வீட்டினுள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி நாய்க்குட்டிகளை திருடிச் சென்ற வாள்வெட்டுக்குழு!
வவுனியா கூமாங்குளம் பகுதியில் வாள்களுடன் சென்ற நபர்களால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், நாய்குட்டிகளும் கடத்திச்செல்லப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார்சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்துவிட்டு, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் குற்றத்தடுப்பு பிரிவினர் சிசிரிவி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

