போதைப்பொருள் குற்றவாளிகளை துாக்கிலிட மைத்திரி உத்தரவு!! 4 பேர் துாக்கில் !!
ஸ்ரீலங்காவில் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாவனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் அதற்கான அடுத்த கட்ட வேலைகளையும் ஆரம்பித்தார்.
மரணதண்டனை விதிப்பதற்கான அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்ப்பதற்கு நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. அதில் தெரிவு செய்யப்பட்டவர்க்கு அதற்கான பயிற்சியும் சமீபத்தில் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மைத்திரியின் இந்த அறிவிப்பிற்கு உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேசத்திலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபை இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி விரைவில் மரணதண்டனையை நிறைவேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நான்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சோபா உடன்படிக்கை மற்றும் அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளைத் தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையிலும் தாம் இந்த உடன்படிக்கைகளை எதிர்த்ததாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.