யாழில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் விஜயின் வாரிசு பட டிக்கெட்டுகள் ! மக்களே அவதானம்….
யாழ் மாநகர சபையின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாரிசு படத்தின் டிக்கெட் இணையம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள வாரிசு படத்தின் டிக்கெட்டுகள் ஒன்லைன் மூலமாக 3000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. ரதி இவன் மேனேஜ்மென்ட் என்ற முகப்புத்தக பக்கத்தில் இருந்து இது சம்பந்தமான விளம்பரங்கள் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.
இதில் யாழ் நகரில் அமைந்துள்ள செல்லா திரையரங்கில் விஐபி சோக்கான டிக்கெட் ஆன்லைன் மூலமாக 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சாதாரண ரசிகர்களின் ஆசைகளையும் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் முதலீடாக வைத்து இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இது போன்ற செயலில் சிலர் ஈடுபடுவது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.
இது சம்பந்தமாக குறித்த திரையரங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது இதுபோன்ற எந்த ஒரு காட்சியையும் தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை எனவும், இதுபோன்ற விளம்பரங்களை தாங்கள் பிரசுரிக்கவில்லை எனவும், இது தொடர்பாக விற்கப்படும் டிக்கெட்டை கொண்டு தங்கள் திரையரங்குகளில் காட்சியை காண முடியாது என்றும், இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பணத்தை இழந்தால் அதற்கு தாங்கள் பொறுப்பாளிகள் இல்லை எனவும் கூறினர்.
விஐபி டிக்கெட்டுக்கான பதிவை மேற்கொள்வதாக கூறும் விளம்பரத்தில் காணப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் செல்லா திரையரங்க உரிமையாளரின் மைத்துனரின் நேரடி ஏற்பாட்டில் தாம் இயங்குவதாகவும், இதில் உங்களுக்கு சந்தேகம் தேவையில்லை எனவும், 80 வீதமான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும் 20 வீத டிக்கெட்டுகள் தான் கையிருப்பு உள்ளதாகவும் நீங்கள் பயப்படாமல் இதை கொள்வனவு செய்யுங்கள் என கூறினர்.
அத்துடன் முதல் இரண்டு நாட்களும் சாதாரணமாக கவுண்டரில் டிக்கெட் விற்பனை செய்யப்பட மாட்டாது என கூறினர். இது சம்பந்தமாக யாழ் மாநகர சபையை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது பயனளிக்கவில்லை. குறித்த முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட இவ் விளம்பரம் ஆனது போலியானதாக கூட இருக்கலாம். எனவே இதுபோன்ற ஒன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி உங்களது பணத்தை ஏமாறாதீர்கள்.