புதினங்களின் சங்கமம்

15 வருடங்கள் அரசியல் கைதியாக சிறைக்குள் இருந்து வெளியே வந்த இஞ்சினியர் ஆரூரன் பயங்கரமான சிறை அனுபவத்தை கூறுகின்றார். கேளுங்கள்!!

பா.நிரோஸ், ஊடகவியலாளர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறி, கைது செய்யப்பட்டு 15 வருடங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் ஆரூரன் பௌர்ணமி நிலவைப் பார்க்க வேண்டுமென ஆசையாக இருப்பதாக கூறுகிறார்.

இணைய ஊடகமான ஒருவனுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு கொழும்பு பித்தளை சந்தியில் வைத்து அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 2008ஆம் ஆண்டு சிவலிங்கம் ஆரூரன் கைது செய்யப்பட்டிருந்தார்.

15 வருட மோசமான சிறை வாழ்க்கைக்குப் பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு அண்மையில் ஆருரன் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

Sivalingam Aruran
Sivalingam Aruran

உங்களின் குடும்பப் பின்னணி பற்றி கூறுங்கள்?

அப்பா பொறியிலாளர், அம்மா வீட்டில் இருக்கிறார். வீட்டில் மொத்தம் எட்டுப் பிள்ளைகள் நான் இரண்டாவது பிள்ளை. சகோதரர்கள் ஐவரும் அரச உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.

நான் கைது செய்யப்பட்டப் பின்னர் எனது தம்பி ஒருவர் கனடா சென்றுவிட்டார். அவரே வீட்டுப் பொறுப்புகளையும் எனது வழக்குக்கான செலவுகளையும் பார்த்துகொண்டார்.

எப்படி கைது செய்யப்பட்டீர்கள்?

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதுதான் எனக்கு அப்போதிருந்த ஆசை. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பை நிறைவு செய்துவிட்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கற்றுக்கொண்டிருக்கும்போதே கைது செய்யப்பட்டேன்.

இப்படியிருக்க, 2008.24.03 அன்று மொறட்டுவ சொய்சாபுரத்தில் வைத்து ஏழு, எட்டு பொலிஸார் என்னை கைது செய்தார்கள். என்னோடு பலரும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.

நான் கைது செய்யப்பட்டபோது எனது கண்களைக் கட்டியே ஜீப்பில் ஏற்றிச் சென்றார்கள். எதற்காக கைது செய்யப்படுகிறேன், என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எதுவும் புரியவில்லை. கொழும்பு – கிரேன்பாஸ் பொலிஸாரே என்னை கைது செய்திருந்தார்கள்.

மொறட்டுவ துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்திருந்தார்கள்.

Books written by Aruran
Books written by Aruran

முதன்முறையாக உங்களை வீட்டிலிருந்து வந்து பார்த்தவர்கள் தொடர்பில் நினைவிருக்கிறதா?

அதை எப்படி மறப்பேன்! கைது செய்யப்பட்டு ஒருவாரத்துக்குப் பின்னர் அப்பா என்னை கிரேன்பாஸ் பொலிஸ் நிலையத்தில் வந்து பார்த்தார்.

பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததுமே அழுதுவிட்டோம். அப்பாவின் அழுகை இன்றும் நினைவில் இருக்கிறது.

அழுதுகொண்டே அடித்தார்களா? என சைகைமூலம் கேட்டார். அடித்தார்கள் என்று சொன்னால் அப்பா கஸ்டப்படுவார். அடித்ததாக கூறிவிட்டால் மறுபடியும் அடிப்பார்கள் என்பதால், இல்லை என அழுதுகொண்டே நானும் சைகை செய்தேன்.

ICRC அதிகாரிகள் என்னைப் பார்க்க வரும்போது அடித்ததாக கூற முடியாது. கூறிவிட்டால் பிறகு என்ன நடக்கும் என நினைப்பதற்கே பயமாக இருக்கும்.

Aruran with lawyer Thavarasa
Aruran with lawyer Thavarasa

கோட்டாவின் கொலை முயற்சி தொடர்பில் அறிந்து வைத்திருந்தீர்களா? இச்சம்பவம் நடக்கும்போது எங்கு இருந்தீர்கள்?

இது தொடர்பில் பத்திரிகைகளில் வாசித்த நினைவு இருக்கிறது. அப்போது நான் கிளிநொச்சியில் இருந்தேன்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை எவ்வாறு பெற்றார்கள்?

இரு கைகளையும் பின்னால் கட்டி கயிற்றில் தொங்க விட்டார்கள். கை மூட்டுகள் நோகும். உயிர்போகும் அளவுக்கு வலிக்கும்.

நாற்காலியில் கட்டிவைத்து தொடையில் அடித்தார்கள். குதிகாளில் அடித்தார்கள். இப்படி பல சித்திரவதைகளை செய்தே அதனை பெற்றார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெறுவதற்கு முன்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) கூட்டிச் சென்று உடலில் காயங்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Books written by Aruran
Books written by Aruran

ஆனால், இந்த நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை முன்கூட்டியே பெற்றுவிடுவார்கள்.

நீண்ட நாட்கள் சென்றப் பின்னரே சட்ட வைத்திய அதிகாரியிடம் கூட்டிச் செல்வார்கள். அப்போது எங்களை சித்திரவதை செய்தமைக்கான காயங்கள் உடலில் இருக்காது.

எனக்கும் அப்படிதான் செய்தார்கள். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் என்னைக் கைது செய்து, 2009ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்கள் என இருதடவைகள் சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுகொண்டார்கள்.

ஆனால், 2009ஆம் ஆண்டு ஜூன் 24, 25ஆம் திகதிகளில் சட்ட வைத்திய அதிகாரியிடம் என்னை கூட்டிச் சென்றார்கள்.

அப்போது எதற்காக என்னை இருதடவைகள் வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள் என்பது புரியவில்லை.

Awards received by Aruran
Awards received by Aruran

வழக்கு விசாரணைக்கு வரும்போதே எனக்கு சில விடயங்கள் புரியும்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே எனக்கு எதிரான சாட்சியமாக இருந்தது. குண்டுவெடிக்கும்போது நான் அங்கு இருந்ததாகவோ என்னை அங்குப் பார்த்ததாகவோ எந்தவொரு சாட்களும் இல்லை. இதனை அடிப்படையாக வைத்தே என்னை 15 வருடங்கள் சிறையில் தடுத்து வைத்திருந்தார்கள்.

இவ்வாறிருக்க இந்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது என்னிடம் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சித்திரவதை செய்தே பெறப்பட்டது என்பதை உண்மை விளம்பல் விசாரணையின்போது நீதிமன்றத்தில் நிரூபித்தோம்.

Books written by Aruran
Books written by Aruran

ஆனால், அரச தரப்பு சட்டத்தரணி வேறு சாட்சியங்களை தேடுவதற்கு ஒரு மாதம் தேவை என கால அவகாசத்தைக் கேட்டார். அவ்வாறு கேட்கவில்லை என்றால், நான் அப்போது விடுதலை செய்யப்பட்டிருப்பேன்.

சிறைச்சாலையில் எந்த மாதிரியான நிலைமைகளுக்கு முகங்கொடுத்தீர்கள்?

உயிரோடு உன்னை முதலைக்கு வீசுவோம் என மிரட்டுவார்கள். கடுமையாக அடிப்பார்கள். பொதுவாக விசாரிக்கப்படும்போது இவ்வாறே நடந்துகொள்வார்கள்.

ஆனால், விசாரணை முடிவடைந்ததும் நல்லவர்கள்போல பொலிஸார் பழகுவார்கள். என் மீது பரிதாபமாக இருப்பதாக காட்டிக்கொள்வார்கள்.

என்னிடமிருந்து ஏதாவது தகவலைப் பெறுவதற்கே இவ்வாறு நடந்துகொள்வார்கள். சில நல்ல பொலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். சிறைச்சாலை அதிகாரிகள் கூட நல்ல குணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்கு (CRP) மாற்றப்பட்டப் பின்னர், முதன்முறையாக வழக்கு விசாரணைக்கு சென்று சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பியபோது அங்கிருந்த தமித் என்கிற பொலிஸ் அதிகாரி என்னை பலமாகக் கண்ணத்தில் அறைந்தார். இதனால் கனகாலம் காது அடைத்திருந்தது.

Books written by Aruran
Books written by Aruran

உங்கள் வாழ்க்கையில் 15 வருடங்களை நாசம் செய்த பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் என்ன சொல்கிறீர்கள்?

இதுவொரு காட்டுச் சட்டம் என விமர்சிக்கிறார்கள். இந்த சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டப் பலர் இன்னும் சிறையில் இருக்கிறார்கள்.

1979ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. நான் பிறந்தது 1980ஆம் ஆண்டு. இந்த சட்டம் கொண்டுவரும்போது நான் பிறக்கவில்லை என்றாலும் இச்சட்டத்தால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

ஏன் வசந்த முதலிகேவைக்கூட இச்சட்டத்தால் கைது செய்து வைத்திருந்தார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்போம் என என்னதான் எதிர்க்கட்சியில் இருக்கும்போது அரசியல்வாதிகள் கூச்சலிட்டாலும், அதிகாரத்துக்கு வந்தப் பின்னர் இச்சட்டத்தை ஒழிக்க மாட்டார்கள்.

தங்களை எதிர்ப்பவர்கள் எவரையும் இந்த சட்டத்தால் அடக்கவிட முடியும். இதனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த சட்டம் பெரும் பலத்தை கொடுக்கிறது.

Books written by Aruran
Books written by Aruran

15 வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

நான் சிறைச்சாலைக்கு செல்லும்போது இருந்த நாணயத்தாள்கள்கூட இப்போது இல்லை. 5000 ரூபாய்க்கு தாள் வந்துவிட்டது. 500, 100 ரூபாய் தாள்கள் எல்லாம் சிறியதாக இருக்கிறது.

சிறைச்சாலைக்குள் பெண்களை எங்களால் பார்க்க முடியாது. பெண்கள் மட்டுமல்ல குழந்தைகள், முதியவர்கள், சிறியவர்கள் ஏன் ஆடு, மாடு, நாய் கூட பார்க்க முடியாது. சிறைச்சாலையில் பூனைகள் மட்டும் இருக்கும்.

விடுதலையாகி வெளியில் வந்து பஸ்களில் செல்லும்போது பெண்களைக் பார்க்கும்போது வித்தியாசமாக உணரச் செய்கிறது. அதுபோல வயதானவர்கள், குழந்தைகளை பார்க்கும்போது ஏதோ புதிதாகப் பார்ப்பதாக தோன்றுகிறது.

உங்களுக்கு ஒன்றை கூற வேண்டும். 15 வருடங்களுக்குப் பின்னர் குழந்தையை தூக்கி மடியில் வைத்திருந்தேன். சகோதரியின் மகனுக்கு மொட்டையடித்தார்கள். அப்போது மருமகனை தூக்கி மடியில் வைத்திருந்தேன்.

எதை ரொம்ப மிஸ் செய்கிறீர்கள்?

பௌர்ணமி நிலவு என சட்டனெ பதிலளித்தார் ஆருரன். பௌர்ணமி நிலவைப் பார்க்க வேண்டும். சிறையில் அதனை பார்க்க முடியாது.

சிறைச்சாலைக்கு செல்லும் முன்பாக உங்களுக்குக் காதல் இருந்ததா?

காதல் என்று இல்லை. ஆனால் கிரஷ் இருந்தது என கூறி சிரிக்கிறார்.

புத்தகம் எழுத வேண்டும் என எப்படி தோன்றியது?

கைது செய்யப்பட்ட ஆரம்பத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் என்னைப் பார்க்க சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) அதிகாரிகள் வந்து செல்வார்கள்.

ICRC அதிகாரியே நான் சிறையில் இருந்தபோது புத்தங்களை வழங்கி என்னை படிக்கக் கூறினார். சிறையில் வேறு வேலைகள் இல்லை என்பதால் புத்தகங்களை அதிகமாகவே வாசித்தேன்.

அதன் பின்னர் சிறுகதைகளை எழுத என்னோடு இருந்த சக சிறைக் கைதிகள் ஊக்கப்படுத்தினார்கள்.

7 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட சிறையில் ஆரம்பத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். இப்படி ஒரு இடத்தில் புத்தக வாசிப்பை தவிர வேறு பொழுதுபோக்கு இல்லை.

Books written by Aruran
Books written by Aruran

சிறைச்சாலையில் இருந்துகொண்டு 11 புத்தகங்களை இதுவரையில் எழுதியிருக்கிறேன்.

ஒன்பது புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு புத்தகங்களை வெளியிட வேண்டும். இப்போது பணமில்லை ஆனால், எதிர்காலத்தில் வெளியிடுவேன்.

வலசைப் பறவைகள், ஊமை மேகம், ஆதுரசாலை, பூமாஞ்சோலை, யாழிசை, யாவரும் கேளீர், The Innocent Victims, வெண்மேகத்தின் பாதை, மௌனத்தின் சலனம், ஆகிய புத்தகங்களே இதுவரையில் எழுதியிருக்கிறேன்.

அடுத்து என்ன ஐடியா?

15 வருடங்களை சிறையில் தொலைத்துவிட்டு வந்திருக்கிறேன். குழந்தைகள் கூட போனில் எதை எதையோ செய்கிறார்கள். எனக்கு இதெல்லாம் புதிதாக இருக்கிறது. போனை எவ்வாறு பயன்படுத்துவதென பழக வேண்டும் முதலில்.

இப்போது 43 வயது, இனி அரச வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

15 வருடங்கள் சிறைச்சாலையில் இருந்துவிட்டு வந்த எனக்கு வெளியில் வேலை கிடைக்குமா? எனது பட்டப் படிப்பு சான்றிதழை என்ன செய்ய? சொந்த முயற்சியில் எதையாவது செய்ய வேண்டும்” என்றார்.