கனடாவில் யாழைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் தற்கொலை முயற்சி! கோடிக்கணக்கான காசை ஏமாற்றிய சகோதரி!!
கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த குடும்பப் பெண்ணின் மூத்த சகோதரி யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார். கடந்த வருட தொடக்கத்தில் யாழ் அரியாலைப் பகுதியில் உள்ள காணி ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்வதற்காக யாழில் வசிக்கும் தனது சகோதரியை நம்பி 1 லட்சத்து 35 ஆயிரம் கனடா டொலரை 7 தடவைகளில் பகுதி பகுதியாக அனுப்பியதாகத் தெரியவருகின்றது. குறித்த பணத்தை கனடாவில் உள்ள பலரிடம் கடன் பெற்றே வாங்கி அனுப்பியுள்ளார்.
ஆனால் குறித்த காணியை யாழ்ப்பாணத்தில் உள்ள சகோதரி தனது பெயரில் பதிவு செய்துவிட்டு கனடாவில் உள்ள சகோதரி மற்றும் அவரது கணவனின் பெயரில் போலியான உறுதியை தயாரித்து அதனை அங்கு அனுப்பியதாக தெரியவருகின்றது. கடந்த மாதம் கனடா குடும்பப் பெண்ணின் கணவன் யாழ்ப்பாணத்துக்கு வந்து காணி தொடர்பாக ஆராய்ந்த போதே அந்தக் காணி தனது பெயரில் பதிவு செய்யாது தனது மனைவியின் சகோதரியின் பெயரில் பதிவு செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் பொலிசார் மற்றும் சட்டத்தரணிகளிடம் சென்றும் பலனில்லாது போனது. இதனையடுத்து கனடா சென்ற கணவர் மனைவியுடன் கடும் சண்டையிட்டுள்ளார்.மனைவியும் தனது சகோதரியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் பலனில்லாது போனது. அதன் பின்னரே குறித்த குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.