காணி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி வே.விஜயரட்ணம் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
/div>
யாழ் நகரை அண்மித்த பகுதியில் போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டு, காணி மோசடி இடம்பெற்றிருந்தது. இதனுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைதாகியிருந்தார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, பொலிசார் வழக்கு விசாரணையில் பாரபட்சம் காண்பிப்பதாகவும், இந்த மோசடியில் பலர் தொடர்புபட்டுள்ளதாகவும், மோசடி ஆவணம் தயாரிக்கப்பட்டதென்றால் அதனுடன் தொடர்புடைய சட்டத்தரணி கைது செய்யப்பட்டாரா என கேள்வியெழுப்பியதுடன், பொலிசாரின் விசாரணையில் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, வழக்கு விபரங்களை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிற்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை தொடர்ந்து, வழக்குடன் தொடர்புடைய பலர் கைதாகினர். யாழ் இந்துக்கல்லுாரியின் முன்னாள் அதிபர் நிமலன், சட்டத்தரணி வே.விஜயரட்ணம் உள்ளிட்ட 9 பேர் கைதாகினர்.
இந்த நிலையில், சட்டத்தரணி சார்பில் இன்று பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணி கு.குருபரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சந்தேகநபரான சட்டத்தரணியை பிணையில் விடுவித்தது.




