கிளிநொச்சியில் 13 வயது மகளை வல்லுறவுக்குள்ளாக்கிவிட்டு ஓடித்தப்பிய தந்தை!!
13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளார்
என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று
கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு வழங்கப்பட்டது.
சிறுமியும் அவரது தாயாரும் இந்த முறைப்பாட்டை வழங்கினர்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையே தன்னை மூன்று தடவைகள்
வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.
தாயார் வேலைக்குச் சென்றிருந்த வேளை தந்தை தன்னை அச்சுறுத்தி இவ்வாறு நடந்துகொண்டார்
என்றும் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் மருத்துவ சோதனைக்கு உள்படுத்தப்பட்டார். அவர்
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையை சந்தேகநபராக
இணைத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முதல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்காக
நாடுமுழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கிளிநொச்சிப் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.