யாழில் பஸ்சில் சென்று கொண்டிருந்த சாரதி, பயணிகள் மீது வாள் வெட்டு!!
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் , பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த பேருந்தில், கைதடி பகுதியில் இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர்
அரியாலை பகுதியில் அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்டுள்ளனர். அதன் போது , சாரதியும் , பேருந்தில் பயணித்த பயணி ஒருவரும் , அவர்களை சமரசப்படுத்த முயன்ற வேளை அவர்களுடனும் முரண்பட்ட இரு இளைஞர்களும் , திடீரென தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து , தாக்குதலை மேற்கொண்டு விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் சாரதி மற்றும் பயணி ஆகியோர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.