யாழில் பிள்ளையார் கோவிலில் ஆமிக்காரர்கள் தேர் இழுத்ததை பொறுக்க முடியாத இளைஞர்கள் உபதலைவரை கோடாரியால் கொத்தினார்களா? Photos
அச்சுவேலி உலவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உலவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய அச்சுவேலி உலவிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோடரி ஒன்றினால் குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கையில் பலத்த காயத்துக்கு உள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தபோது ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து வழி மறித்த கும்பல் இளைஞரை சராமாரியாக தாக்கியதில் குறித்த இளைஞன் கைகளில் பலத்த காயம் அடைந்தார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் இராணுவத்தினர் தேர் இழுப்பது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அண்மையில் ஆலயத்தை சுற்றி எல்லை வேலியிட முனைந்த போது, கிராம இளைஞர்களின் ஒரு பகுதியினர் தகராற்றில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடந்ததா என்றும் சந்தேகிக்கிப்படுகிறது.