புதினங்களின் சங்கமம்

மனிதர்களின் சுவைக்காகச் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் வாத்துகள் !!(Photos)

“Foie gras” என்பது பிரசித்தி பெற்ற பாரம்பரிய பிரெஞ்சு உணவுகளிலொன்றாகவும் (Traditional delicacy in French cuisine), விலை கூடிய உணவு வகைகளில் ஒன்றாகவும் கருதப்படும் வாத்து ஈரலாகும். “Foie gras” என்றால் பிரெஞ்சு மொழியில் கொழுப்பு வாய்ந்த பெருத்த ஈரல் (Fatty Liver) என்று அர்த்தமாகும். சுகாதாரமற்ற, மிக நெருக்கமான கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் வாத்துகளின் (Geese அல்லது Ducks) இரைப்பைகளில் (Stomachs/Gizzards) பலவந்தமாக உணவைச் செலுத்தி, அதன் மூலம் கொழுப்பு வாய்ந்த வீங்கிய ஈரலைப் பெற்றுக் கொள்ளும் மனிதாபிமானமற்ற இத்தகைய வாத்து வளர்ப்பு முறையானது (Cruel and inhumane farming practice) தற்போது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

பலவந்தமாக மனிதர்கள், பறவைகள், விலங்குகளுக்கு உணவு ஊட்டப்படுகையில், வாயினூடாக அல்லது மூக்கினூடாகக் குழாயைச் செலுத்தி உணவை நேரடியாக இரைப்பையில் செலுத்தும் முறையானது “Gavage” என அழைக்கப்படுகிறது. இம் முறையைப் பின்பற்றியே வாத்துகளிலிருந்து பெருத்த ஈரல்கள் பெறப்படுகின்றன. பெரிய ஈரல்களை ஆண் வாத்துகள் உற்பத்தி செய்வதால் இந்த முறைக்கு ஆண் வாத்துகளே உபயோகிக்கப்பட்டிக்கின்றன. வாத்துக் குஞ்சுகள் பொரித்து மூன்று மாதங்களாகியதும், ஏறக்குறையக் கொல்லப்படுவதற்கு 12-18 நாட்களுக்கு முன் அவற்றிற்குப் பலவந்த உணவூட்டல் ஆரம்பிக்கப்படுகிறது. வாத்துகளை வளர்ப்போர் அவற்றின் வாயினூடாக உலோகக் குழாயை இரைப்பை வரை செலுத்தி, உலோகக் குழாயில் இணைக்கப்பட்டுள்ள சிறு இயந்திரத்தை அழுத்தி, 2 கிலோகிராம் வரை எடை வரையுள்ள சோளம், எண்ணெய், தண்ணீர், உப்பு ஆகியவை கொண்ட கலவையை இரைப்பையினுள் சில நொடிகளுக்குள் (Seconds) செலுத்துகின்றனர். இந்த எடையானது பொதுவாக வாத்தின் எடையில் 1/4 இலிருந்து 1/3 வரைக்குச் சமமானதாகும். இது போன்று ஒரு நாளில் சில தடவைகள், பொதுவாக 3 தடவைகள் வாத்துகளுக்குப் பலவந்தமாக உணவூட்டப்படுகின்றது. இவ்வாறு உணவூட்டப்பட்ட சில வாரங்களுக்குள், வாத்துகளின் ஈரல்கள் சாதாரண அளவிலிருந்து 10 மடங்குகள் வரை பெரிதாகின்றன. அதன் பிறகு வாத்துகள் கொல்லப்பட்டு அவற்றின் ஈரல்கள் அரிதான, அதி சிறந்தத உணவாகப் (Gourmet Food) பரிமாறப்படுகின்றது.

இயற்கையாக ஒரு வாத்தின் ஈரல் ஏறக்குறைய 50 கிராம் எடையைக் கொண்டது. Foie gras உணவிற்குத் தேர்வு செய்யப்படுவதற்கு ஈரலொன்று ஆகக் குறைந்தது 300 கிராம் எடையுடனிருக்க வேண்டும். பெரிதாகிய ஈரல்களுடன் இந்த வாத்துகளால் எழுந்து நிற்க முடிவதில்லை. அத்தோடு இவை வேதனைமிக்க “Hepatic Steatosis” அல்லது “Fatty Liver disease” எனப்படும் நோய்க்கு ஆளாகின்றன. பெரிதாகிய ஈரல் மற்றைய உள்ளுறுப்புகளைக், குறிப்பாகச் சுவாசப்பைகளைத் தள்ளுவதால் இவற்றால் ஒழுங்காகச் சுவாசிக்கவோ அல்லது நடக்கவோ முடிவதில்லை. பலவந்தமாக அதிகளவு உணவை உட்கொள்வதினால் பல வாத்துகளின் உள்ளுறுப்புகள் சிதைந்து (Organs ruptured from overfeeding) அவை சாவைத் தழுவுகின்றன.

Foie gras தேவைக்காகத் தற்போது நவீன வாத்துப் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் அவற்றின் உடம்புகளின் அளவை விடச் சற்றே பெரிதான, தனித் தனித் கூடுகளில், இன்னொரு வாத்துடன் சேர்ந்திருக்க முடியாதபடி அடைத்து வளர்க்கப்படுகின்றன. இவற்றால் இக் கூடுகளுக்குள் நடக்கவோ அல்லது தமது இறகுகளை விரிக்கவோ முடிவதில்லை. நாளின் 24மணி நேரங்களையும் இவ்வாறே கழிக்கும் இந்த வாழ்த்துகளுக்கு இக் கூடுகளிலுள்ள சிறு துவாரங்களின் மூலம் பலவந்தமாக உணவூட்டப்படுகிறது. சில பண்ணைகளில் ஒரு தொழிலாளர் 500 வாத்துகளுக்குத் தினமும் மூன்று வேளை பலவந்தமாக உணவூட்ட வேண்டி வருவதால், அவர்கள் அவசர அவசரமாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, ஏனோ தானோவென்று வாத்துகளின் தொண்டைக்குள் உலோகக் குழாயைக் கவனமில்லாமல் அவசரமாகச் செலுத்தி உணவூட்டுகிறார்கள். இதனால் வாத்துகள் துன்புறுத்தலுக்கு மாத்திரமன்றி, காயங்களையும், வலியையும் தினம் தினம் குறைந்தது மூன்று தடவைகளாவது அனுபவிக்கின்றன. அத்தோடு இங்கு வளர்க்கப்படும் வாத்துகளுக்குப் பாதங்களில் தொற்று நோய், சிறுநீரக இழைமங்களின் அழிவு (Kidney Necrosis), மண்ணீரல் (Spleen) சிதைவு, அலகுகள் (Bills) காயப்படுதல் அல்லது உடைதல், தொண்டையில் கட்டி வளருதல், உள் ரத்தக்கசிவு (Internal Haemorrhaging), பூஞ்சை மற்றும் பாக்டீரியா சார்ந்த தொற்று நோய் (Fungal and Bacterial Infections போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றன.

அத்தோடு நெருங்கிய கம்பிக் கூடுகளில் தனித் தனியே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வாத்துகள் மற்றைய வாத்துகளைக் கொத்தாமலிருப்பதற்காக, அவை பொரித்த குஞ்சுகளாக இருக்கும் போதே அவற்றின் அலகுகள் வெட்டப்படுகின்றன (Debilling/Debeaking/Beak Trimming). அதிகமான வேளைகளில், கவனமற்ற முறையில் அதிகளவு நரம்புகள் முடியும் பகுதிகளுடனேயே சேர்த்தே இவற்றின் அலகுகள் வெட்டப்படுவதாலும், அலகுகளின்றி இவற்றால் சாதாரணமாக உணவைக் கொத்தவோ அல்லது தமது இறகுகளைச் சீர்படுத்தவோ (Preening) முடியாததினாலும் இப் பறவைகள் உடல், உள வேதனையைத் தமது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கின்றன. இப் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகளில், சராசரியாக 20% ஆனவை உணவிற்காகக் கொல்லப்படும் தருணம் வர முன்பே இறந்து போகின்றன.

தற்போது Foie gras உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்பட்டு, உண்ணப்பட்டாலும், உலகிலேயே Foie gras-ஐ அதிகளவு உற்பத்தி செய்யும் நாடாகவும், அதிகளவு நுகரும் (Consume) நாடாகவும் பிரான்ஸ் (France) விளங்குகிறது. உணவுக்காக வளர்க்கப்படும் பறவைகளின் நலன்புரி அங்கத்தவர்களால் பறவைகளுக்குப் பலவந்தமாக உணவூட்டும் முறை பல காலமாகக் கண்டிக்கப்பட்டு வந்தமையால், 17 நாடுகளில் Foie gras-இன் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பிற்காக வாத்துகளை வளர்ப்பது 22 ஐரோப்ப நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும், Foie gras-ஐ விற்கவோ அல்லது இன்னொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவோ இந்த நாடுகளில் தடையில்லை. பல நாடுகளில் தகரக் குடுவைகளில் (Tins) அடைக்கப்பட்டு இந்த ஈரல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இடம் பெயரும் காலங்களில் பெரிய மீன்களை அப்படியே விழுங்கித் தமது எடையை வாத்துகள் மிகவும் கூட்டினாலும், அவற்றுக்குப் பாதிப்பெதுவும் ஏற்படுவதில்லை. அத்தோடு வாந்தியெடுக்கும் தன்மை (Gag Reflex) இயற்கையாகவே வாத்துகளுக்கு இருப்பதில்லை. எனவே பலவந்தமாக உணவூட்டுவதால் வாத்துகளுக்குப் பாதிப்பில்லையென Foie gras-ஐ விரும்பி உண்போர் வாதிடுகிறார்கள்.

*முதலிரண்டு பின்னூட்டங்களையும் காணவும்.

“Foie gras-Delicacy of Despair”
By PETA (People for the Ethical Treatment of Animals):
https://youtu.be/4nbwX-RQjNA

Foie gras Production:
https://youtu.be/WNyTRLSE-YA

No photo description available.