புதினங்களின் சங்கமம்

இலஞ்சம் பெற்ற பாடசாலைப் பெண் அதிபர் விளக்கமறியலில்

றாகம, மத்துமாகல பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்தில் மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பெற்றோரிடம் 150,000/- இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அப்பாடசாலையின் பெண் அதிபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (08) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், மாணவரின் தாயிடமிருந்து தனது அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகைமைகள் இல்லாத காரணத்தினால் முறைப்பாட்டாளரின் பிள்ளையை பாடசாலையில் சேர்க்க முடியாது எனவும், உரிய இலஞ்சம் வழங்கினால் சேர்த்துக் கொள்ள முடியும் எனவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து சுமார் 260,000 ரூபா பணம் காணப்பட்டதாகவும், அவருக்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளது.