இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி !
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெறவில்லை. பெரும்பாலும் இன்று புதன்கிழமையும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என்றே தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு மீண்டும் கூடி விசாரணைகளை நடத்தினால் தான் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டேன் என கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த நிலையிலேயே நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் குறித்த தெரிவுக்குழுவின் விசாரணை நடைபெற்ற நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தலைமையில் தெரிவுக்குழுவின் விசாரணை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.இதில் காத்தான்குடி சம்மேளனத்தின் பள்ளிவாசல் பிரதிநிதிகள் நேற்றைய தினம் சாட்சியமளித்திருந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி நேற்றைய தினம் பாராளுமன்றத் தெரிவுக்குழு கூடியதன் காரணமாக ஜனாதிபதி நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தை தவிர்த்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வௌ்ளிக்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமித்துள்ளதாகவும் எனவே தெரிவுக்குழுவின் விசாரணைகள் அவசியமற்றது என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று வௌ்ளிக்கிழமை உயர் பொலிஸ் அதிகாரிகளின் கூட்டமொன்றை நடத்தியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்று கோரியிருந்தார். இந்த நிலையில் தெரிவுக்குழு தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியிருந்தபோதிலும் நேற்றைய தினம் தெரிவுக்குழு விசாரணைகள் பாராளுமன்றத்தில் நடைபெற்றன. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெ ளியிட்டிருந்த சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவுக்குழுவை இரத்துசெய்ய முடியாது என்றும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை மறுக்க முடியாது என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தெரிவுக்குழு கூடிய சூழலில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை. சில வேளைகளில் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாவிடின் புதன்கிழமைகளில் நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் செல்லவிருப்பதால் இன்றைய தினமும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என தெரிகிறது.
இதேவேளை நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டத்துக்கான முன் ஆயத்தங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அந்த ஆயத்த நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசவும் ஏற்பாடாகியிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் அமைச்சரவைக் கூட்டத்தை நேற்றைய தினம் ஜனாதிபதி தவிர்த்திருக்கின்றார் என்று தெரியவருகிறது. இது அரசாங்கத்தின் மத்தியில் காணப்படுகின்ற நெருக்கடி நிலைமையை தௌிவாக கோடிட்டுக்காட்டுவதாக காணப்படுகின்றது.