புதினங்களின் சங்கமம்

யாழில் பொலிசாரின் கொடூர சித்திரவதையில் உயிரிழந்த இளைஞனின் இறுதி வாக்குமூலம் இதோ!! வீடியோ

கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி அடித்து , சித்திரவதை புரிந்ததுடன் , பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பையொன்றினால் முகத்தை மூடி சித்திரவதை புரிந்தனர் என , பொலிஸாரினால் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞன் வைத்தியசாலையில் கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த  நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கு போலீசாரே காரணம். 
உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றம் சட்டி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞனின் வாக்குமூலம்.
அந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது , தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் ” என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.
பின்னர் எனக்கு குடிக்க சாராயம் தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள்.
பொலிஸாரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை. என தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
துணைக்கு சென்ற நண்பனும் கைது. 
அதேவேளை , உயிரிழந்த இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்தனர். அவர் தனியே செல்ல பயத்தில் நண்பர் ஒருவரையும் கூட அழைத்து சென்று இருந்தார்.
பொலிஸ் நிலையம் சென்ற இருவரும் வீடு திரும்பாததால் மறுநாள் 09ஆம் திகதி பொலிஸ் நிலையம் சென்று விசாரித்த போது , பொலிஸார் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.
இரண்டு நாட்களாக தேடி அலைந்தோம். 
பின்னர் 10ஆம் திகதியும் நாம் அவர்களை தேடி பொலிஸ் நிலையம் சென்ற போது உயிரிழந்த அலெக்ஸ்சின் கதறல் சத்தம் எமக்கு கேட்டது. நாம் அவரை காட்டுமாறு கோரிய போது , பொலிஸார் எம்மை மிரட்டி அனுப்பினார்.
 
மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 
அதனை அடுத்து நாம் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம்.
இரண்டு நாட்களின் பின் மன்றில் முற்படுத்தப்பட்டனர். 
அந்நிலையில் 10ஆம் திகதி உயிரிழந்த அலெக்ஸ் மற்றும் அவருக்கு உதவியாக சென்ற அவரது நண்பர் மீது , வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களவு சம்பவத்ததுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய போது, அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலையே இருந்தனர் என உறவினர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 
நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் அவர்களை தடுத்து வைத்திருந்த போது, அலெக்ஸ்சின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் , சிறைச்சாலை நிர்வாகத்தால் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணைக்கு பொலிஸ் குழு நியமிப்பு 
  சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னே மரணத்தின் காரணம் தெரியும். 
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x