வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய மனைவியின் கழுத்தை வெட்டி படுகொலை செய்த கணவன்
மத்திய கிழக்கு நாடொன்றில் இரண்டரை வருட காலமாக பணிப்பெண்ணாக இருந்து வீடு திரும்பிய மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன், கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹசலக்க என்ற இடத்தைச்சேர்ந்த ஸ்ரீயாணி தயாரட்ன என்ற 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே, அவரது கணவரினால் கொலை செய்யப்பட்டவராவார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான டக்ளஸ் ஒபசேகர என்ற 49 வயது நிரம்பிய நபர், மனைவியை கொலை செய்த பின்னர், அச்சடலத்தை வீட்டருகாமையிலுள்ள வயல்வெளிக்கு இழுத்துச்சென்று, அங்கு குவிக்கப்பட்டிருந்த வைக்கோளுடன் போட்டு தீ வைத்துள்ளார்.
சடலம் முழுமையாக எரியாமல் அரைகுறையாக எரிந்த நிலையிலான சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மத்தியகிழக்கு நாட்டிலிருந்து, நாடு திரும்பிய குறித்த பெண், நேரடியாக தமது வீட்டிற்கு வராமல், கம்பளையிலுள்ள தமது தாய் வீட்டில் தங்கியிருந்து, ஒரு வாரத்திற்கு பின் நேற்று முன்தினம் ஹசலக்க என்ற இடத்திலுள்ள தமது வீட்டிற்கு வந்துள்ளார்.
அதையடுத்து, கணவருக்கும் மனைவிக்குமிடையில் வாய்த்தர்க்கமும், வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன. இவ் வாக்குவாதங்கள் முற்றியதினால், ஆத்திரமடைந்த கணவன், கத்தியொன்றினை எடுத்து, தனது மனைவியின் கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இது குறித்து ஹசலக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிஸார், வீட்டுக்கருகாமையிலுள்ள அரைவாசி எரிந்த நிலையிலான சடலத்தை மீட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட மனைவியின் கணவன், கொலைக்கு பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த நிலையிலான கத்தியுடன், ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலத்தை மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி எஸ். கோவிந்த ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து சட்ட வைத்திய விசாரணைகளை மேற்கொள்ள, மகியங்கனை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு கொண்டு செல்லுமாறும், சட்டவைத்திய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும், நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி பணிப்புரை வழங்கினார். ஹசலக்க பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கப்பில பண்டார, மேற்படி சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.