும். ஏற்கெனவே வெளிநாடுகளில் பணியாற்றிவரும் மகரராசி அன்பர்கள், அவரவர்களது “பிராஜெக்ட்”-களைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் முடித்து, சமர்ப்பிக்க கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.

தொழில், வியாபாரம்: தன ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள, சுக்கிரன் – சனி சேர்க்கை, விசேஷ யோக பலன்களைக் குறிக்கிறது. உற்பத்தியை அதிகரிக்கலாம். அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு, ஏற்றமாதமிது! ராசிக்கு, குரு பகவானின் பார்வை இருப்பதால், சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நிதி நிறுவனங்களின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கும். சந்தை நிலவரம் திருப்திகரமாக உள்ளது. புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு ஏற்ற மாதம் இதுவே!! ஒரு சிலர், தொழில் அபிவிருத்தி சம்பந்தமாக, வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

கலைத் துறையினர்: ஏழரைச் சனி முடியும் பகுதியில், சுக்கிரனும் சேர்ந்திருக்கிறார்! கீர்த்தி ஸ்தானத்தில் ராகுவும் சுப பலனை அளிக்கக்கூடிய நிலையில் சஞ்சரிப்பதால், வருமானம் உயரும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், மக்களிடையே செல்வாக்கை அதிகரிக்கும்.

அரசியல் துறையினர்: சம்பந்தப்பட்ட கிரகங்கள், சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன! கட்சித் தொண்டர்களிடையே ஆதரவு பெருகும். மேலிடத் தலைவர்களும், உங்கள் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

மாணவ – மாணவியர்: கல்வி சம்பந்தமான கிரகங்கள் ஓரளவு சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இம்மாதம்! ஆசிரியர்களின் ஆதரவு, உற்சாகத்தை ஏற்படுத்தும். பாடங்களில் மட்டுமின்றி, விளையாட்டுகள், பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றிலும் முன்னணியில் நின்று, பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்! மனம் பாடங்களில் தீவிரமாக ஈடுபடும்.

விவசாயத் துறையினர்: விவசாயப் பணிகளில், உழைப்பு கடினமாக இருப்பினும், விளைச்சலும் வருமானமும் எதிர்பார்ப்பை விடச் சற்று அதிகமாகவே இருப்பதால், பணிகளில் உற்சாகம் மேலிடும். இம்மாதம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை இராது.

பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் சுப பலம் பெற்று வலம் வருவதால், பெண்மணிகளுக்கு மன நிறைவையும், நிம்மதியையும் அளிக்கக்கூடிய மாதமாகும். குடும்பப் பெண்மணிகளுக்கு, நினைத்தவை நிறைவேறும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள், எளிய சிகிச்சையினால் குணமாகும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, மிகச் சுலபமாகவே – அதிக சிரமப்படாமலேயே நல்ல வேலை கிடைக்கும்.

அறிவுரை: ஜென்ம ராசியில், சூரியன் சஞ்சரிப்பதால், சரும சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். மேலும், அவசியமேற்பட்டாலொழிய, வெளியில் அலையாமல் இருக்கவும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், தீபத்தில் சிறிது பசு நெய் சேர்த்துவருவது, மிகச் சிறந்த பரிகாரமாகும் (ஆதாரம்: “பரிகார ரத்னம்” எனும் புராதன ேஜாதிட கிரந்தம்).

வசதி படைத்தவர்கள், ஏழைகளுக்கு முடிந்த அளவு அன்னதானமளிக்கலாம்.
அனுகூல தினங்கள்:
தை: 1, 2, 6-9, 13-16, 21-23, 27, 28

சந்திராஷ்டம தினங்கள்:
தை: 3 பிற்பகல் முதல், 5 இரவு வரை.

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: தற்போது, ஜென்மச் சனிக் காலம் நடைபெறுகிறது. தன ஸ்தானத்தில் ராகு நிலைகொண்டுள்ளார். அர்த்தாஷ்டக ராசியில் வக்கிர கதியில் குரு சஞ்சரிக்கிறார். வருமானம் திருப்தியாக இருப்பினும், வரவிற்குமீறிய செலவுகள் கவலையளிக்கும். வீண் செலவுகளையும், மருத்துவச் செலவுகளையும் தவிர்க்க இயலாது. அடிக்கடி ஏதாவது ஓர் உடல் உபாதை ஏற்பட்டு, மருத்துவச் சிகிச்சை அவசியமாகும். காரணமில்லாமல், அசதியும், சோர்வும் மேலிடும். வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீட்டுச் சொந்தக்காரர்களின் நியாயமற்ற கோரிக்கைகளை அனுபவிக்க நேரிடும். வெளியூர்ப் பயணங்களின்போது, எச்சரிக்கையுடன் இருப்பது, அவசியம். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலைகள் மனத்தை அரிக்கும். விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்களும், குழப்பமும் மேலிடும். வௌியூர்ப் பயணங்களின்போதும், இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும்போதும், நிதானமாக இருத்தல் மிகவும் அவசியம். ஜென்ம ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது, விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை மிகப் பழைைமயான ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன. இருப்பினும், கும்ப ராசி, சனி பகவானின் ஆட்சி வீடாக இருப்பதாலும், இம்மாதம் சுக்கிரனின் சேர்க்கை ஏற்பட்டுள்ளதாலும், சோதனைகள் கடுமையாக இராது.

உத்தியோகம்: வாக்கு ஸ்தானத்தில், பலம் மிகுந்த ராகு நிலைகொண்டிருப்பதால், உங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சக-ஊழியர்களுக்குக் கொடுத்து, பின்பு அவதியுற வேண்டாம். சக்திக்கு மீறிய பணிச் சுமையினாலும், மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பினாலும், வேலை பார்க்கும் இடத்தில், வெறுப்பும் விரக்தியும் மேலிடும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். தற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரம் மேலும் தாமதப்படும். அந்நிய நாடுகளில் பணியாற்றிவரும் கும்ப ராசி அன்பர்களுக்கு சலுகைகள் குறையும். தாய்நாட்டிற்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் மேலோங்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, பல விதத் தடங்கல்கள் ஏற்படும். கிடைத்தாலும், அந்த வேலையில் மன நிறைவு இராது.

தொழில், வியாபாரம்: இம்மாதம் முழுவதும், வியாபாரத்தில் எதிர்பாராத பின்னடைவைச் சந்திக்க நேரிடும். நியாயமற்ற போட்டிகள் கவலையை அளிக்கும். சந்தை நிலவரத்திற்கேற்ப, உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது, அவசியம். சகக் கூட்டாளிகள், பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். வெளிமாநிலத் தொழிலாளிகளின் நியாயமற்ற கோரிக்கைள் பிரச்னைகளை ஏற்படுத்தும். உற்பத்திக்கு அவசியமான, மூலப் பொருட்களின் விலை திடீரென்று அதிகரிக்கும்.

கலைத் துறையினர்: கிரக நிலைகள் ஓரளவே சாதகமாக உள்ளன, இம்மாதத்தில்! “நிச்சயமாகக் கிடைக்கும்…!” என்று உறுதியாக நம்பியிருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும். வருமானத்தைவிட செலவுகளே அதிகமாக இருக்கும். எந்தச் செலவுகளையும் குறைத்துக் கொள்ள முடியாது. ஜென்மச் சனியின் தாக்கத்தினால், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். திரைப்பட நடிகர்கள் – நடிகைகள் “கால்ஷீட்” கொடுப்பது சிரமமாக இருக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு பிரதான அதிகாரியாக விளங்கும் சுக்கிரன், சனி பகவானுடன் சேர்ந்து, ஜென்ம ராசியில் திகழ்கிறார். அரசியல்வாதிகளுக்கு, மிகவும் அவசியமான அரசியல் தந்திரத்தைத் தந்தருள்கிறார், இம்மாதத்தில்! இதனையே “சாணக்கிய தந்திரம்” எனக் கூறுகின்றனர் அறிஞர்களும், பெரியோர்களும்!! இத்தகைய சாணக்கிய தந்திரத்தை சுக்கிரன் சற்று தாராளமாகவே அளித்தருள்கிறார். சமயோஜித புத்திசாதுர்யத்தினால், கட்சியில் உருவாகும் அரிய வாய்ப்புகளை உங்கள் எதிர்கால நலனிற்காகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மீண்டும் இத்தகைய அரிய வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று கூற முடியாது. வாழ்க்கையில் உன்னத சந்தர்ப்பங்கள் எப்போதோ சில தருணங்களில்தான் கிடைக்கும்.

மாணவ – மாணவியர்: தை மாதம் 5-ம் தேதி வரை கல்வித் துறைக்கு உரிய கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. தை மாதம் 6-ம் தேதியிலிருந்து, தேவையற்ற பிரச்னைகள் மன அமைதியை பாதிக்கும். பாடங்களில் கவனம் குறையக்கூடும். சக-மாணவர்களின் சொந்தப் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். நீங்களுண்டு; உங்கள் படிப்புண்டு என்றிருத்தல் உங்கள் எதிர்கால நன்மைக்கு ஏற்றதாகும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிபதியான செவ்வாய், இம்மாதம் முழுவதும் சுபபலம் பெற்றுத் திகழ்கிறார். கடின உழைப்பிற்குப் பரிசளித்தருள்வார், சுக்கிரனுடன் கூடிய சனி பகவான். கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெற வழி பிறக்கும். ஏழரைச் சனியின், ஜென்மச் சனிக்காலம் நடைபெறுவதால், இரவு நேரப் பணிகளின்போது, துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்வது நல்லது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பெண்மணிகள்: ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. வீண் அலைச்சல்களையும், தேவையற்ற வீண் கவலைகளையும் தவிர்த்தல் வேண்டும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள், அடிக்கடி விடுப்பில் செல்வது கூடாது. அலுவலகத்தில் நிர்வாகத்தினரைப் பற்றியும், மேலதிகாரிகளைப் பற்றியும் சக ஊழியர்களிடம் விவாதிக்க வேண்டாம். ஏனெனில், வாக்கு ஸ்தானத்தில், ராகு அமர்ந்திருக்கும்போது, நம் சொற்களே நமக்கு எதிரியாக அமையும் எனக் கூறுகின்றன, மிகப் புராதனமான ஜோதிட நூல்கள்.

அறிவுரை: கைப் பணத்தைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பேச்சிலும், செயலிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தரிசித்துவிட்டு வரவும்.

அனுகூல தினங்கள்
தை: 1-3, 9-11, 14-16, 20-23, 27-29.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 5 இரவு முதல், 8 காலை வரை.

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: முன்பே நாங்கள் கூறியுள்ளபடி, தற்போது உங்களுக்கு ஏழரைக் காலச் சனி நடைபெறுகிறது. ராசி நாதனாகிய, குரு பகவானால் அனுகூலமில்லை! சனி பகவானும் விரய ஸ்தானத்தில், அவரது ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறார். ஜென்ம ராசியில் பலம் வாய்ந்த ராகு நிலைகொண்டுள்ளார். ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. சிறு விஷயங்களுக்குக்கூட அதிக முயற்சியையும், அலைச்சலையும் ஏற்படுத்துவார்கள், சனி பகவானும், ராகுவும்!! வீட்டில் விலையுயர்ந்த ஆபரணங்களையும், பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்! வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூர்களுக்குச் செல்வதை இம்மாதம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். திருதீய ஸ்தானத்தில், குரு அமர்ந்திருப்பதால், பாடுபட்டு சம்பாதித்த பணம் பல வழிகளிலும் விரயமாகும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். புத்திர ஸ்தானத்தில், செவ்வாய் சஞ்சரிப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் அவசியம். பணம், ஆபரணங்கள், பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும் அவசியமாகும். லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் பலம் பெற்று சஞ்சரிப்பதால், உடல் உபாதைகள் எளிய சிகிச்சையினால் குணமாகும்.

உத்தியோகம்: அன்றாடப் பொறுப்புகளிலும், பணிகளிலும் கவனமாக இருத்தல் அவசியம். சக ஊழியர்களுக்கு, உதவிசெய்வதற்காக, ஜாமீன் கையெழுத்து போடுவது, கைமாத்தாக பணம் கொடுப்பது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். வெளியூர்ப் பயணங்களை கூடியவரையில் ஒத்திப்போடுதல் நன்மையளிக்கும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசி அன்பர்கள், இடைத்தரகர்களிடம் அகப்பட்டு பணத்தை இழக்க நேரிடும். வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் மீன ராசி அன்பர்கள், மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்தல் அவசியம். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், வேலையை இழந்து, தாய்நாடு திரும்பவேண்டிய சூழ்நிலை உருவாகக்கூடும். எந்நிலையிலும், உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் தவிர்த்தல் வேண்டும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசி அன்பர்கள், இடைத்தரகர்களை நம்பக்கூடாது.

தொழில், வியாபாரம்: புதிய முதலீடுகளையும், உற்பத்தியையும் அளவோடு வைத்துக் கொள்வது அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சந்தையில் நியாயமற்ற போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். அரசின் கொள்கைகள், உதவிகரமாக இருக்கும். கடனுக்கு பொருட்கள் அனுப்புவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. கூடியவரையில், வங்கிகளில் கடன் வாங்காமல் இருப்பது அவசியம். ஏனெனில், கிரகங்கள் இ்வ்விதம் அமையும்போது, வாங்கும் கடன் பன்மடங்காகப் பெருகும் எனவும் அதிலிருந்து விடுபடுவது, மிகவும் கடினம் எனவும் புராதன ேஜாதிட நூல்கள் தக்க உதாரணங்களுடன் விவரித்துள்ளன.

கலைத் துறையினர்: வாய்ப்புகளும், வருமானமும் குறையும். அலைச்சல் அதிகரிக்கும். சந்தர்ப்பங்களுக்காக, செல்வாக்கு நிறைந்தவர்கள், வாயிலில் சென்று நிற்கவேண்டியிருக்கும். கையில் உள்ளதைக் கொண்டு, குடும்பத்தை நடத்துவது நல்லது. அடிக்கடி, சிறு,சிறு உடல் உபாதைகளினால் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் சென்று வர கஷ்டமாக இருக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள் ஓரளவு உதவிகரமாக சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவு குறையாது. சில தருணங்களில் கட்சி மாறுவதற்கு ஆர்வம் மேலிடம். அவசர முடிவுகள் அனர்த்தத்தில் கொண்டு விடும். நினைவில் கொள்ளுங்கள்.

மாணவ – மாணவியர்: இம்மாதம் முழுவதும் கல்வித் துறைக்கு அதிகாரம் கொண்ட கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. சில தருணங்களில் ஏழரைச் சனியின் விளைவாக, ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும், கல்விமுன்னேற்றம் பாதிக்கப்படவாய்ப்பில்லை.

விவசாயத் துறையினர்: ஜென்ம ராசியில் ராகு! பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூமிகாரகரான செவ்வாய். விரயத்தில் சனி பகவான்! வயல் பணிகள் மிகக் கடுமையாக இருக்கும், சில தருணங்களில், தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படக்கூடும். பல சமயங்களில், தேவைக்கு அதிகமான தண்ணீர் வரத்தினால், பயிர்கள் சேதமடையும். அரசாங்க ஆதரவு தக்க தருணங்களில் உதவும். பழைய கடன்கள் அவ்வப்போது தொல்லை தரும். இருப்பினும், நல்ல விளைச்சலும், வருமானமும் சில மாதங்களுக்குப் பிறகே கிடைக்கும்.

பெண்மணிகள்: ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய மாதமாகும் இது. நெருங்கிய உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படக்கூடும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில், நீச்ச நிலையில் செவ்வாய் சஞ்சரிப்பதால், குழந்தைகளின் பிரச்னைகள் கவலையை அளிக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு வரன் அமைவது தடங்கல்கள் ஏற்படும். வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, வேலை கிடைப்பது தாமதமாகும். பொறுமை, நிதானம் அவசியம்.

அறிவுரை: கடின உழைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆேராக்கியத்தில் கவனம் வேண்டும், சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பரிகாரம்: திருநாகேஸ்வரம், திருக்கொள்ளிக்காடு, காளஹஸ்தி, நாகமங்களா இவற்றில் எது முடிகிறதோ, அவற்றிற்குச் சென்று, நெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும். பலன் கைமேல்! மேலே சொன்ன திருத்தலங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், உங்கள் வீட்டிலேயே நான்கு சனிக்கிழமைகள் மூன்று மண் அகல் விளக்குகளில் பசு நெய் அல்லது செக்கிலாட்டிய நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்தால் போதும்.

அனுகூல தினங்கள்
தை: 1, 2, 6, 7, 11-13, 17-19, 24-26, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்
தை: 8 காலை முதல், 10 இரவு வரை.