ஹலோ சத்தியமூர்த்தி .போதனா வைத்தியசாலை உங்க வீடா என்ன?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் என்ற காரணத்திற்காக அன்றி வேறு எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிரவேசிப்பது அனுமதிக்கப்படமாட்டாது என யாழ்.போதனா வைத்தியசாலையின், வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது என ஒரு செய்தியை அவதானிக்க முடிந்தது.
இந்த செய்தியை பார்த்த பிறகு எனக்குள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ஜுனா வடக்கில் ஒரு அரகலயவை ஆரம்பித்து வைத்துள்ளாரோ என தோன்றுகிறது. நான் அவரது ஆதரவாளர் அல்ல ஆனால் அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது இதுவரை இல்லாத ஒரு விழிப்புணர்வை மக்களிடம் அவர் கொண்டு வந்திருக்கிறார் என்பது மட்டும் வெளிப்படையாக புரிகிறது.
அவர் செய்யும் செயல்கள் ஒரு ஹீரோயிசமாக தெரிந்தாலும் அது போன்ற நிகழ்வுகள் , தென்பகுதி சிங்கள அரசியலில் முன்னர் பார்க்கக் கூடியதாக இருந்தது. உதாரணமாக மெர்வின் சில்வா மற்றும் பாலித தெவரப்பெரும போன்றவர்கள் இப்படியான செயல்களில் ஈடுபட்டு பாமர மக்களது பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்தவர்களாக மக்களிடையே வரவேற்பு பெற்றார்கள். உதாரணமாக பாலித தெவரப்பெரும சிங்கள மக்களிடையே பேரன்பை சம்பாதிக்க ஊழல்கள் அல்லது மக்கள் பிரச்சனைகளை, அந்த இடங்களுக்கு போய் பேசி வெளியே கொண்டு வந்தது தான் காரணமாக இருந்தது.
அதேபோன்ற ஒரு நிலையை தான் அர்ஜுனாவின் சில செயல்பாடுகள் என் கண்களுக்கு படுகிறது. அண்மையில் அரச பண ஒதுக்கீடுகளை வடக்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சரியாக பாவிக்காமல் திருப்பி அரசுகே அனுப்புவதாக அவர் வெளிப்படுத்திய தகவல்கள் , தமிழில் சொன்னதால்தான் தமிழர்களுக்கு தெரிய வந்தது. ஆனால் இது குறித்து முன்னரும் பாராளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதிகள் தெரிவித்தமை தமிழர்களுக்கு மொழி பிரச்சனை காரணமாக சென்று சேரவில்லை. இது ஒரு பாரம்பரிய தமிழ் அரசியல் நச்சு விளையாட்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதாவது தமிழர்களுக்கு தனி நாடு அல்லது சுயாட்சி கிடைக்காது போனால் தமிழ் மக்களுக்கு விடிவு இல்லை என தமிழர் முன் ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக செய்துவரும் கேடு கெட்ட அரசியல் தான் இவை. இது காலாகாலமாக நடந்தேறி வருகிறது. தமிழ் ஊடகங்கள் கூட ஒருபோதும் இவற்றைப் பற்றி வெளியில் எழுதியது இல்லை. காரணம் அவர்களது ஊடகங்கள் இவற்றை எழுதினால் , தமிழர்களால் புறம்தள்ளப்படலாம் எனும் அச்சமயாகும். தமிழ் ஊடகங்கள் எப்போதுமே தமிழ் தேசியத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தியே செய்திகளை வெளியிடுகின்றன. அதில் அவர்களது வியாபார சுயநலன்களுக்காக, உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இதை சிங்களவர்களும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இன்று நிலை வேறு!
பாராளுமன்றத்துக்குள் எதை பேசினாலும் வழக்குகள் வராது. எனவே பாராளுமன்றத்துக்குள் பேசும் கருத்துக்களை வெளியில் பேச அநேக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்வதில்லை. காரணம் அதையே பேசினால் அவர்கள் கைதாகலாம்.அது அநேகருக்கு தெரியாது.
இன்று அர்ஜுனா பாராளுமன்றத்தில் சில விடயங்களை பேச முற்பட்டபோது எதிர்க்கட்சியினால் அவர் பேசுவது தடுக்கப்பட்டதை பார்க்க முடிந்தது. ஆனால் அரச சார்பு அமைச்சரான விமல் ரத்னநாயக்க அவருக்கு சார்பாக சில கருத்துக்களை முன்வைத்து அவருக்குப் பேச விட வேண்டும் என்பது போல ஒரு ஒரு கருத்தை எழுந்து பேசியதை அவதானிக்க முடிந்தது. (சில வேளைகளில் அவருக்கு NPPக்கான ஒரு நேரத்தை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.) சிங்கள அரசியல்வாதிகளால் விபரம் தெரியாமல் பகிரங்கமாக பேச முடியாததை அர்ஜுனா பேசுவதற்கு இடம் அளிக்க வேண்டும் என நினைப்பதாகவே அது எனக்கு பட்டது. சிங்களவரை விட வடக்கில் உள்ள பிரச்சனைகள் உண்மையிலேயே தமிழ் அரசியல் தரப்புக்கே தெரிந்துள்ளது. ஆனால் அவர்கள் பேசுவது மக்களின் பிரச்சினைகளை அல்ல. அவர்கள் பேசுவது சுயாட்சி அல்லது காணி போலீஸ் அதிகாரங்களை மட்டுமே ஆகும்.
யாழ் வைத்தியசாலையில் இருந்து வெளியாகி உள்ள அறிவிப்பு, அந்த வைத்தியசாலை ஒரு தனிப்பட்ட மனிதரின் சொத்து போல நினைத்து அறிவிப்பொன்றை வெளியிட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. அது ஒரு அரச வைத்தியசாலை. அது ஒன்றும் தனியார் சொத்து அல்ல. அது மக்களின் சொத்து. எவரும் யாழ் வைத்தியசாலைக்கு அனுமதி பெற்று உள்ளே போக வேண்டிய தேவையில்லை. அப்படியான ஒரு அறிவிப்பை வெளியிடும் முன், அந்த அறிவிப்பை வெளியிடுவோர் அந்த வைத்தியசாலையை விட்டு வெளியேறி, தனியார் வைத்தியசாலை ஒன்றை அமைத்து செயல்படுவது சிறப்பாகும். அது ஒன்றும் அவர்களது வீடு அல்ல. இது அரசினர் வைத்தியசாலை ஆகும். இது மக்களின் வைத்தியசாலை ஆகும். மக்களால் தேர்ந்தெடுத்த பட்ட ஒருவர் வைத்தியசாலையில் உள்ள பிரச்சனைகளை ஆராய, அனுமதி பெற்று அல்லது நோயாளியாக உள்ளே நுழைய வேண்டிய தேவை உள்ளதா?
இது என்னவோ பாடசாலைகளுக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர்கள் வரும்போது, பிள்ளைகளை தயார் படுத்தி வைத்திருந்த பழைய காலத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது கூத்துக்கள் போல இன்னும் வளர்ந்து விட்ட இவர்களது செயல்பாடுகள் மாறாமல் இருப்பது போல நகைப்புக்கு உள்ளாக்குகிறது.
இவர்கள் வெளிநாடுகளில் போய் என்ன படித்தாலும், இவ்வளவு காலம் இருந்தாலும் , இவர்கள் வெளிநாடுகளில் ஒரு மண்ணையும் அனுபவமாக பெற்றவர்களாக நினைக்க முடியவில்லை. இவர்கள் வெளிநாடு போய், புலம்பெயர்ந்த மக்களது அல்லது களியாட்ட வீடுகளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்களோ என கேட்க தோன்றுகிறது. வெளிநாடுகளில் வாழ்வோராவது இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். காரணம் பக்கத்தில் உள்ள நல்லூர் கந்தனால் கூட இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க முடியாது.
நன்றி
ஜுவன்

