பொலிஸ் உத்தியோகத்தரான யாழ் சாவகச்சேரி கஜீவன் விபத்தில் இறந்தது எப்படி?
கொடிகாமம் எருவன் பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்திருந்தார். அவருடன் பயணித்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் சிறிய காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பருத்தித்துறை – கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு (25) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 25 வயதான கோ.கஜீபன் ஆவார். இவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
இவர் முன்னர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்.பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று வழக்கொன்றில் சாட்சியமளிக்க வந்த பின்னர், நெல்லியடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நண்பரான மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றார். அப்போது எதிரே வந்த வாகனம் அதிக வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டு வந்துள்ளது. எதிரே வாகனம் வந்த போதும் டிம் லைட்டை ஒளிர விடவில்லை.
தலைக்கவசம் அணிந்து, கண்ணாடியை மூடியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்,அதிக வெளிச்சத்தால் வீதியை சரியாக கணிக்க முடியாமல் போயுள்ளது. அந்த இடத்தில் வீதி வளைந்த போதும், அவர் நேராக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார்.
பின்னாலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர், அந்த இடம் வீதி வளைவு என பின்னாலிருந்து சத்தமிட்ட போதும், கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து நிகழ்ந்து விட்டது.
எதிரேயிருந்த காணிக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்துள்ளது. முட்கம்பி வேலியை அறுத்துக் கொண்டு காணிக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில், அதை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடலில் காயங்கள் தென்படவில்லை. எனினும், மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறியிருந்தது.கழுத்தின் உட்பகுதி பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.
விபத்துத் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

