யாழில் மாணவி ஆசிரியரால் துஸ்பிரயோகம்!! நடவடிக்கை எடுக்காத அதிபர் மீது ஆளுநர் பாய்ச்சல்!! பதிவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்!!
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவர் அதே பாடசாலையின்
ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின்
பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிஸாருக்கு இதுதொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
குறித்த பாடசாலையின் அதிபரை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்வதற்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறும் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் குறித்த ஆசிரியரும் விசாரணைகள்முடியும்வரை சேவையிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் வடமாகாணத்தில் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறு மோசமாக நடந்து கொள்பவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும்
சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நீதித்துறையினூடாக அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டதோடு, வடமாகாண கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழுவொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்- என்றுள்ளது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய வியாபாரிமூலையைச் சேர்ந்த 46 வயதான ஆசிரியர்
பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.