Home புதினங்களின் சங்கமம் கள்ள விசாவில் கனடா செல்ல முற்பட்ட மட்டக்களப்பு நபருக்கு கட்டுநாயக்காவில் நடந்த கதி!!

கள்ள விசாவில் கனடா செல்ல முற்பட்ட மட்டக்களப்பு நபருக்கு கட்டுநாயக்காவில் நடந்த கதி!!

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்தநபர் இன்று காலை 08.15க்கு டுபாய் செல்லவிருந்த EK-653 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரது அனுமதிக்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் இருந்த கனேடிய விசா குறித்து சந்தேகம் கொண்ட விமானநிலைய உத்தியோகத்தர்கள், அவரை குடிவரவு மற்றும் எல்லை அமலாக்க பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இந்த விசா போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரை கைது செய்த குடிவரவு மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பிரிவினர் நடத்திய விசாரணையில், இந்த விசாவை தயார் செய்து தர தரகர் ஒருவரிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், கனடா சென்ற பின்னர் மேலும் 30 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.