கொழும்பு பல்கலைகழகத்தில் பயின்று வந்த யாழ் மாணவன் போதைப் பொருளுக்கு அடிமை!! தாயார் தற்கொலை முயற்சி!!
யாழில் உயர்தரத்தில் கற்று சிறப்பு தேர்ச்சி பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று வந்த 22 வயதான மாணவன் ”ஐஸ்” போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் சுயநினைவு குன்றி மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கோலத்தை கண்ட அவனது தாயார் கொழும்பில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இச் சம்பவம் வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாணவனின் தாயாரின் வெளிநாட்டிலுள்ள தங்கையின் வீட்டில் தனது இன்னொரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் நண்பருடன் தங்கியிருந்து கற்று வந்துள்ளார் குறித்த மாணவன். இந் நிலையில் கடந்த இரு மாதங்களாக மாணவன் யாழில் உள்ள தனது பெற்றோர் மற்றும் உறவுகளுடன் தொடர்பு கொள்வதை குறைத்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் மாணவனுக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு எடுக்கும் போது மாணவனின் நண்பனே பல தடவைகள் தொலைபேசியில் பதிலளித்துள்ளார். நண்பன் நித்திரையில் உள்ளார் என சில வேளைகளிலும் நண்பன் தொலைபேசியை வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார் என சில வேளைகளிலும் மாணவனின் நண்பன் பதிலளித்து வந்துள்ளார். மாணவன் பல நாட்கள் பல்கலைக்கழக வகுப்புக்குச் செல்லவில்லை என வேறு நண்பர்கள் மூலம் தகவல் அறிந்து மாணவனின் பெற்றோர் கடந்த வாரம் கொழும்பு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரே தனது மகன் கொடிய ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான விடயம் தெரிந்துள்ளது. மனநலம் குன்றியது போல் மிகவும் கேவலமான நிலையில் அறை மூலையில் தனித்திருந்த குறி்த்த மாணவன் தனது பெற்றோர் வந்திருப்பதை கூட அறியாத நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதே மாணவன் போதைப் பொருளுக்கு அடிமையான விடயம் அறியவந்துள்ளது. மாணவனுடன் கூட இருந்த மாணவனின் நண்பனிடம் இது தொடர்பாக பெற்றோர் கோபத்துடன் கேள்வி கேட்ட போது ”தனக்கு காதல் தோல்வி எனவும் யாழில் உள்ள காதலி தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ஆகவே இது தொடர்பாக தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி அறையை பூட்டியபடி இருப்பதால் தான் அவனது நடவடிக்கையை கண்டு கொள்ளவில்லை” என மாணவனின் நண்பன் பதிலளித்துள்ளார்.
இரு நாட்களாக வைத்தியசாலையில் வைத்து மகனுடன் மல்லுக்கட்டிய நிலையில் மகனை போதை சீர்திருத்த பிரிவில் சேர்க்கும்படி வைத்தியசாலை தெரிவித்து அவரை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவனின் தாயார் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற மாணவனின் தாயார் மற்றும் தந்தை அரச அதிகாரிகளாவார்.
