இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் புலம்பெயந்து வாழும் எங்கள் இந்த தலைமுறை உறவுகளின் மரணத்துக்கு பிறகு நடக்கப் போவது என்ன?
இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளில் புலம்பெயந்து வாழும் எங்கள் இந்த தலைமுறை உறவுகளின் மரணத்துக்கு பின்பு முற்றாக இலங்கை தொடர்புகள் அழிந்துவிடும்.
ஏன் என்றால் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்கள் உறவுகளுடன் முடிவடையும்.
ஊருக்கு பணம் அனுப்புவதும் எங்கள் உறவுகளுடன் முடிவடையும்.
இலங்கைக்கு விடுமுறையில் செல்வதும் எங்கள் உறவுகளுடன் முடிவடையும்.
அப்பப்பா, அம்மப்பா, அம்மம்மா, அப்பம்மா, மாமா, மாமி என்று நேரில் போய் பார்ப்பதும், கோவில் திருவிழாக்களுக்கு போவதும் எங்கள் உறவுகளுடன் முடிவடையும். ஏனெனில் வெளிநாட்டில் இருக்கும் இப்போதைய உறவுகள் பலரும் சில பல சுய நல நோக்கத்திற்காக தமது அடுத்த சந்ததியினரை இலங்கையில் உள்ள தமது உறவுகளின் அடுத்த சந்ததியினருடன் உறவினை ஏற்படுத்தவோ அதை வளர்க்கவோ விரும்புவதில்லை. அப்படியான உறவுகளின் ஆயுளுக்கு பின் அவர்களது பிள்ளைகள் ஏன் இங்கு வருவார்கள்? வந்தாலும் அதன் காரணம், அவர்களின் இலங்கையில் உள்ள சொத்துக்களை விற்கவோ அல்லது அவற்றை பராமரிக்கும் காரணத்துக்காக ஒருவேளை இருக்கலாம், ஆனால் உறவோ அன்போ காரணமாக அவர்கள் இங்கு வர மாட்டார்கள்.
எம் அடுத்த சந்ததி அங்கே வாழ்க்கை துணையை தேடிக் கொள்ளும், இங்கு பணம் அனுப்ப அவர்களுக்கு யாரும் இல்லை, தொலைபேசியில் கதைக்க யாரும் இல்லை, அவர்கள் இங்கு சுற்றுலா வரும் போது ஏதாவது ஹோட்டலில் இருந்து நிலாவரை கிணற்றையும், கீரிமலை கேணியையும், சிகிரியா குன்றையும் என எல்லாற்றையும் இரசித்துவிட்டு ஒரு வேற நாட்டவர் போல் மட்டும் மகிழ முடியும். அதற்கு கூட சந்தர்ப்பம் மிகவும் குறைவு தான், இவ்வளவு விமான பயணம் செய்து இங்கு ஏன் வருவார்கள்? அவர்கள் இருக்கும் நாடுகளிற்கு அருகில் இருக்கும் வேறு நாடுகளுக்கு சுற்றுலா மேற் கொள்வார்கள். எங்கள் உறவுகளுடன் எங்கள் பிறந்த நாடு மறக்கப்படுகிறது.
இப்போது இலங்கை தமிழர்கள் மலேசிய, சிங்கபூர் வாழ் தமிழரை எப்படி பார்கின்றார்களோ அதைப் போலவே தமிழ் இனம் வாழும் ஒரு இடமாக உலகப் படத்தில் இவர்கள் வாழும் நாடுகளை தமது பிள்ளைகளுக்கு காட்டுவார்கள்!
Selvakumar Natkunasingam ❤️
