புதினங்களின் சங்கமம்

ட்ரோன்களால் விரட்டி விரட்டி கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்!! இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது (VIDEO)

பாலஸ்தீன போராட்டக்குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவரை கொன்றதாக இஸ்ரேல் வியாழன் இரவு அறிவித்தது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலிற்குள் ஹமாஸ் படையெடுப்பு நடத்தியதுடன், பணயக்கைதிகளையும் கைப்பற்றிய சம்பவத்திற்கு உத்தரவிட்ட சின்வார், தற்போது இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளார்.

புதன்கிழமை தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் துப்பாக்கிச் சண்டையில் சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மற்றும் ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது.

சின்வார் அங்கு தங்கியிருப்பதை அறிந்து, அவர் நேரடியாக குறிவைக்கப்படவில்லை. வியாழக்கிழமை காலை இஸ்ரேல் துருப்புக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, ​​சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று ஹமாஸ் போராளிகளில் ஒருவர் சின்வாரை ஒத்திருந்ததையடுத்து, அவரது விரல் வெட்டப்பட்டு டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பப்பட்டது.

பரிசோதனையில், அந்த நபர் சின்வார் என்பது உறுதியாகியது.

யாஹ்யா சின்வாரின் மரணத்தை ஹமாஸூம் உறுதி செய்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, காஸாவில் மூத்த ஹமாஸ் அதிகாரிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை சுட்டிக்காட்டிய பகுதிகளில் இஸ்ரேல் துருப்புக்கள்செயல்பட்டதாக இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 828 வது பிஸ்லமாச் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு குழு, சின்வாரையும் மற்ற இரண்டு போராளிகளையும் கொன்றது.