கஞ்சாக்காரர், கசிப்புக்காரர் என யாரையும் கேவலமாக சொல்லாதீர்கள்; கசிப்பை வெளிநாட்டிற்கு விற்று நல்ல லாபம் பார்க்கலாம்: இராஜாங்க அமைச்சர் டயான கமகே!!
மக்களை ‘கசிப்புக்காரன்’ மற்றும் ‘கஞ்சாக்காரன்’ என்று முத்திரை குத்தாமல், சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் கஞ்சா ஆகியவற்றை நல்ல தரத்தில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு அதிக டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மதுபானங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் தமது வீடுகளில் சட்டவிரோத மதுபானங்களை (கசிப்பு) வடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், அது 500 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.எனவே, சட்டவிரோத மதுபானங்களை வீடுகளில் வடிகட்டுவதை தடுக்க மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும் என்றார்.“மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு, கசிப்பு மற்றும் கஞ்சாவை பயன்படுத்துபவர்களை ‘கசிப்புக்காரர் மற்றும் கஞ்சாக்காரர்’ என்று முத்திரை குத்துகிறார்கள், மக்களுக்கு கசிப்பு மற்றும் கஞ்சாவின் மதிப்பு புரியவில்லை. இலங்கையிக் கசிப்பு ரஷ்யாவில் ‘வோட்கா’ மற்றும் ஜப்பானில் ‘சேக்’ போன்றது” என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.“தூய்மையான பழங்களை பயன்படுத்தி கசிப்பு வடித்தல் செய்யப்படுகிறது. இதை பெரிய அளவில் தரமான பொருளாக செய்தால், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அங்கிருந்து, நம்மால் நினைத்து பார்க்க முடியாத டொலர்கள் கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.இதை நான் நிச்சயமாக ஒரு பிரேரணையாக பாராளுமன்றத்தில் எழுப்புவேன். பொதுவாக, இதுபோன்ற திட்டங்களை நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவேன், என்றார்.

