புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு பாடசாலை குடிநீர்த்தாங்கியில் அழுகிய நிலையில் குரங்குகளின் சடலங்கள்!! வீடியோ

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் குரங்குகளின் சடலங்கள் இனம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பாவனையில் இருந்து வரும் குடிநீர் தாங்கியிலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வரும் குறித்த பாடசாலையில், இவ்வாறான நிகழ்வு நடைபெற்றது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணவர்களுக்கான குடிநீர் சுகாதாரமாக வழங்கப்படாதது தொடர்பில் சகலரும் தங்கள் பொறுப்புக்களை சரிவர செய்திருக்கவில்லை.

அவ்வாறு செய்திருந்தால் குடிநீர் தாங்கியில் குரங்கு விழுந்து இறந்து அழுகியிருந்திருக்காது என பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியினை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் தவணை விடுமுறை முடிந்து மூன்றாம் தவணை கற்பித்தல் காலமாக பாடசாலைகள் இந்த வாரம் முதல் நாளில் இருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாடசாலையில் உள்ள குழாய் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்களால் ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. எனினும், அது தொடர்பில் அக்கறையற்று ஆசிரியர்கள் இருந்துள்ளனர்.

சில மாணவர்களால் இது தொடர்பில் பழையமாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படவே, நீர்த்தொட்டியை பரிசோதிக்க முடிவெடுத்துள்ளனர்.

அவ்வாறு பரிசோதித்த வேளை குடிநீர் தொட்டியின் மேல்பக்க மூடி திறந்துவிட்ட நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

குடிநீர்த்தொட்டியினுள் குரங்கு அழுகிய நிலையில் அதன் உடல் உருக்குலைந்து எலும்புகள் சிதறும் நிலையில் இருந்துள்ளதையும் காணமுடிந்துள்ளது.

என இந்நிகழ்வுடன் தொடர்புபட்ட பழைய மாணவர் ஒருவருடன் உரையாடிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் சில பெற்றோரும் மற்றும் பழைய மாணவர் சிலரும் இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அபயம், மற்றும் சுகாதார பிரிவினர், கல்வி சார் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தகவலைப் பெற்ற துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதோடு குறித்த பாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் இருந்து நீரை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறைசார்ந்த அதிகாரிகளின் விரைவான செயற்பாடுகள் தொடர்பில் திருப்தியடைந்த பாடசாலையின் நலன் விரும்பும் சமூகத்தினர் தங்கள் பாராட்டையும் அவர்களுக்கு தெரியப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மாணவர்களின் உடல்நல ஆரோக்கியம் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்க அவர்கள் சார்ந்துள்ள சமூகத்தினரின் பொறுப்பு வாய்ந்த நடவடிக்கைகளில் தங்கியுள்ளது.

இதில் யாரொருவர் தவறு விடும் போதும் மாணவர்களின் உடல்நல ஆரோக்கியம் பாரியளவிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும்.

பாதிப்புக்குள்ளாகும் உடல்நல ஆரோக்கியம் அவர்களது மன ஆரோக்கியத்திலும் மற்றும் கற்றல் திறனிலும் பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.இது வளமான எதிர்கால சமூகத்தின் தோற்றத்தை பாதிக்கும் என்பது திண்ணம்.

பாடசாலைகளில் சிறந்த சுகாதார நிலைமையினை பேணுவதில் கூடிய அக்கறை காட்டப்பட வேண்டும்.ஆயினும் அது இவ்வாறான செயற்பாடுகளால் கேள்விக்குள்ளாகிப் போவதனை தடுத்துவிட முடியாது.

அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதும் விரைந்து செயற்பட்ட துறைசார் அதிகாரிகள் பாராட்டப்பட்ட அதே நேரம் கேள்விக்குட்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய சூழலையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர் என்பதும் நோக்கத்தக்கது.

பாடசாலையில் சீராக சுகாதாரம் பேணப்பட்டு வருதல் தொடர்பில் அவர்களது கண்காணிப்பு தொடர்பில் அவர்கள் சரிவர கண்ணும் கருத்துமாய் செயற்படவில்லை என்றே கூறவேண்டியுள்ளதை அவர்கள் மறுத்துரைக்க முடியாது.

இரண்டாம் தவணைக்காலத்தில் குடிநீர் தாங்கியில் குரங்குகள் விழுந்துள்ளன. அவை நீரில் உடலழுகி எலும்பாகி வரும் வரை இதனை யாரும் கண்ணுற்றிருக்காத போக்கு எவ்வாறு சரிவர செயற்பட்டதாக கருத முடியும்?

இரண்டாம் தவணை முடிந்து பாடசாலைகள் பத்து வேலை நாட்களை விடுமுறையாக கொண்டிருந்தன.அ தன் பின்னர் இந்த வாரத்தில் மூன்றாம் தவணைக்காக மீளவும் பாடசாலைகள் செயற்படத்தொடங்கின.

இந்த கால அளவையும் குரங்கின் நிலையையும் அவதானிக்கும் யாரொருவருக்கும் நன்றே புலப்படும் நடந்து முடிந்த அசம்பாவிதம் தொடர்பில் பொறுப்பேற்க வேண்டியவர்களின் பொறுப்புணர்ச்சி எத்தகையதாக இருந்துள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

விடுமுறை விடும் போது பாடசாலையின் சகல பகுதிகளையும் மேற்பார்வை செய்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறான ஏற்பாடுகளால் பத்து வேலை நாட்களை கொண்ட பாடசாலை விடுமுறையில் பாடசாலையின் பயன்பாட்டு கட்டமைப்புக்களைப் பாதுகாக்க முடியும்.

அவ்வாறே, பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது, பாடசாலையின் எல்லா பகுதிகளும் மீளவும் சரிபார்த்து பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை, பாதுகாப்பை உறுத்திப்படுத்தும் வகையில் சரிப்படுத்தல்களை செய்து கொள்ள வேண்டும்.

அப்படி இருக்கும் போது குடிநீர் தொட்டியில் குரங்குகளின் சிதைந்த உடலை கண்டுபிடித்திருக்க முடியும்.அதனால் அதனை அகற்றி சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீரை மாணவர்களுக்கு வழங்கிக் கொள்ள முடிந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கே பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்விசார் அதிகாரிகள், பிராந்திய சுகாதார அதிகாரிகள் அவர்களை மேற்பார்வை செய்து கொள்ளும் அதிகாரிகள் இவர்களையும் பாடசாலையையும் தன்னுடைய ஒரு கூறாக கொண்ட இலங்கை அரசாங்கம் என எல்லோரும் தங்கள் பொறுப்புக்களை சரிவர செய்ய முற்படும் போது தான் மாணவர்கள் சுகாதாரத்தோடும் உரிய பாதுகாப்போடும் வளர்த்தெடுக்கப்படுவார்கள் என்பது திண்ணம்.

எனினும் இந்த பாடசாலை தொடர்பில், தொடர்ந்து பல தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதும், அத் தவறுகளை தடுத்து விடும் உருப்படியான எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை எடுத்ததாக உணரமுடியவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.