புதினங்களின் சங்கமம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு !! தமிழ் அரசியல் கைதிகள்

எமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு என
தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு!!

மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் 20-06-2019அன்று காலை பத்து மணியளவில் நேரில் சென்றிருந்தார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் தன்னாலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்ததோடு அதன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளைச் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படை விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 95பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகள் கடந்த காலங்களில் ஆமை வேகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அரச சட்டத்தரணிகளின் பிரசன்னம் வழக்கு தவணைகளில் முறையாக இடம்பெறாதிருப்பதோடு, சில அரச சட்டத்தரணிகளின் கீழ்பணியாற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளே பிரசன்னமாகின்றமையாலும் வழக்குகளை விரைந்து நடத்துவதில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்திற்கு பாவனைக்கான நீரைப்பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் காணப்பட்டுகின்றது. ஆகவே குடிநீர் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக குழாய்கிணறு ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திவந்த மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கும், சுற்றுப்புறங்களில் நேரங்களை கழிப்பதற்குமான அனுமதிகள் அண்மைக்காலமாக தடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சிறைச்சாலை வைத்திய சாலையை விடவும் போதனா வைத்தியசாலைக்குச் செல்வதற்கான பாதுகாப்பினையும் அனுமதியையும் பெறுவதிலும் தாமதமான நிலைமைகள் நீடிக்கின்றன. அத்துடன் தாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது கூட்டமைப்பின் தலைவர் உட்பட அரசாங்கத்தரப்பினர் வாக்குறுதிகளை தந்து போராட்டங்களை கைவிடச் செய்ய வைக்கின்றபோதும் அதன் பின்னர் தமது விடுதலை குறித்து அரசியல் கொள்கை ரீதியாக முறையான தீர்வொன்று இதுவரையில் பெற்றுத்தரவில்லை.ஒக்டோபர் அரசியல் புரட்சியின் பின்னர் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த பத்து நிபந்தனைகளில் ஒன்றாக தமிழ் அரசியல் கைதிகள் விடயமும் ஒன்றாக இருக்கின்றபோதும் அதனை நடைமுறைச்சாத்தியமாக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை.

தற்போது எமது விடுதலை குறித்து எவ்விதமான கவனத்தினையும் எடுப்பதாக இல்லை.பல்வேறு விடயங்களுக்கான தீர்வுகளை பெறுவதற்கான சந்தர்பங்கள் ஏற்பட்டபோதும் அவற்றை கைவிட்டதன் காரணத்தினால் எமது விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆகவே இதற்குரிய பொறுப்பினை கூறவேண்டும் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்தனர் என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆட்சிக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திற்கு அரசியல் ரீதியான தீர்வொன்றை பெற திராணியற்று இருப்பதற்கான காரணம் என்ன என்பது தான் எனது கேள்வி என்றும் குறிப்பிட்ட அவர் தனது சக்திக்கு உட்பட்ட வகையில் இவ்விடயத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.