கிளிநொச்சியில் கருப்பை பிடுங்கப்பட்ட கர்ப்பவதி!! என்ன சத்திமூர்த்தி ஐயா… இப்புடிச் சொல்லிப் போட்டீங்க……
ஒரு வாகன சாரதியால் துாக்க கலக்கத்திலோ அல்லது சாராய வெறியிலோ அல்லது அதி வேகமாகவோ வாகனத்தைச் செலுத்தி விபத்துக்குள்ளாகின்றது. அந்த வாகனத்தில் இருப்பவர்கள் அல்லது தெருவால் செல்பவர்கள் பலியாகின்றார்கள். உடனடியாக வாகனச் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்படுகின்றான். சில வேளை வாகனச்சாரதியில் தவறு இல்லாது விட்டாலும் அல்லது வாகனத்தில் பிழை ஏற்பட்டு விபத்து நடந்தாலும் வாகனச்சாரதி கைது செய்யப்படுவது வழக்கம்.
வாகனச் சாரதிகள் தொடர்பாக நீதிமன்றில் ஒரு வழக்கு நடைபெற்றது. ஒரு வாகனச் சாரதி தெரு ஓரமாக சென்ற 70 வயதான முதியவர் ஒருவரை மெதுவாக இடித்துவிட்டான். முதியவரின் கால் முறிந்துவிட்டது. உடனடியாக அவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டான். வாகனச்சாரதிக்கு சார்பாக பிரபல சட்டத்தரணி பின்வருமாறு வாதாடுகின்றார் ” எனது தரப்பைச் சேர்ந்தவர் வாகனம் ஓடத் தொடங்கி 30 வருட அனுபவம் உள்ளவர். அவர் இதுவரை வாகனம் செலுத்தும் போது எந்த விபத்தும் ஏற்படவில்லை. முதியவர் அவதானமில்லாது வீதியில் சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது” எனக் கூறிக் கொண்டிருக்கும் போது முதியவர் சார்பாக ஆயரான சட்டத்தரணி எழுந்து பின்வருமாறு கூறுகின்றார். ”நீதிபதி அவர்களே….. எனது தரப்பைச் சேர்ந்தவருக்கு 70 வயது. அவர் ஒருவயதிலிருந்து நடந்து திரிகின்றார். அவரும் இதுவரை எந்தவிபத்திலும் சிக்கவில்லை” என கூறிவிட்டு இருந்தார்.
வன்னியில் இறுதி யுத்தம் நடந்து முடியும்வரை அப்பகுதியில் நின்று மருத்துவ சேவையாற்றியவர் தற்போதைய யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி. மிக நெருக்கடியான காலகட்டத்தில் அப்பகுதியை விட்டு வெளியேறாது சேவையாற்றிய அவர் தமிழ் மக்களால் போற்றப்பட்டவர். போற்றப்படவேண்டியவர்தான். அவர் மட்டுமல்ல யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளின் மத்தியில் சேவையாற்றம் ஒவ்வொரு மருத்துவர்களும் போற்றப்பட வேண்டியவர்கள்.
ஆனாலும் தற்போது வடக்கு கிழக்கில் சேவையாற்றும் சில மருத்துவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களாகவும் மக்களுக்கான சேவையை துஸ்பிரயோகம் செய்பவர்களாகவும் பல்வேறுபட்ட துஸ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அண்மையில் கர்ப்பவதி ஒருவருக்கு நடந்த சம்பவம் உட்பட அறுவைச்சிகிச்சையின் போது துணியை வைத்தமை, குழந்தைகள் பிறப்பின் போது உயிரிழந்தமை உட்பட பல வைத்தியத் தவறுகள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பாக வடக்கு மாகாண பணிப்பாளராக உள்ள சத்திமூர்த்தியின் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதனை கீழே இணைத்துள்ளோம்.

தச்சு வேலை செய்யும் போது ஆணிகளை அடிக்கும் போது சில ஆணிகள் நெளிந்து போவது வழமைதானே என்ற மாதிரி மிகச்சாதாரணமாக வைத்தியசாலையில் ஏற்பட்ட தவறுகளுக்கு விளக்கம் அளித்துள்ளமை பொதுமக்கள் மத்தியில் சத்தியமூர்த்தியின் செயற்பாடு தொடர்பாக கடும் விரக்தியும் கோபமும் ஏற்பட்டுள்ளது. ஒரு கர்ப்பவதிக்கு சிகிச்சை செய்யும் போது அவரது கருப்பை அகற்றப்பட்டமையை சாதாரண ஒரு தவறாக கருதி சத்தியமூர்த்தி கூறுவது சரியா? அத்துடன் அமெரிக்காவையும் அங்கு நடக்கும் தவறுகளையும் ஐயா ஒப்பிட்டு கூறியுள்ளமை மிகவும் நகைப்புக்குரிய ஒன்றாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
வைத்தியசாலையில் நடக்கும் தவறுகளுக்கு தனிநபரை மட்டும் குற்றஞ்சாட்ட முடியாது என மிகச் சுலபமாக கருத்துக் கூறியுள்ள சத்தியமூர்த்தி கிளிநொச்சி வைத்தியசாலையில் நடந்த தவறுக்கு யார் காரணம் என கண்டறித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்கமாட்டார் என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளார். அத்துடன் அவரது விசாரணை குழு சரியான முறையில் நடக்கும் என்பதும் சந்தேகமே.
உரும்பிராயில் செயற்படும் சுதேசவைத்தியரான ரகுராம் தொடர்பாக அவருக்கு எதிராக தனது சமூகவலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த சத்தியமூர்த்தி ஆங்கில வைத்தியதுறையில் நடக்கும் பித்தலாட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவை இழுத்துக் கதைத்துள்ளது வடிவேலுவின் திருவிளையாடல்கள போல் உள்ளதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையை அகற்றிய போது அந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றுக்குள் பத்துப் பேர் கை வைத்திருந்தார்களா?
அல்லது பிரேதபரிசோதனை நடக்கும் இடங்களில் சட்டவைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் வைத்தியசாலை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பிரேதத்தை அறுத்து வயிற்றில் உள்ள குடல்களை கீறி ஆராய்வதைப் போல் ஒப்பரேசன் தியேட்டருக்குள்ளும் டொக்டரின் மேற்பார்வையில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் கர்ப்பிணியின் கருப்பையை கிளறி எடுத்தார்களா?
பாதிக்கப்பட்ட தரப்பை அழைத்து நீங்கள் அமைத்த குழு கலந்துரையாடவுள்ளது என்ன? அவர்களுக்கு மருத்துவ அறிவு இல்லை என்பதை கண்டறியப் போறீர்களா? உதாரணமாக கருப்பை என்றால் என்ன? என்றும் கருப்பையின் விஞ்ஞான பெயர் உங்களுக்கு தெரியுமா? என்றும் கேள்வி கேட்கப் போகின்றீர்களா? கருப்பையை அகற்றி விட்டு பாதிக்கப்பட்ட தரப்பிடம் என்ன விசாரணை செய்யப் போகின்றீா்கள்?
ஒரு கருவை அழித்து ஒரு பெண்ணின் வாழ்கையை அழித்து ஒரு சந்ததியை துடைத்தழித்த கிளிநொச்சி வைத்தியதுறையைச் சேர்ந்த சம்மந்தபட்ட வைத்தியர் மற்றும் அவரது உதவியாளர்கள் மற்றும் குறித்த வைத்தியரைப் போல் உள்ள அனைவருக்கும் காலம் பதில் சொல்லும்……………..

