புதினங்களின் சங்கமம்

ஆவா காவாலிக்குழு தலைவனின் கூட்டாளி கௌசிகன் கொழும்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!! வீடியோ

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா கும்பல் உறுப்பினரான பிரபாகரன் கௌசிகன் கல்கிசை, யசோரபுர பகுதியில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் வெளிநாடு செல்லும் நோக்கில் அங்கு தங்கியிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபரிடம் இருந்து 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆவா கும்பலின் சின்னம் அடங்கிய துண்டுப் பிரசுரமும் கண்டெடுக்கப்பட்டது.

சந்தேகநபர் மல்லாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலியம்பனை பிள்ளையார் கோயிலடியை சேர்ந்த 25 வயதுடையவர் என வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஆவா கும்பலில் குன்சி தம்பா என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டவர் எனவும், 001 என்ற குறியீட்டு இலக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதானவர் ஆவா குழு தலைவர் என ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்த போதும், அவர் சில வருடங்களின் முன்னர் வரை ஆவா குழு ரௌடியாக இருந்தவர் எனவும், ஆவா குழு தலைவன் வினோத்தின் கூட்டாளியாக செயற்பட்டவர் எனவும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதே வேளை ஆவாகுழுக் காவாலிகள் தமக்கான வாள்களை உற்பத்தி செய்து வைத்திருக்கும் காட்சிகளை வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.