மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமி, மாமனார்: பதிவானது புரட்சிகர சம்பவம்!!
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தனது மகன் இறந்துவிட்டதால் விதவையான மருமகளுக்கு மாமி, மாமனாரே மறுமணம் செய்துவைத்த புரட்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரிலுள்ள கேபாலகாஜி கிராமத்தைச் சேர்ந்தவர் சுசிலா. இவருக்கும் குன்யக்கா மகன் மதவாவு என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் திருமண வாழ்க்கையை இனிமையாக கழித்து வந்த சூழ்நிலையில்ஒரு வாகன விபத்தில் மாதவாவு பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
அந்த நேரத்தில் சுசிலா வேறு கர்ப்பமாகவிருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சுசிலாவிற்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. இந்நிலையில் இளம் வயதிலேயே தன் மருமகள் விதவையானதை அவரது மாமி, மாமனாரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதனால், அவர்கள் தமது மருமகளுக்குத் தாமே வேறு மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
இதனை முதலில் சுசீலாவின் மாமியார் தான் முன்மொழிந்துள்ளார். ஆனால், அதற்கு சுசிலா சம்மதம் தெரிவிக்கவில்லை. குழந்தையின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் காரணம் காட்டி மறுத்து வந்தார். இறுதியாக அனைவரும் சேர்ந்து சுசிலாவின் மனநிலையை மாற்றிச் சுசிலாவை மறுமணத்திற்குச் சம்மதிக்க வைத்தனர்.
இதனையடுத்துச் சுசிலாவிற்கு ஜெயப்பிரகாஷ் என்பவர் மாப்பிள்ளையாகப் பார்க்கப்பட்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் இனிதே நடந்தேறியது. தற்போது ஜெயப்பிரகாஷூடன் வாழும் சுசிலா குழந்தையையும் தன் பராமரிப்பிலேயே வைத்த்துள்ளார்.
இதேவேளை, மாமி, மாமனாரே இளம் வயதில் விதவையான மருமகளுக்குத் திருமணம் செய்து வைத்த செய்தி வைரலாகப் பரவி வருகிறது. பலரும் இந்தப் புரட்சிகர மாமனாரைப் பாராட்டி வருகின்றனர்.