தையிட்டி விகாரை விவகாரம்!! ஆறிய கஞ்சி பழங் கஞ்சி…..
வானுயர கட்டுமானப் பணிகள் நடக்கும் வரை பொறுமை காத்த நாம், திறப்பு விழாவில் பொங்கி எழுந்திருக்கிறோம். குருந்தூர் மலை விவகாரம்கூட ஆரம்ப கட்டத்தில் அத்தனை எதிர்ப்புக்களை வழங்கியிருந்தோம், ஆயினும் அத்தனை தடைகளையும் மீறி பிரமாண்டமான விகாரை இப்போது கட்டப்பட்டிருக்கிறது, இதனை எதிர்த்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விளைவு அது இன்று சட்ட விரோத கட்டடமாக இருக்கிறது. தையிட்டி விடயத்தில் ஆரம்பத்தில் இதை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தால் இன்று இந்தளவு உயரமாக இந்தக் கட்டிடம் வளர்ந்திருக்காது, காரணம் முல்லைத்தீவோடு ஒப்பிடும்போது இந்த யாழில் சனத்தொகை பன்மடங்காகும்.
தற்போதைய நிலை ஒரு இடத்தில் விகாரை அமைக்கப்படுமாக இருந்தால் அந்த இடத்தில் சிங்கள மக்கள் வந்தேறப் போகிறார்கள் என்பது நிச்சயம். அவர்களினுடைய திட்டத்தின்படி அந்த விகாரையை சுற்றி 30 சிங்கள குடும்பங்கள் வசிக்க வேண்டும், ஒரு இராணுவ முகாம் அல்லது பொலிஸ் நிலையம் இருக்க வேண்டும். காலப் போக்கில் பாடசாலை ஏனைய அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பார்கள். இதற்கு உதாரணமாக திருகோணமலையில் இறக்கக்கண்டி, புல்மோட்டை பகுதியை கூற முடியும்.
இப்போது கல்லறாவை பகுதியில் இருப்போருக்காக குச்சவெளி திரியாய் பகுதியில் சட்ட விரோத சிங்கள குடியேற்றங்கள் நடந்ததவண்ணம் உள்ளது. கல்லறாவையில் சிங்கள பாடசாலை ஒன்றுக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகிறது.
சில சந்தர்பங்களில் நாமும் தவறிழைத்துவிட்டு அரசியல்வாதிகளை சாடுகிறோம். வெடுக்குநாறி மலை சிவலிங்க பிரதிஷ்டையை ஒரு குழு விமர்சனம் செய்து, மறுபுறம் தையிட்டியில் போராடுவோரை இன்னுமொரு குழு விமர்சனம் செய்கிறது. இவை அனைத்தும் நமது இயலாமையின் வெளிப்பாடே, ஒன்றாக வழிநடத்த ஒரு தமிழ் தலைமை இல்லாததே. இனியும் இதற்கு சாத்தியம் இல்லையென்பது ஒரு பெரும் பின்னடைவு.
திருகோணமலை பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் புத்தர் சிலை இன்று வரை சட்ட விரோதமானது எனவும் அதனை அகற்றுமாறும் அந்த நேரத்திலேயே உத்தரவிடப்பட்டது, ஆயினும் அப்போது இருந்த பொலிஸ் உயரதிகாரி இதை அகற்ற முற்பட்டால் இனங்களுக்கிடையில் வன்முறை வெடிக்கும் அந்தப் பொறுப்பை தாங்கள் ஏற்க முடியாது என கூறி இன்று வரை புத்தர் வளர்ந்துகொண்டு போகிறார். இப்போது சிங்கள மயமாக்கல் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது, எவர் ஆட்சிக்கு வந்தாலும் நாம் நினைப்பதுவே சட்டம் என பெளத்த துறவிகள் ஒரு தீ.வி.*வாத போக்குடன் இருக்கும் இந்த காலகட்டத்தில் தையிட்டி விகாரையை அகற்றுவார்கள் அல்லது பணிகளை இடை நிறுத்துவார்கள் என நினைப்பது தவறானது.
தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்ந்து அழுத்தங்களை கொடுக்கக்கூடியதாக அமைய வேண்டும், சிங்களை குடியேற்றங்களுக்கு இடமளிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
ஆறிய கஞ்சி பழங் கஞ்சி

