‘என்ர பிள்ளையில கைவைக்க எவனுக்கும் உரிமையில்லை’!! சனிமாற்றம் அப்போதே ஆரம்பித்தது!!
A/L பரீட்சைக்கு அண்மித்த காலம்வரை (19 வயதுவரை) என் பள்ளியின் உப அதிபர் முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை என்னைப் பலரும் அடித்தார்கள். பிரம்பினாலும் வாங்கியிருக்கிறேன். அவர்களின் கையினாலும் வாங்கியிருக்கிறேன். அவர்கள் பொழுதுபோக்குக்காக என்னை அடிக்கவில்லை. நான் செய்த தவறுகளுக்காக அடித்தார்கள். அவர்கள் சப்பாத்தே இல்லாதவனை அடிக்கவில்லை. சப்பாத்து வைத்துக்கொண்டு அணிந்துவராத என்னை அடித்தார்கள். வீட்டுப் பாடங்களை செய்துவராதமைக்கு அடித்தார்கள். பாடவேளைகளில் கன்ரீன் வாசலில் கண்டமைக்கு அடித்தார்கள். பிரார்த்தனை வேளைகளில் கதைத்து சிரித்தமைக்கு அடித்தார்கள். இந்த அடிகளைப் பற்றி வீட்டில் நான் முறையிட்டபோதெல்லாம் என் பெற்றோர்கள் அந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகவே பதிலளித்தார்கள். தாங்கள் செய்யவேண்டிய கடமைகளை அந்த ஆசிரியர்கள் செய்வதாய் மகிழ்ந்தார்கள்.
இது என்வீட்டுக் கதை மட்டுமல்ல… 1980/90களில் எங்கள் ஒவ்வொருவரின் கதைகளும் இதுதான். ஒரு ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவனும் பயப்பட வேண்டும். அவர்கள் முன் தவறுசெய்யத் தயங்க வேண்டும். ஒரு ஆசிரியர் வகுப்புக்கு வராத போதும் வகுப்பறை மேசையில் இருக்கும் தலைப்புச் சிதைந்த அந்தப் பிரம்புகூட அந்த வகுப்பை ஆட்சி செய்ய வேண்டும். இவையனைத்தும் மனித உரிமைகள் இல்லாத மிலேச்சத்தனமான ஒரு பிரதேசத்தில் அன்று நிகழவில்லை… எம் எண்ணங்களில் இன்றும் கோவிலாக மதிக்கப்படும் கல்விக்கூடங்களில் நிகழ்ந்தவை. இங்கே ‘தண்டிப்பு’ என்பது வேறு. ‘கண்டிப்பு’ என்பது வேறு. நாங்கள் கண்டிக்கப்பட்டோம் என்பதே உண்மை.
‘என்ர பிள்ளையில கைவைக்க எவனுக்கும் உரிமையில்லை’ என்ற குரல் எப்போது ஒலிக்க ஆரம்பித்ததோ அன்றுதான் உண்மையில் சனிமாற்றம் நிகழ்ந்தது. அந்த சனி உச்சம்பெற்ற நிலையில் அரிவாள், பொல்லு, கத்தி, போதைப் பொருட்களும் காட்சிக்கு வந்தன. இன்று அதிபரையே பிரம்பால் தாக்கிய ஈழத்து மாணவனின் செய்தியொன்று வாசித்தேன். சிறப்பாக இருந்தது. அமெரிக்கா போன்று “கைத் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த மாணவன் பலர்மீதும் வேட்டு” என்ற புதிய செய்தியையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
“புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டோம்” என்று சொன்ன விதைகள் ஒருவேளை இன்று முளை விட்டிருந்தாலொழிய மற்றப்படி சில சிஸ்டம்கள் திருத்தப்படக்கூடியன அல்ல.
(Copied)

