திருகோணமலை நிலாவெளியில் கடலுக்குச் சென்ற இரு மீனவர்களுக்கு நடந்தது என்ன?
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்லி பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இயந்திரப் படகொன்று இதுவரை திரும்பாததால் அதனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை சல்லி பகுதியில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை (21.05.2024) இரவு இருவருடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கலைமகள் கடற்றொழிலாளர் சங்க இயந்திரப் படகு மறுநாள் திரும்ப வேண்டிய நிலையில் இதுவரை திரும்பாததால் அவர்களைத்தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புதன்கிழமை (22.05.2024) 7 படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டு அன்று இரவு திரும்பியுள்ளதாகவும், வியாழக்கிழமை (23.05.2024) அதிகாலை திருக்கடலூர் பகுதியில் இருந்து 9 படகுகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த படகில் மூன்று பிள்ளைகளின் தந்தையான குட்டிராசா சசிகுமார் (வயது 45), இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகையா சுஜந்தன் (வயது 32) ஆகிய இருவருமே மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சு, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் கடற்படையினருடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

