புதினங்களின் சங்கமம்

புலம்பெயர் தமிழ்க் காவாலிகளிடமிருந்து பணம் பெற்று யாழில் தாக்குதல் நடாத்திய காவாலிகள் கைது!!

வெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பணங்களை பெற்று யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் , வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மூன்று இளைஞர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 03 மோட்டார் சைக்கிள்கள் , இரண்டு வாள்கள் மற்றும் நான்கு பெற்றோல் குண்டுகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலுடன் சேர்ந்து இயங்கிய நபர் ஒருவர் தற்போது இலங்கையில் இருந்து தப்பி சென்று இந்தியாவில் வசித்து வரும் நிலையில் , வெளிநாட்டில் உள்ள நபர்கள் இந்தியாவில் உள்ள நபருக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் தாக்குதல் சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , அவர்களுடன் சேர்ந்து இயங்கிய நபர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.