யாழில் குழுக்களின் பெயரில் காவாலித்தனம் செய்யும் காவாலிகள் கூண்டோடு இல்லாது செய்யப்படுவர்!! பொலிசார் எச்சரிக்கை!!
யாழ்ப்பாணக் குடாநாட்டில் செயற்படும் பல்வேறு பெயர்களிலான குழுக்கள் மற்றும் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம் என்று தெரிவித்தார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர.
இது தொடர்பாக நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
யாழ்ப்பாணம் மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் வாள்வெட்டுக் குழுவான ஆவாக் குழுவின் உறுப்பினராவார்.
இவர் வீடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தனது சகாக்களுடன் வாள்கள் மற்றும் கூரான ஆயுதங்களுடன் உந்துருளியில் வந்தார். இவர்களைப் பொலிஸார் சோதனைக்காக மறித்தபோது இந்த இளைஞரும் ஏனையவர்களும் தப்பியோடினார்கள். அதையடுத்தே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதன்போது துப்பாக்கிச் சன்னம் பட்டு குறித்த இளைஞர் உயிரிழந்தார்.
இவரும், இவருடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களும் பெரும் குற்றவாளிகள் எனப் பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தப்பியோடியவர்களில் மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை உயிரிழந்த இளைஞரின் ஏனைய சகாக்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம். அப்போதுதான் பதற்றம் இல்லாத நிலைமை அங்கு உருவாகும்.
யாழ்ப்பாணத்தில் ஆவாக் குழுவில் உள்ளவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர். அங்குள்ள இளைஞர்களே ஈவிரக்கமற்ற அடாவடிகளில் ஈடுபடுகின்றனர். பெற்றோர் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்-என்றார்.

