புதினங்களின் சங்கமம்

சிறைச்சாலையா? கொலைக்களமா??: யாழ். நகரில் நடந்தது என்ன? (Video,Photos)

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அண்மையில் சிறைச்சாலையில் மரணமடைந்த அரசியல் கைதி சகாதேவனின் மரணத்திற்கு நீதி கோரியும் யாழ். நகரிலுள்ள பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக நேற்றுத் திங்கட்கிழமை(01)  பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் வட்டுக் கோட்டைத் தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமான க. சுகாஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் மகளிர் அணியினர், சமூக நீதிக்கும் மேம்பாட்டுக்குமான மக்கள் இயக்கம் உள்ளிட்ட பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சிறைச்சாலையா? கொலைக்களமா??”, ” அரசியல் கைதி சகாதேவனுக்கு சிகிச்சை வழங்காது சிறைச்சாலை நிர்வாகமே சாகடித்தது! உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கியும்,  “சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும்”, “விடுதலை செய்…விடுதலை செய்….தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்!”, “ஜே. வி.பிக்கு ஒரு நீதி! தமிழர்களுக்கு வேறொரு நீதியா?”, ” இலங்கை அரசே! தமிழர்களைக் கொல்லாதே”, “பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே நீக்கு!” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை உரத்து எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியொருவரின் உறவினரான முதியவர் தரையில் படுத்தவாறு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தமை அங்கு நின்றவர்கள் மனதைப் பெரிதும் உருக்குவதாய் அமைந்திருந்தது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:-  செ. ரவிசாந்}