யாழ் அத்தியடியில் குடும்பப் பெண் கலாநிதி அடித்துக் கொலை! நாட்டில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை!!
அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலாநிதி (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமது வீட்டுக்கு , வீட்டு வேலைகளை செய்வதற்கும் , ஆடுகளுக்கு குழைகள் வெட்டவும் என ஒருவர் வருகின்றவர் எனவும் , அவர் நேற்றைய தினமும் வந்திருந்த போது , நான் வீட்டுக்குள் இருந்தேன். அம்மா தான் அவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார். பிறகு இருவரும் வாக்கு வாதப்படுவது கேட்டது, சிறிது நேரத்திற்குள் அம்மா பெரிய சத்தமாக கத்தினார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த போது , அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்நபரை அவ்விடத்தில் காணவில்லை என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது , கொலையானவரின் மகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாவும் , சந்தேகநபர் தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்று உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.
மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு நீண்டதில் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த 47 வயதுடைய நபர் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர், வீட்டில் இருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இக் கொலைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


