புதினங்களின் சங்கமம்

திருகோணமலை வீதியில் கோரவிபத்து!! 3 பேர் பலி!!

பார ஊர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியின் சிங்காரகம பகுதியில் குறித்த விபத்து நேற்று மாலை 4 மணிக்கு இடம் பெற்றுள்ளது.

நொச்சியாகம பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே பார ஊர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் நொச்சியாகம பகுதியில் வசித்த ஓரே குடும்பத்தை சேர்ந்த 48 வயதுடைய ராஜபக்ஷ கெதர காமினி , 48 வயதுடைய வனசிங்க ஆராச்சிகே தயவனி மற்றும் 12 வயதுடைய ராஜபக்ஷ கெதர லசித்த ராஜபக்ஷ ஆகியோரே உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தோர்களின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துடன் தொடர்பில் பார ஊர்தியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கும் வீதி விபத்தினால் ஒருவர் வீதம் மரணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.