புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களின் திமிரை அடக்கிய வைத்திய அதிகாரி!! பரபரப்பு தகவல்கள்!!

தொழிற்சங்க மாபியாவின் கொட்டத்தை முதன்முதலில் அடக்கிய மருத்துவ நிர்வாகி
2020 காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலை தொழிற்சங்க மாபியாக்களின் நிர்வாக விதிமீறல்கள் காரணமாக அழிவின் உச்சத்தில் இருந்தது. இதனால் தென்பகுதியில் இருந்து வரும் பல மருத்துவர்கள் வாரத்தில் ஒன்றரை நாட்கள் மட்டும் -செவ்வாய் முதல் வியாழன்- வேலை செய்து கொண்டு இருந்தார்கள். இன்னும் சிலர் மாதத்தில் இரண்டு வாரங்கள் வருகை தந்து கொண்டிருந்தார்கள்.
இதன் உச்ச கட்டமாகக் குழந்தை நல மருத்துவ நிபுணர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வருவார். ஏனைய ஆறு நாட்களும் பிரத்தியேக வகுப்புகளை -வெளிநாட்டில் இருந்து மருத்துவக் கல்வியை முடித்து விட்டு வருபவர்களுக்கு இலங்கை மருத்துவ சபையினால் நடத்தப்படும் தகுதி காண் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயார் செய்யும் வகுப்புகள்- கொழும்பில் பல மாதங்களாக நடத்திப் பெரும் வருமானம் ஈட்டி வந்தார்,
நமது உள்ளூர் மருத்துவர்களும் தென்பகுதி மருத்துவர்களுக்குத் தாமும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் பலர் -மருத்துவ நிர்வாகிகள் உட்பட- காலை 10 மணிக்கு வேலைக்கு வந்து மதியம் 12 மணிக்கு வீட்டுக்கு போய் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே தலையைக் காட்டுவார்கள்.
ஆனால் பின்னர் மாத முடிவில் அனைவரும் மாதம் முழுவதும் வேலை செய்ததாகவும் அதை விட மாதம் 120 மணி நேரம் மேலதிக வேலை செய்ததாகக் கள்ளக் கணக்குக் காட்டிப் பல இலட்சம் ரூபாய்களை மோசடி செய்து கொண்டிருந்த காலம்.
தகுதி வாய்ந்த மருத்துவ நிர்வாகிகள் எவரும் முல்லைதீவில் இல்லாத இந்தக் காலகட்டத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் KARP ஜெயத்திலக என்னும் தென்பகுதி வைத்தியர் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுப், பணிப்பாளருக்காகப் பதில் கடமையாற்றப் பணிக்கப்பட்டார்.
அவர் பதவியேற்று சில நாட்களுக்குள் பாம்பு கடித்ததால் குழந்தை நல சிகிச்சைக் களத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறு பிள்ளை – வைத்தியசாலையில் குழந்தைநல மருத்துவர் காணப்படாத நிலையில்- உரிய நேரத்தில் நிபுணத்துவச் சிகிச்சை கிடைக்காததால் இறந்து விட்டது.
குழந்தையின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க அழுது புரண்டதைக் கண்ட பணிப்பாளர் என்ன ஏது என்று விசாரித்தபோது நடந்ததை அறிந்து கொண்டார்.
அடுத்து அதிரடி நடவடிக்கையாக உரிய அனுமதியோ முன்னறிவித்தலோ இன்றிக் கடமைக்கு வருகை தராத காரணத்தால், தாபன விதிக்கோவையின் படி, குழந்தை நல வைத்தியர் தாமாகப் பதவி விலகியதாகக் கருதிப் பதவி வெறிதாக்கல் கடிதத்தினை (vacation of post ) அனுப்பி விட்டார் . இதே காலப்பகுதியில் மாதத்தில் சில நாட்கள் தலை காட்டி சம்பளம் பெற்று வந்த இன்னொரு உள்ளூர் மருத்துவருக்கும் பதவி வெறிதாக்கல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கைகளை அடுத்து முதன்முதலாக முல்லைத்தீவு வைத்தியசாலை ஒழுங்காக இயங்கத் தொடங்கியது.
முதல் முறையாக GMOA மாபியாவின் உள்ளூர் தலைவர்கள் காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வேலைக்கு வர தொடங்கினர். ஏனைய மருத்துவர்களும் அனைத்து சுகாதார ஊழியர்களும் எடுக்கும் சம்பளத்துக்கு நேர்மையாக வேலை செய்ய தொடங்கி இருந்தார்கள்,
GMOA திரிசங்கு சொர்க்கத்தில் -கடும் சங்கடத்தில்- ஆழ்ந்து கைபிசைந்து நின்ற- ஒரே ஒரு தருணமும் இதுவாகவே இருக்கும் எனலாம். காரணம் தர்மவிரோதமாக [unethical] வைத்திய தொழிற் சங்கத் தலைவர்களில் ஒருவராகவும் மருத்துவ நிர்வாகியாகவும் இருக்கும்- வடக்கு மாகாண GMOA மாபியாக் கும்பலின் பெருந்தலை- ஒருவரே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அவ்வேளையில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். பணிப்பாளர் ஜெயத்திலக அனுப்பிய கடிதத்தினை மேலதிகாரிகளுக்கு அனுப்புவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவு எதுவும் இருக்கவில்லை. இல்லையெனில் unity is the strength, dignity என்ற மாய்மாலக் கதைகளைக் கூறி GMOA மாபியாக் கும்பல் தெருவுக்கு வந்திருக்கும்.
அவ்வாறிருக்கப், பதவியில் தாமாக விலகியதாகப் பணிப்பாளரால் அறிவிக்கப்பட்ட மருத்துவர்கள் இருவரும் மீண்டும் வேலையில் இணைந்து கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்கள். ஆனால் அது இலகுவாக இருக்கவில்லை.
வைத்தியர் ஜயதிலக்க வேலை செய்த காலம் GMOA மாபியாவுக்கு முல்லைத்தீவு சிம்மசொப்பனமாகவே இருந்தது. முதல் முறையாக ‘நேர்மையாக வேலை செய்யும் மருத்துவ நிர்வாகி தொழிற்சங்க மாபியாக்களுக்கு தலைவணங்கவோ அல்லது அடிபணியவோ தேவை இல்லை’ என்பதைத் தனது செயல்பாடுகளின் மூலமாகத் தெளிவாக அவர் நிரூபித்தார்.
12.8.2020 பதவியேற்ற வைத்தியர் ஜயதிலக்க 15.09 2020 வரை கடமையாற்றி தனது மருத்துவ நிர்வாக MD பட்டப் பின்படிப்பு கல்வியை பூர்த்தி செய்வதற்காக குறுகிய காலத்திலேயே வெளியேறியது முல்லைத்தீவு மக்களின் துரதிஷ்டம் என்றே கூறவேண்டும்.
நேற்றுக் குருநாகலுக்குக் கடமை நிமித்தம் சென்று இருந்த போது வைத்தியர் ஜயதிலகவை -அனைத்து பட்டப்பின் படிப்பையும் பூர்த்தி செய்த வைத்திய நிர்வாக விசேட வைத்தியராகக்- குருநாகல் மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் நிலையில் சந்தித்தேன். அவரே கடந்த காலத்தில் பட்டப்பின்படிப்பு நிலையத்தில் என்னிடம் இருந்து மருத்துவ புள்ளிவிபரவியலைக் கற்று அறிந்ததாக நன்றியுடன் நினைவு கூர்ந்த போது பெருமிதமாக இருந்தது.
Youtube முகநூல் மற்றும் சமூகவலைத்தளங்கள் எதையும் பயன்படுத்தாது, விளம்பரம் எதுவும் இன்றி, ஊழியர்களுடன் முரண்பாடுகளை அதிகரிக்காமல், அமைதியாக முழு முல்லைதீவு வைத்தியசாலையையையும் சில தினங்களுக்குள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவரது ஆளுமையும் நேர்மையான செயல்பாடுகளும் இன்று வரை அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவ நிர்வாகிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.
கால வெள்ளத்தில் அவருடைய சாதனைகள் அடிபட்டுப் போக கூடாது என்பதற்காகவும் முதுகெலும்பற்ற மருத்துவ நிர்வாகிகள் இவரது முன்னுதாரணத்தைப் பார்த்து இனியாவது திருந்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இதைப் பதிவு செய்கிறேன்.
நன்றி .
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்
15.8.2024

May be an image of 2 people