புதினங்களின் சங்கமம்

யாழில் வடிவேலு பாணியில் ஈ.பி.டி.பியின் ஐசியை வைத்து வர்த்தகரை வெருட்டிய தோழருக்கு நடந்த கதி!!

ஈ.பி.டி.பி அடையாள அட்டையை காண்பித்து வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி ஈ.பி.டி.பியின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கரவெட்டி பிரதேசசபையின் முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரே, வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்தே, ஈ.பி.டி.பி உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

கடையில் சிகரெட் வாங்கிய ஈ.பி.டி.பி உறுப்பினர், கடையின் பின்பக்கம் சிகரெட் புகைக்க முயன்றார். அதற்கு கடை உரிமையாளரான முதியவர் எதிர்ப்பு தெரிவித்து, கடையில் சிகரெட் புகைக்க வேண்டாமென்றார்.

இதை தொடர்ந்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஈ.பி.டி.பி உறுப்பினர் தன்னை ஹெல்மெட்டினால் தாக்க முயன்றதாகவும், ஈ.பி.டி.பி அடையாள அட்டையை காண்பித்து, கடையை நடத்த விடாமல் செய்வேன், தூக்குவேன் என மிரட்டியதாக முதியவர் பொலிசாரிடம் முறையிட்டார்.

இதையடுத்து ஈ.பி.டி.பி உறுப்பினர் கைதாகினார்.

இரு தரப்பினரும் சமரசமாக விவகாரத்தை தீர்க்க இணங்கியதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.