புதினங்களின் சங்கமம்

வடக்கு மாகாணத்தில் சித்தியடைந்த பாடசாலை அதிபர்களை பிளான் பண்ணி சந்தித்தாரா அமைச்சர்??

வடக்கு மாகாண கல்வியானது வடமாகாண கல்வி அமைச்சின் திருகுதாளங்களால் சீர்குலைந்து கொண்டு செல்வதாக பல்வேறுதரப்புக்களும் குற்றம் சாட்டி வருகின்றன. அண்மையில் வழங்கப்பட்ட அதிபர் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்குக் காரணமாக பல அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வடக்கு மாகாண அமைச்சிற்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடு அதிகரித்து காணப்படுவதாகவும் ஆளுநரிலும் பார்க்க அமைச்சரின் செல்வாக்குக்கு அதிகாரிகள் வால்பிடிப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இந் நிலையில் அண்மையில் அதிபர் நியமனங்களில் வழங்கப்பட்ட பாடசாலைகள் தமக்கு பொருத்தமில்லை என தெரிவித்து அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை அதிபர்கள் சந்தித்துள்ளனர்.

ஆளுரிடம் சென்று பலனில்லை என்று கருதிய காரணத்தால், தெரிவாகிய அதிபர்கள் டக்ளசிடம் சென்றுள்ளார்கள் என தெரியவருகின்றது. டக்ளஸ் இவர்களது நியமனங்களைச் சீர்செய்தால் இந்த அதிபர்கள் டக்ளசின் அடியாட்களாக மாறுவார்கள் என்பது உறுதி். கல்விக்குள் அரசியல் எவ்வாறு நுழைக்கப்படுகின்றது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்தி செய்யப்படும் எனவும், அரச சுற்று நிரூபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக அமைந்து விடும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் புதிதாக அதிபர் நியமனம் பெற்றுக் கொண்டவர்களுள் ஒரு பகுதியினர் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழில். உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிதாக அதிபர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் வெளி மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக வெளி மாவட்டங்களில் கடமையாற்றி இருப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைப்பதுடன், தம்மை சொந்த மாவட்டங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிபர்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் கேட்டறிந்த அமைச்சர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன், நியமனங்கள் அனைத்தும் நியாயமானதாகவும் சுற்று நிரூபங்களுக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மேலும், மனிதாபிமான காரணங்களையும் பரிசீலிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.