புதினங்களின் சங்கமம்

யாழில் தந்தையின் செத்தவீட்டிலிருந்து சுடலைக்கு போகும் போது கனடா மகனுக்கு வந்த கோபம்!!

அண்மையில் செத்த வீடு ஒன்றுக்குப் போயிருந்தேன். இறுதி ஊர்வலம் ஆரம்பித்து வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரம் வரும் போது ஒரு முச்சந்தி வந்தது. உச்சி வெய்யில் நேரம்.
பறைமேளமும்,பாண்ட்டும் மாறி மாறிப் போட்டி போட்டு அடிக்க ஆரம்பித்தார்கள்.
தந்தைக்கு இறுதிக் கிரியை செய்யக் கனடாவிலிருந்து வந்த மகன்களில் ஒருவர் தன்மையாகச் சொன்னார் “இப்படி அடிக்காதீர்கள். விரைவாகச் சுடலைக்குப் போங்கள்”
மேளகாரருக்கோ மேளத்தில் சொருகிய 500 ரூபா 1000 ரூபாத் தாள்காரர் தான் தேவை என இவரது பேச்சைக் கேளாமல் இன்னுமின்னும் உசாராக அடித்தார்கள். கனடா மகனுக்குக் கோபம் வந்து தனது வீட்டிற்குத் திரும்பி நடந்தார்.
அவரைப் போகவிடாமல் மறித்துத் திருப்பிக் கொண்டு வந்தார்கள்.
இருபது நிமிடங்கள் வரையில் வீதியில் வைத்து மேளம்,பாண்ட் அடித்தார்கள். அந்த முச்சந்தியைக் கடக்க நானும் மோட்டார் சைக்கிளை ஓடி வீட்டுக்கு வந்து விட்டேன்.
இப்போதெல்லாம் இது போன்ற அசிங்கங்கள் பரவலாக நடக்கின்றது. இதனால் சுடலைக்குப் போவதை நிறுத்தி விட்டேன். நேரம் பொன்னானது. என் போலப் பலரும் இப்படி நடக்கின்றனர்.
2011 இல் எனது அப்பா காலமாகிய போது பறைமேளகாரருக்குச் சொன்னேன் “ ஒரு இடமும் இல்லாமல் மேளம் அடித்தபடியே நேரே சுடலைக்குச் சென்று விட வேண்டும்.
இடையில் நின்று 500 ரூபா தருவோருக்காக அடித்தால் மேளக்காசு தர மாட்டேன். அது மட்டுமல்ல எமது உறவுகளின் செத்த வீடுகளில் உங்களது மேளத்தைப் பிடிக்க விடாமல் தடுப்பேன்”
என் சொல் கேட்டு மேளகாரர் நடந்தார்கள். இது போலக் கட்டுப்படுத்தலாம் தானே. அடுத்தவருக்கு இடையூறு செய்யாமல் நன்மைகளால் வாழ்வை நிறைத்தவர் எனது தந்தை.இறுதியாகப் போகும் போதும் இடையூறு இல்லாமல் போனார்.
-//உண்மையில் நாம் செய்யும் முதலாவது நன்மைக்காரியம் என்னவென்றால் அடுத்தவருக்குத் தீங்கு இல்லாமல் வாழ்வது தான் //-
நன்றி
வேதநாயகம் தபேந்திரன் பேஸ்புக் பதிவு